search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி- இலங்கை 104 ரன்னில் சுருண்டது
    X

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி- இலங்கை 104 ரன்னில் சுருண்டது

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 104 ரன்னில் சுருண்டது. #NZvSL

    கிரைஸ்ட்சர்ச்:

    இலங்கை-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி கிரிக்கெட் போட்டி கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 178 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. சவுத்தி அதிகபட்சமாக 68 ரன் எடுத்தார். லக்மல் 5 விக்கெட்டும், குமாரா 3 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 88 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. 90 ரன்கள் பின்தங்கிய நிலை கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது.

    நியூசிலாந்தின் வேகப்பந்து வீரர் போலட்டின் அதிரடியான பந்து வீச்சால் இலங்கை அணி நிலைகுலைந்தது. அவர் 15 பந்துகளில் 4 ரன் கொடுத்து இலங்கை அணியின் எஞ்சிய 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதில் 4 வீரர்கள் பேரைரா, லக்மல், சமிரா, குமார ‘டக்அவுட்’ ஆனார்கள்.

    அவர் வீசிய 4-வது பந்தில் சில்வா (21 ரன்) ஆட்டம் இழந்தார். 5-வது பாலில் பவுண்டரி கொடுத்தார். அடுத்த பந்தில் ரன் கொடுக்கவில்லை. அதற்கு அடுத்த 2 ஓவர்களில் அவர் 3 விக்கெட்டையும், 2 விக்கெட்டையும் ரன் கொடுக்காமல் கைப்பற்றினார்.

    போலட்டின் அதிரடியான பந்து வீச்சில் இலங்கை அணி 41 ஓவர்களில் 104 ரன்னில் சுருண்டது. மேத்யூஸ் 33 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    74 ரன்கள் முன்னிலையில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. தொடக்க வீரர்கள் ராம்டாம், லாதம் அரைசதம் அடித்தனர். ராவல் 76 ரன்னில் ஆட்டம் இழந்தார். #NZvSL

    Next Story
    ×