search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்தியிடம் 3வது நாளாக இன்றும் விசாரணை நடத்துகிறது அமலாக்கத்துறை
    X

    பிரியங்கா காந்தி          ராகுல்காந்தி

    ராகுல் காந்தியிடம் 3வது நாளாக இன்றும் விசாரணை நடத்துகிறது அமலாக்கத்துறை

    • உண்மையை சிறையில் அடைக்க முடியாது என காங்கிரஸ் கருத்து
    • ஊழல் வழக்கில் நடவடிக்கை எடுக்கும் போது, ​காங்கிரஸ் நாடகம் நடத்துவதாக பாஜக புகார்.

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 2வது நாளாக 11 மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணை நடத்தினர். காலையில் சுமார் நான்கு மணி நேர விசாரணைக்கு பிறகு, மதியம் 3:30 மணியளவில் அவருக்கு ஒரு மணி நேரம் ஓய்வு அளிக்கப்பட்டது. இதை அடுத்து அவர் வீட்டுக்குச் சென்றார்.

    மாலை 4:30 மணியளவில் அவர் மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார்.நேற்று விசாரணைக்கு ராகுல் ஆஜரானபோது மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அவரது சகோதரி பிரியங்காவும் வந்திருந்தார். விசாரணை முடிந்து நேற்றிரவு 11.30 மணியளவில் அமலாக்க இயக்குநரக அலுவலகத்தில் இருந்து ராகுல் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் இன்றும் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

    முன்னதாக நேற்று டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் மற்றும் மத்திய டெல்லியைச் சுற்றி போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    தடையை மீறியதாக கே.சி.வேணுகோபால், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாணிக் தாகூர், ரந்தீப் சுர்ஜேவாலா, ஜெய்ராம் ரமேஷ் உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள், தலைவர்கள், தொண்டர்கள் என மொத்தம் 217 பேர் நேற்று கைது செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இரவு அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதைக் காட்டுவதற்காக சாலைகளை காங்கிரஸ் தலைவர்கள் மறிப்பதாக பாஜக குற்றம் சாட்டி உள்ளது.

    ஊழல் வழக்கில் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்கும் போது, ​​காங்கிரஸ் இது போன்ற நாடகம் நடத்தி சாலை மறியல் செய்கிறது என்றும், அக்கட்சி தனது தலைவர்களை சட்டத்திற்கு மேலாக கருதுகிறது என்றும் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறினார்.

    பொய் பணமோசடி வழக்கின் மூலம் காந்தி குடும்பத்தின் நம்பகத்தன்மையை அழித்து, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த பாஜக சதி செய்வதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.

    ராகுல்காந்தியின் அரசியலைக் கண்டு மத்திய அரசு பயப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார். இந்த முழு நடவடிக்கையும் சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு விரோதமானது, இது பிரதமரின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    அவர்கள் எங்களை சிறையில் அடைக்க முடியும், ஆனால் அவர்களால் உண்மையை சிறையில் அடைக்க முடியாது என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால். உண்மைக்கான போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளார்.

    Next Story
    ×