என் மலர்
கிரிக்கெட் (Cricket)

உலக கோப்பை கால்பந்தின் மொத்த பரிசு தொகை குறித்த பட்டியல் வெளியீடு- சாம்பியன் அணிக்கு ரூ.342 கோடி
- கால் இறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தலா ரூ.138 கோடி
- 2018-ம் ஆண்டு ரஷியாவில் வழங்கப்பட்ட பரிசு தொகை ரூ.3258 கோடியாகும்.
தோகா:
உலகின் 2-வது மிகப் பெரிய விளையாட்டு திருவிழா, உலக கோப்பை கால்பந்து போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது.
கடைசியாக உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் 2018ம் ஆண்டு நடந்தது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 20-ந் தேதி கத்தாரில் தொடங்குகிறது. டிசம்பர் 18-ந் தேதி வரை 29 நாட்கள் இந்த போட்டி நடக்கிறது. அங்குள்ள 5 நகரங்களில் 8 மைதானங்களில் கால்பந்து திருவிழா நடக்கிறது.
இந்த போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் நேரடியாக தகுதி பெற்று உள்ளது. மீதமுள்ள 31 அணிகளும் தகுதி சுற்று மூலம் தேர்வு பெற்றன.
இந்த 32 நாடுகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வோரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. லீக் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெரும்.
உலக கோப்பை கால்பந்து போட்டியின் பரிசு தொகை விவரம் வெளியாகி உள்ளது. மொத்த பரிசு தொகை ரூ.3586 கோடியாகும். இது கடந்த முறையை விட ரூ.328 கோடி கூடுதலாகும். 2018-ம் ஆண்டு ரஷியாவில் வழங்கப்பட்ட பரிசு தொகை ரூ.3258 கோடியாகும்.
சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.342 கோடி பரிசாக கிடைக்கும். 2-வது இடத்துக்கு ரூ.244 கோடி வழங்கப்படும். 3-வது இடத்துக்கு ரூ.219 கோடியும், 4-வது இடத்துக்கு ரூ.203 கோடியும் கிடைக்கும்.
கால் இறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தலா ரூ.138 கோடியும், 2 வது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.105 கோடியும், லீக் சுற்றோடு வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ.73 கோடியும் பரிசாக வழங்கப்படும்.






