search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Cup Soccer"

    • அர்ஜென்டினா 18 புள்ளிகளுடன் (6 வெற்றி, 2 தோல்வி) முதலிடத்தில் நீடிக்கிறது.
    • கொலம்பியா 16 புள்ளிகளுடன் (4 வெற்றி, 4 டிரா) 2-வது இடத்தில் உள்ளது.

    பரான்கியா:

    23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2026-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடுகளை தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வாகும்.

    தற்போது தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடக்கின்றன. இதில் தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் 10 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 18 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெறும். 7-வது இடத்தை பெறும் அணி பிளே-ஆப் சுற்றில் மோதும். எஞ்சிய 3 அணிகள் வெளியேறும்.

    இந்த நிலையில் பரான்கியாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் கொலம்பியா, 'நம்பர் ஒன்' அணியும், உலக சாம்பியனுமான அர்ஜென்டினாவை சந்தித்தது. உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்துடன் களம் புகுந்த கொலம்பியா 25-வது நிமிடத்தில் கோல் அடித்தது. அந்த அணியின் யர்சென் மோஸ்கியரா தலையால் முட்டி கோல் அடித்தார். 48-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் நிகோ கோன்சலேஸ் பதில் கோல் திருப்பினார்.

    60-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கொலம்பியா கேப்டன் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் கோலாக்கினார். முடிவில் கொலம்பியா 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. இதன் மூலம் இரு மாதத்துக்கு முன்பு கோபா அமெரிக்கா கால்பந்து இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவிடம் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது. அர்ஜென்டினா அணியில் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி காயம் காரணமாக ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு ஆட்டத்தில் பராகுவே 1-0 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்தது. பராகுவே அணியில் வெற்றிக்குரிய கோலை 20-வது நிமிடத்தில் டியாகோ கோம்ஸ் அடித்தார். தொடர்ந்து தடுமாறி வரும் பிரேசில் அணி முதல் பாதியில் இலக்கை நோக்கி துல்லியமாக ஒரு ஷாட் கூட அடிக்கவில்லை. பிற்பாதியில் வினிசியஸ் அடித்த சில ஷாட்டுகள் தடுக்கப்பட்டு விட்டது. கடந்த 5 ஆட்டங்களில் பிரேசிலுக்கு விழுந்த 4-வது அடி இதுவாகும். அத்துடன் 2008-ம் ஆண்டுக்கு பிறகு பராகுவேயிடம் பிரேசில் தோற்பது இதுவே முதல் முறையாகும். அடுத்த ஆட்டத்தில் சிலியை சந்திக்கிறது.

    இதே போல் பொலிவியா 2-1 என்ற கோல் கணக்கில் சிலியையும், ஈகுவடார் 1-0 என்ற கோல் கணக்கில் பெருவையும் தோற்கடித்தது. வெனிசுலா- உருகுவே இடையிலான ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது.

    இந்த பிரிவில் ஒவ்வொரு அணியும் இதுவரை தலா 8 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. அர்ஜென்டினா 18 புள்ளிகளுடன் (6 வெற்றி, 2 தோல்வி) முதலிடத்தில் நீடிக்கிறது. கொலம்பியா 16 புள்ளிகளுடன் (4 வெற்றி, 4 டிரா) 2-வது இடத்திலும், உருகுவே (15 புள்ளி) 3-வது இடத்திலும், ஈகுவடார் (11 புள்ளி) 4-வது இடத்திலும் உள்ளன. பிரேசில் 10 புள்ளிகளுடன் (3 வெற்றி, ஒரு டிரா, 4 தோல்வி) 5-வது இடத்தில் இருக்கிறது.

    • ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டி 1960-ம் ஆண்டு பிரான்சில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • 2021-ம் ஆண்டு நடந்த போட்டியில் இத்தாலி கோப்பையை வென்றது.

    உலக கோப்பை கால் பந்துக்கு அடுத்து பிரபலம் பெற்றது ஐரோப்பிய கோப்பை (யூரோ) போட்டியாகும். ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டி 1960-ம் ஆண்டு பிரான்சில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஐரோப்பிய கால்பந்து

    4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. இதுவரை 16 தொடர் முடிந்துள்ளன. கடைசியாக 2021-ம் ஆண்டு நடந்த போட்டியில் இத்தாலி கோப்பையை வென்றது.

    17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நாளை (14-ந் தேதி) தொடங்குகிறது. ஜூலை 14 வரை 1 மாதகாலத்துக்கு இந்த திருவிழா நடைபெறுகிறது.

    இதில் 24 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம்:-

    ஜெர்மனி, ஸ்காட்லாந்து, அங்கேரி, சுவிட்சர்லாந்து (குரூப் ஏ), ஸ்பெயின், குரோஷியா, இத்தாலி, அல்பேனியா (பி), சுலோவேனியா, டென்மார்க், செர்பியா, இங்கிலாந்து (சி), நெதர் லாந்து, பிரான்ஸ், போலந்து, ஆஸ்திரியா ( டி), பெல்ஜியம், சுலோவாக்கியா, ருமேனியா, உக்ரைன் (இ ), போர்ச்சுக்கல், செக் குடியரசு, துருக்கி, ஜார்ஜியா (எப்).

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப் படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் நாடுகள் நாக் அவுட் சுற்றுக்கு நுழையும். 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். 2-வது ரவுண்டில் 16 அணிகள் விளையாடும்.

    நாளைய தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜெர்மனி-ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

    26-ந் தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. 29-ந் தேதி நாக் அவுட் சுற்று தொடங்குகிறது. ஜூலை 9 மற்றும் 10-ந் தேதிகளில் அரைஇறுதி ஆட்டங்களும், இறுதிப் போட்டி ஜூலை 14-ந் தேதியும் நடக்கிறது.

    பெர்லின், முனிச், டார்ட்மன்ட், ஸ்டட்கர்ட், ஹம்பர்க் உள்பட 10 நகரங்களில் மொத்தம் 51 போட்டிகள் நடக்கிறது. இதனால் கால்பந்து ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருக்கின்றனர்.

    • 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிசுற்றுப் போட்டிகள், தற்போது நடைபெற்று வருகின்றன.
    • கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற இந்த போட்டியில், 37-ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் லல்லியன் சுவாலாசாங்டேஸ் கோல் அடித்தார்.

    2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிசுற்றுப் போட்டிகள், தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், இரண்டாவது கட்ட தகுதிசுற்றுப் போட்டியில், இந்தியா மற்றும் கத்தார் அணிகள் மோதின.

    கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற இந்த போட்டியில், 37-ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் லல்லியன் சுவாலாசாங்டேஸ் கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தில் இந்தியா முன்னிலை பெற்றது.ஆனால் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில், கத்தாருக்கு சர்ச்சைக்குரிய வகையில் கோல் வழங்கப்பட்டது. இந்தியாவின் கோல் போஸ்ட்டிற்கு வெளியே, எல்லைக் கோட்டை தாண்டி சென்ற பந்தை உள்ளே இழுத்து, கத்தாரின் யூசுப் அய்மன் கோல் அடித்தார். கோட்டைத் தாண்டினால் பந்து OUT OF PLAY ஆகும். இருப்பினும் கத்தாருக்கு கோல் வழங்கப்பட்டது.

    இந்த சர்ச்சைக்குரிய கோல் காரணமாக, ஆட்டம் சமன் ஆன நிலையில், 85-ஆவது நிமிடத்தில் கத்தார் 2வது கோலை அடித்தது. இதன் பின்னர் கோல் அடிக்க முடியாத இந்தியா, 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து, உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள இந்திய ரசிகர்கள், சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த சர்ச்சைக்குள்ளான கோல் குறித்து விசாராணை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கால்பந்து அணி தலைவரான கல்யான் சௌபே, FIFA தலைவர், AFC நடுவர்கள், AFC போட்டி தலைவர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.

    • கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுகிறார்.
    • இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியா-குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்துடன் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுகிறார்.

    23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றுக்கான 2-வது ரவுண்டு ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. கத்தார், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகியவை இந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

    இந்த போட்டி தொடரில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, குவைத்தை எதிர்கொள்கிறது.

    இதில் இந்தியா வெற்றி பெற்றால் உலகக் கோப்பை 3-வது ரவுண்டுக்கு முதல் முறையாக முன்னேறும் வாய்ப்பு உருவாகும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அதே நேரத்தில் ஏற்கனவே இந்தியாவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் உதை வாங்கியிருந்த குவைத் அணி அதற்கு பதிலடி கொடுக்க கடுமையாக முயற்சிப்பார்கள்.

    இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி இந்த ஆட்டத்துடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவரை வெற்றியுடன் வழியனுப்பும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் வரிந்து கட்டுவார்கள் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

    39 வயதான சுனில் சேத்ரி இந்திய அணிக்காக அதிக கோல்கள் (94 கோல்) அடித்தவர் ஆவார். போட்டி குறித்து அவர் கூறுகையில் 'இது என்னை பற்றியோ எனது கடைசி ஆட்டத்தை பற்றியோ கிடையாது. எனது ஓய்வு குறித்து நான் மீண்டும், மீண்டும் பேச விரும்பவில்லை. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதே எங்களது முதன்மையான நோக்கம். அது எளிதாக இருக்க போவதில்லை. ஆனால் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    எங்களுக்கு ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவு இருக்கும் என்று நினைக்கிறேன். நாளைய (இன்று) ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றால் ஏறக்குறைய 3-வது சுற்றுக்கு தகுதி பெற்று விடுவோம். நான் ஓய்வு பெற்றாலும், இந்திய அணியின் அடுத்த சுற்று ஆட்டங்கள் எங்கு நடந்தாலும் நேரில் சென்று ஊக்கப்படுத்துவேன்' என்றார்.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் கருத்து தெரிவிக்கையில், 'எனது ஒட்டுமொத்த விளையாட்டு மற்றும் பயிற்சியாளர் வாழ்க்கையில் இது மிகப்பெரிய தருணமாகும்.

    150 கோடி இந்தியர்களை மகிழ்ச்சி அடைய செய்ய எங்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும். அதனை நிறைவேற்ற நாங்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இதில் நாங்கள் வெற்றி பெற்றால் அது இந்திய கால்பந்தின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.

    இந்திய அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வி என 4 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், குவைத் 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வி என 3 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

    • கடந்த உலக கோப்பையை விட 16 நாடுகள் கூடுதலாகும்.
    • உலக கோப்பையில் விளையாடும் 48 அணிகளும் 12 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன.

    கிசாலி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்று உலக கோப்பை கால்பந்து போட்டியாகும்.

    ஒலிம்பிக் போட்டியை போலவே உலக கோப்பை கால்பந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.

    கடைசியாக உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த ஆண்டு கத்தாரில் நடந்தது. கத்தாரில் நடந்த 22-வது உலக கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா சாம்பியன் பட்டம் பெற்றது. மெஸ்சி தலைமையிலான அந்த அணி இறுதிப் போட்டியில் பிரான்சை வீழ்த்தியது.

    23-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. 2026-ம் ஆண்டு ஜுன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

    இந்த உலக கோப்பை போட்டியில் மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கின்றன. கடந்த உலக கோப்பையை விட 16 நாடுகள் கூடுதலாகும். கத்தார் உலக கோப்பை 32 அணிகள் பங்கேற்றன.

    உலக கோப்பையில் விளையாடும் 48 அணிகளும் 12 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம் பெற்று இருக்கும். முதலில் 16 பிரிவாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது ஒரு பிரிவில் 3 நாடுகள் இடம் பெறுவது என்று திட்டமிடப்பட்டது.

    தற்போது சர்வதேச கால்பந்து சம்மேளனம் அதை மாற்றி 12 பிரிவாக பிரிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மொத்தம் 104 ஆட்டங்கள் நடைபெறும். கத்தார் உலக கோப்பையைவிட 40 போட்டிகள் கூடுதலாகும்.கடந்த உலக கோப்பையில் மொத்தம் 64 ஆட்டங்கள் நடத்தப்பட்டது.

    • வழி நெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • சாலைகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    பியூனஸ் அயர்ஸ்:

    கத்தாரில் நடந்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது.

    தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரம் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை உச்சி முகர்ந்தது.


    இந்த நிலையில் உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியினர் தாயகம் திரும்பினார்.அந்த வகையில் நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்சில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வழி நெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலைகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தேசிய வரலாற்று நினைவு சின்ன வளாகத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வெற்றியை கொண்டாடினர். மேலே இருந்து பார்க்கும் போது இது மக்கள் கூட்டம் தானா என சந்தேகம் படும் அளவில் இருந்தது.


    கிட்டத்தட்ட 40 லட்சம் மக்கள் வரவேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அது சம்பந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • வழி நெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • சாலைகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    பியூனஸ் அயர்ஸ்:

    கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் பெற்றது. மிகவும் பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி பிரான்சை வீழ்த்தியது.

    அர்ஜென்டினா உலக கோப்பையை வெல்ல கேப்டனும், நட்சத்திர வீரரு மான லியோனல் மெஸ்சி முக்கிய பங்கு வகித்தார். அவர் 7 கோல்கள் அடித்து முத்திரை பதித்தார். அதோடு 3 கோல்கள் அடிக்க உதவி புரிந்து உள்ளார்.

    உலக கோப்பையை வென்றதன் மூலம் 35 வயதான மெஸ்சியின் கனவு நனவாகியுள்ளது. 5-வது உலக கோப்பையில் தான் அவரால் இதை சாதிக்க முடிந்தது. இதற்கு முன்பு 2014-ல் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி யுடன் தோற்று கோப்பையை இழந்தார். தற்போது இறுதி போட்டியில் பிரான்சை தோற்கடித்து மெஸ்சி தனது உலக கோப்பை கனவை நனவாக்கி கொண்டார்.

    அர்ஜென்டினா 3-வது முறையாக உலக கோப் பையை வென்றது. இதற்கு முன்பு 1978, 1986-ம் ஆண்டு களில் அந்த அணி சாம்பி யன் பட்டம் பெற்று இருந்தது. மரடோனா வழி யில் மெஸ்சி தன்னை இணைத்துக் கொண்டார். உலக கோப்பையை வென்ற தன் மூலம் கால்பந்தின் அனைத்துக் கால கட்டத் துக்கும் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதை மெஸ்சி நிரூபித்து விட்டார்.

    36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா உலக கோப்பையை வென்றதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தலைநகர் பியுனஸ் அயர்சில் ரசிகர்கள் திரண்டு வந்து தங்கள் நாட்டு கால்பந்து அணியின் வெற்றியை மிகவும் உற்சாகத்துடன் தொடர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.

    அங்குள்ள மைய சதுக்கத்தில் அர்ஜென்டினா ரசிகர்கள் ஒன்று கூடினார்கள். திரும்பிய பக்கம் எல்லாம் தலைகள் தெரியும் அளவுக்கு மக்கள் அலைகடலென திரண்டு இருந்தனர். தங்கள் நாட்டுக்குரிய பாடலை பாடியவாறு உற்சாகம் அடைந்தனர். மெஸ்சி, மெஸ்சி என்று கோஷம் விண்ணை பிளக்கும் வகையில் இருந்தது. வெற்றி கொண்டாட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியினர் இன்று தாயகம் திரும்பினார்.அந்த வகையில் நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்சில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழி நெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலைகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி 2-வது இடத்தை பிடித்த பிரான்ஸ் அணி தனது நாட்டுக்கு திரும்பியது. பாரீஸ் நகரில் கால்பந்து வீரர்களை அந்நாட்டு ரசி கர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இறுதி ஆட்டத்தில் ஹாட்ரிக் கும், அதிக கோல்களை (8) அடித்து தங்க ஷூ வென்ற வருமான எம்பாப்வேயை வாழ்த்தி ரசிகர்கள் கோஷ மிட்டனர்.

    • கேரளாவில்தான் அதிக அளவில் உலக கோப்பை கால்பந்து போட்டியை ரசித்தனர்.
    • கொச்சியைச் சேர்ந்த சச்சின்-அதிரா ஜோடிதான் கால்பந்து வீரர்களின் ஜெர்சியை அணிந்து திருமணம் செய்து கொண்டனர்.

    கொச்சி:

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த நவம்பர் மாதம் 20-ந்தேதி கத்தாரில் தொடங்கியது. நேற்று முன்தினம் இறுதிப் போட்டி நடைபெற்றது.

    இதில் தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள அர்ஜென்டினா அணி ஐரோப்பாவைச் சேர்ந்த பிரான்சை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது.

    உலக கோப்பை போட்டியையொட்டி உலகம் முழுவதும் கால்பந்து ஜுரம் கடந்த ஒரு மாதமாக பரவி இருந்தது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் உலக கோப்பை போட்டியை ரசித்தனர். தங்களுக்கு விருப்பமான அணி வீரர்களின் ஜெர்சியை அணிந்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    இந்தியாவை பொறுத்தவரை அர்ஜென்டினாவுக்கும், மெஸ்சிக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அர்ஜென்டினா வெற்றியை வெகுவாக கொண்டாடினார்கள்.

    கேரளாவில்தான் அதிக அளவில் உலக கோப்பை கால்பந்து போட்டியை ரசித்தனர். மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் பிரமாண்ட திரையில் உலக கால்பந்து போட்டியை பார்த்தனர்.

    இந்த நிலையில் உலக கோப்பை இறுதிப் போட்டி நடந்த தினத்தில் கேரள ஜோடி ஒன்று அர்ஜென்டினா, பிரான்ஸ் வீரர்களின் ஜெர்சியை அணிந்து திருமணம் செய்தது தெரிய வந்துள்ளது.

    கொச்சியைச் சேர்ந்த சச்சின்-அதிரா ஜோடிதான் கால்பந்து வீரர்களின் ஜெர்சியை அணிந்து திருமணம் செய்து கொண்டனர். சச்சின் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சியின் தீவிர ரசிகர். அதிரா பிரான்ஸ் வீரர் எம்பாப்வேயின் தீவிர ஆதரவாளர். இதனால் இருவரும் திருமணத்துக்கான புதிய ஆடைகளின் மேல் கால்பந்து வீரர்களின் ஜெர்சியை அணிந்து மணம் புரிந்து கொண்டனர்.

    அவர்களது திருமண தேதி டிசம்பர் 18 என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் உலக கோப்பை இறுதிப் போட்டி நடந்ததால் மணமக்கள் மெஸ்சி, எம்பாப்வே டி ஷர்டுடன் திருமண கோலத்தில் இருந்தனர்.

    மெஸ்சிக்கு கேரளாவில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அர்ஜென்டினா உலக கோப்பையை வென்றால் 1000 பேருக்கு இலவச பிரியாணி வழங்கப்படும் என்று திருச்சூரில் ஓட்டல் உரிமையாளர் ஒருவர் வாக்குறுதி அளித்தார். அதன்படி அவர் முதலில் வந்த ஆயிரம் பேருக்கு பிரியாணியை இலவசமாக வழங்கினார்.

    *** மெஸ்சி (அர்ஜென்டினா), எம்பாப்வே (பிரான்ஸ்) ஜெர்சியுடன் திருமணம் செய்த கேரள ஜோடியை படத்தில் காணலாம்.

    • தோல்வியால் ஒரு சில இடங்களில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
    • தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை கைப்பற்ற முடியாமல் போனதால் பிரான்ஸ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    உலக கோப்பை இறுதி போட்டியில் பிரான்ஸ் தோற்றதால் அந்நாட்டில் சோகம் நிலவியது. தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை கைப்பற்ற முடியாமல் போனதால் பிரான்ஸ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்த தோல்வியால் ஒரு சில இடங்களில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

    அதே நேரத்தில் தங்கள் நாட்டு வீரர்கள் ஆட்டம் சிறப்பாக இருந்ததாக பிரான்ஸ் ரசிகர்கள் பலர் தெரிவித்தனர்.

    • ஒரே இடத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு
    • கால்பந்து ரசிகர்கள் ஆரவாரம்

    அரக்கோணம்:

    உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி கத்தாரில் அர்ஜென்டினா பிரான்ஸ் கிடையே மிகவும் பரபரப்பாக நடைபெற்றது.

    இந்தப் போட்டியை காண அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் கால்பந்து ரசிகர்களுக்காக பெரிய திரை அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    இந்த ஒளிபரப்பின் போது இரு அணிகளும் சம பலமுடன் விளையாடி 3.3 என்ற கோள் கணக்கில் ஆட்டம் நிறைவுற்ற நிலையில் கூடுதல் நேரத்திலும் இரு அணியினரும் கோல் அடித்து சமநிலை அடைந்தனர். அதனை தொடர்ந்து பெனால்டி ஷூட்அவுட் முறையில் அர்ஜென்டினா வீரர்கள் கோல் அடித்து வெற்றி பெற்றனர்.

    அர்ஜென்டினாவின் வெற்றியை அரக்கோணம் கால்பந்து ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடினர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கால்பந்து போட்டி நேரடி ஒளிபரப்பை பெரிய திரையில் கண்டு மகிழ்ந்து ஆரவாரம் செய்தனர்.

    • அரைஇறுதியில் 0-2 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் பணிந்தது.
    • குரோஷியா அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் மொராக்கோவுடன் கோலின்றி டிரா கண்டது.

    தோகா:

    கத்தாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நாளை இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினாவை சந்திக்கிறது. முன்னதாக இன்று (சனிக்கிழமை) கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரைஇறுதியில் தோல்வி கண்ட குரோஷியா-மொராக்கோ அணிகள் சந்திக்கின்றன.

    அரைஇறுதிக்கு முன்னேறிய ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த முதல் அணி என்ற பெருமையை பெற்ற மொராக்கோ அணி தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ளது. முதலாவது லீக் ஆட்டத்தில் குரோஷியாவுடன் கோலின்றி டிரா செய்த மொராக்கோ அணி பெல்ஜியம், கனடா அணிகளை தோற்கடித்து தனது பிரிவில் (எப்) முதலிடத்தை பிடித்து நாக்-அவுட் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.

    2-வது சுற்றில் ஸ்பெயினுடன் கூடுதல் நேரம் முடிவில் கோலின்றி டிரா செய்த மொராக்கோ அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதுடன், கால்இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை சாய்த்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. அரைஇறுதியில் 0-2 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் பணிந்தது. குரோஷியா அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் மொராக்கோவுடன் கோலின்றி டிரா கண்டது.

    அடுத்த ஆட்டத்தில் கனடாவை வென்றது. அதற்கு அடுத்த ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் கோலின்றி டிரா செய்து தனது பிரிவில் 2-வது இடத்துடன் நாக்-அவுட் சுற்றுக்குள் கால்பதித்தது. 2-வது சுற்றில் ஜப்பானுடன் கூடுதல் நேரத்தில் டிரா (1-1) செய்த குரோஷியா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-1 என்ற கோல் கணக்கில் சாய்த்தது. கால்இறுதியில் பிரேசிலுடன் கூடுதல் நேரம் முடிவில் டிரா (1-1) செய்து பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தது. அரைஇறுதியில் 0-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் சரண் அடைந்தது.

    வலுவான அணிகளை முந்தைய சுற்று ஆட்டங்களில் வீழ்த்தி இருக்கும் இவ்விரு அணிகளும் அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி குறித்து மொராக்கோ அணியின் பயிற்சியாளர் வாலிட் ரெக்ரஜி கூறுகையில், 'இந்த ஆட்டத்தில் மனரீதியாக வலுவாக செயல்படுவது கடினமானதாக இருக்கும். இதுவரை களம் இறங்காத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். 3-வது இடத்தை பிடிக்க கடுமையாக முயற்சிப்போம். இதில் வென்று வெண்கலப்பதக்கத்துடன் தாயகம் திரும்ப விரும்புகிறோம்' என்றார்.

    • பிரான்ஸ் அணி 4-வது முறையாக இறுதி போட்டியில் ஆடுகிறது. 2006-ல் இத்தாலியிடம் தோற்று கோப்பையை பறி கொடுத்தது.
    • அர்ஜென்டினா 36 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது.

    லுசைல்:

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி கத்தாரில் தொடங்கி யது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன.

    கடந்த 2-ந்தேதி லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் நெதர்லாந்து, செனகல் ( குரூப் ஏ ), இங்கி லாந்து , அமெரிக்கா (பி), அர்ஜென்டினா போலந்து (சி), பிரான்ஸ் ஆஸ்திரேலியா ( டி ) , ஜப்பான் , ஸ்பெயின், (இ), மொராக்கோ, குரோஷியா (எப்), பிரேசில், சுவிட்சர்லாந்து (ஜி), போர்ச்சுக்கல், தென் கொரியா ( எச் ) ஆகிய 16 நாடுகள் நாக்அவுட்டான 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

    ஈக்வடார், கத்தார், ஈரான், வேல்ஸ், மெக்சிகோ, சவுதி அரேபியா, துனிசியா, டென்மார்க், ஜெர்மனி, கோஸ்டாரிகா , பெல்ஜியம், கனடா , கேமரூன், செர்பியா, உருகுவே , கானா ஆகிய நாடுகள் முதல் சுற்றி லேயே வெளியேற்றப் பட்டன.

    2-வது சுற்று ஆட்டங்கள் கடந்த 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடந்தது. இதன் முடிவில் நெதர் லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோஷியா, பிரேசில், மொராக்கோ, போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, போலந்து, செனகல், ஜப்பான், தென் கொரியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகியவை 2-வது சுற்றில் வெளி யேறின.

    கால்இறுதி போட்டிகள் கடந்த 9 மற்றும் 10-ந்தேதி நடைபெற்றது. இதன் முடிவில் குரோஷியா, அர்ஜென்டினா, மொராக்கோ , பிரான்ஸ் ஆகிய நாடுகள் அரை இறுதிக்கு முன்னேறின. பிரேசில் , நெதர்லாந்து , போர்ச்சுக்கல் , இங்கிலாந்து ஆகியவை கால்இறுதியில் வெளியேற்றப்பட்டன.

    13-ந்தேதி நடந்த முதல் அரை இறுதியில் அர்ஜென்டினா 3-0 என்ற கணக்கில் குரோஷியாவை யும், 14-ந்தேதி நடந்த 2-வது அரை இறுதியில் பிரான்ஸ் 2-0 என்ற கணக்கில் குரோஷியாவை யும் வீழ்த்தின.

    2 நாள் ஓய்வுக்கு பிறகு 3-வது இடத்துக்கான ஆட்டம் இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. இதில் மொராக்கோ- குரோஷியா அணிகள் மோதுகின்றன.

    உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை ) இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. லுசைல் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா-நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன.

    உலக கோப்பையை 3-வது முறையாக வெல்லப் போவது யார் ? என்று உலகம் முழுவதும் ஆவலு டன் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அர்ஜென்டி னாவும், பிரான்சும் இரண்டு தடவை சாம்பியன் பட்டம் பெற்று இருந்தன.

    அர்ஜென்டினா 1978, 1986 ஆகிய ஆண்டுகளிலும், பிரான்ஸ் 1998, 2018 ஆகிய ஆண்டுகளிலும் உலக கோப்பையை வென்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். சாம்பியன் பட்டம் பெற இரு அணிகளும் கடுமையாக போராடும்.

    அர்ஜென்டினா 36 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. கடைசியாக மரடோனா தலைமையில் 1986-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றது.

    அர்ஜென்டினா அணி 6-வது முறையாக இறுதி போட்டியில் ஆடுகிறது. இதில் 3 முறை தோல்வியை தழுவியது. 1930, 1990, 2014 ஆண்டுகளில் அந்த அணி இறுதி போட்டியில் தோற்று கோப்பையை பறி கொடுத்தது. கடைசியாக 2014-ல் மெஸ்சி தலைமை யிலான அணி ஜெர்மனி யிடம் தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தது.

    அர்ஜென்டினாவின் பலமே மெஸ்சிதான். இந்த போட்டி தொடரில் அவரது ஆட்டம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இன்னும் ஒரே ஒரு ஆட்டத் தில் தனது திறமையை வெளிப்படுத்தினால் உலக கோப்பை கிடைத்துவிடும்.

    35 வயதான மெஸ்சி இந்த உலக கோப்பையில் 5 கோல்கள் அடித்து எம்பாப் வேயுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார். மேலும் அணியின் மற்ற வீரர்கள் கோல் அடிக்க உதவி புரிந்துள்ளார். இதுவரை 3 கோல்கள் அடிக்க உதவி புரிந்துள்ளார்.

    வீரர்களை ஒருங்கிணைத்து செல்வதிலும் மெஸ்சி முக்கிய பங்கு வகித்து வருகிறார். இதே போல அல்வாரெஸ் (4 கோல்கள்), என்சோ பெர்னாண்டஸ், அலெக்சிஸ் மேக் அலிஸ்டர், மொலினா போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

    இது தவிர கோன்சாலோ மான்டியல், அகுனா, டிபால், ஒட்டமன்டி போன்ற சிறந்த வீரர்களும் இருக்கிறார்கள். பிரான்சின் மின்னல் வேக ஆட்டத்தை எதிர் கொள்வது அர்ஜென்டினாவுக்கு சவாலானது. அந்த அணி பின்களத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

    பிரான்ஸ் அணி பின்களம், நடுகளம், முன் களம் என அனைத்து துறையிலும் அபாரமாக இருக்கிறது. மின்னல் வேகத்தில் ஆடுவது அந்த அணியின் கூடுதல் பலமாகும். ஒவ்வொரு பகுதியில் இருக்கும் வீரர்களும் தலை சிறந்தவர்கள்.

    5 கோல்கள் அடித்துள்ள எம்பாப்வே, 4 கோல் எடுத்த ஆலிவர் ஜிரவுட், கிரீன்ஸ்மேன், டெம்ப்ளே, ரேபியாட், கோண்டே, பெர்னாண்டஸ் போன்ற அபாரமாக ஆடும் வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    பிரான்ஸ் அணி தொடர்ந்து 2-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணி இத்தாலி, பிரேசில் அணிகளுடன் இணையும் வேட்கையில் உள்ளது.

    இத்தாலி 1934, 1938 ஆகிய ஆண்டுகளிலும், பிரேசில் 1958, 1962 ஆகிய ஆண்டுகளிலும் உலக கோப்பையை தொடர்ச்சியாக கைப்பற்றியது.

    பிரான்ஸ் அணி 4-வது முறையாக இறுதி போட்டியில் ஆடுகிறது. 2006-ல் இத்தாலியிடம் தோற்று கோப்பையை பறி கொடுத்தது.

    தென் அமெரிக்க கண்டத்தின் வலுவான அணிகளில் ஒன்றான அர்ஜென்டினா தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கிறது. ஐரோப்பா கண்டத்தின் சிறந்த அணியில் ஒன்றான பிரான்ஸ் 4-வது வரிசையில் உள்ளது. இதனால் இறுதிப் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும்.

    ×