search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வாக்களிக்க வேண்டாம்- வயநாடு மக்களிடம் வலியுறுத்திய மாவோயிஸ்டுகள்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வாக்களிக்க வேண்டாம்- வயநாடு மக்களிடம் வலியுறுத்திய மாவோயிஸ்டுகள்

    • மாவோயிஸ்டுகள் வந்த தகவலை அறிந்த வனத்துறையினர் கம்பமலை பகுதிக்கு சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.
    • மாவோயிஸ்டுகள் கம்பமலை கிராமத்திற்கு துப்பாக்கியுடன் சென்று பொதுமக்களை சந்தித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் கண்ணூரில் உள்ள வனப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருந்து வருகிறது. அவர்கள் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமப் பகுதிக்குள் அவ்வப்போது வந்து செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மானாந்தவாடி பகுதியில் உள்ள வன அலுவலகத்திற்குள் ஆயுதங்களுடன் அதிரடியாக புகுந்த மாவோயிஸ்டு கும்பல், அங்கிருந்த ஊழியர்களை மிரட்டியது. மேலும் அலுவலகத்தை அடித்து உடைத்து சூறையாடியது.

    இந்த சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்குள்ள வனப்பகுதிகள் மட்டுமின்றி தமிழக வனப்பகுதிகளிலும் மாவோயிஸ்டு வேட்டை நடத்தப்பட்டது. மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வயநாடு மாவட்டத்திற்குட்பட்ட கம்பமலை பகுதிக்குள் இன்று காலை 4 மாவோயிஸ்டுகள் புகுந்தனர். துப்பாக்கியுடன் வந்த அவர்களை பார்த்த கம்பமலை பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்களை பார்த்து வருகிற மக்களவை தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று மாவோயிஸ்டுகள் வலியுறுத்தினர்.

    மேலும் அரசுக்கு கோஷங்களும் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களிடம் தங்களது கருத்துக்களை வெகுநேரம் தெரிவித்தப்படி இருந்த மாவோயிஸ்டுகள் பின்பு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

    மாவோயிஸ்டுகள் வந்த தகவலை அறிந்த வனத்துறையினர் கம்பமலை பகுதிக்கு சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் துப்பாக்கியுடன் வந்த மாவோயிஸ்டுகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் மாவோயிஸ்டுகள் கம்பமலை கிராமத்திற்கு துப்பாக்கியுடன் சென்று பொதுமக்களை சந்தித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அந்த வீடியோ காட்சியில் மாவோயிஸ்டுகள் 4 பேரின் முகமும் தெளிவாக தெரிகிறது.

    அதன் மூலம் மாவோயிஸ்டுகள் 4 பேர் யார்? என்பதை வனத்துறையினர் அடையாளம் கண்டு உள்ளனர். அதன் அடிப்படையில் கிராமத்துக்குள் வந்த மாவோயிஸ்டுகளை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×