என் மலர்tooltip icon

    இந்தியா

    • தனது கடைசி நாட்களை அங்கேயே கழித்த அவர் சமீபத்தில் இறந்தார்.
    • தனது தாத்தாவின் வீட்டை சுத்தம் செய்யும் போது, ​​குப்பைத் தொட்டியில் பங்குச் சான்றிதழ்கள் கிடைத்துள்ளன.

    குஜராத்தில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டத்தின் உனா கிராமத்தைச் சேர்ந்த சவ்ஜி படேல், டையூவில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராக பணியாற்றினார்.

    சவ்ஜி படேலின் தந்தைக்கு அவரது சொந்த கிராமத்தில் ஒரு வீடு இருந்தது. வயதான காலத்தில் தனது சொந்த கிராமத்திற்குச் சென்ற சவ்ஜி படேல், தனது கடைசி நாட்களை அங்கேயே கழித்த அவர் சமீபத்தில் இறந்தார்.

    இறப்பதற்கு முன்பு தனது பேரன் தனது சொத்திற்கு வாரிசாக இருப்பார் என்று ஒரு உயில் எழுதியிருந்தார்.

    சவ்ஜி படேலின் மகனும் டையூவில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிகிறார். இந்த சூழலில், சவ்ஜி படேலின் பேரன் சமீபத்தில் உனா கிராமத்திற்குச் சென்றார்.

    தனது தாத்தாவின் வீட்டை சுத்தம் செய்யும் போது, குப்பைத் தொட்டியில் பங்குச் சான்றிதழ்கள் கிடைத்துள்ளன. அவற்றை ஆன்லைனில் சரிபார்த்தபோது, அவற்றின் மதிப்பு ரூ. 2.5 கோடி என தெரியவரவே உற்சாகத்தில் மூழ்கினார்.

    ஆனால் இதை அறிந்த இளைஞனின் தந்தையும் தனது தந்தையின் பங்கில் தனக்கு தான் உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.

    தனது தாத்தா முழு சொத்தையும் தனக்கு உயில் எழுதிக் கொடுத்ததால், இந்தப் பங்குகளும் தன்னுடையவை என்று பேரன் வாதிட்டார்.

    பங்குகளின் உரிமைக்காக தந்தை மற்றும் மகன் இருவரும் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. 

    • பங்களாவின் கழிவறையில் தங்க முலாம் பூசப்பட்ட மலத்தொட்டிகள் இருப்பதாவதும் பாஜக மேடை தோறும் பிரசாரம் செய்தது.
    • பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியை தோற்கடித்து பாஜக வெற்றி பெற்றது.

    அரவிந்த் கேஜிரிவால் தனது அரசு பங்களாவை புதுப்பிக்கப் பொதுப் பணத்தில் இருந்து ரூ.45 கோடி செலவு செய்து சொகுசு பங்களாவாக மாற்றியதாகவும், அந்த பங்களாவின் கழிவறையில் தங்க முலாம் பூசப்பட்ட மலத்தொட்டிகள் இருப்பதாவதும் பாஜக மேடை தோறும் பிரசாரம் செய்தது.

    இந்நிலையில் பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ள நிலையில் அதன் தலைநகர் சண்டிகரில் அரவிந்த் கெஜ்ரிவால் சொந்த பயன்பாட்டுக்கு 7 நட்சத்திர சொகுசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளதாக  பாஜக குற்றம்சாட்டி உள்ளது.

    பாஜக தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பஞ்சாப் அரசின் பொது நிதியை தனது தனிப்பட்ட ஆடம்பரத் தேவைகளுக்காக கெஜ்ரிவால் தவறாகப் பயன்படுத்துவதாகவும், சண்டிகரில் அவரின் சொந்த பயன்பாட்டுக்கு 2 ஏக்கரில் அமைந்துள்ள அரசின் 7 நட்சத்திர சொகுசு பங்களாவை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பங்களா என்று கூறப்படும் கட்டிடத்தின் படங்களை பாஜக வெளியிட்டுள்ளது.

    பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.  

    • அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக பாஜக எம்.பி.யான கணேஷ் சிங் கிரேனில் மேலே சென்றார்.
    • கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்தச் சம்பவம் அரங்கேறியது.

    சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.

    அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில் 'ஒற்றுமைக்கான ஓட்டம்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக பாஜக எம்.பி.யான கணேஷ் சிங் கிரேனில் மேலே சென்றார்.

    நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்த நிலையில், கணேஷ் சிங் மேலே சென்ற சில வினாடிகளிலேயே கிரேன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சிறிது நேரம் செயலிழந்து நின்றது.

    இதனால் கோபமடைந்த கணேஷ் சிங் கிரேன் கேபினுக்குள் இருந்தபடியே உதவ வந்த ஆப்ரேட்டரைத் தாக்கினார்.  இதன் வீடியோ வைரலாகி வருகிறது.

    கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்தச் சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  

    • தேஜ்பால் சிங் (26) தேசிய அளவிலான கபடி போட்டிகளில் விளையாடி வந்தார்.
    • இரத்த வெள்ளத்தில் கிடந்த தேஜ்பால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    பஞ்சாப் மாநிலம் லூதியாணாவில் இளம்கபடி வீரர் நேற்று பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    நேற்று லூதியாணாவில் உள்ள ஜக்ரான் நகரில், தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடி வந்த கபடி வீரரான தேஜ்பால் சிங் (26) சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர் கூறினர்.

    இந்த சம்பவம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இரத்த வெள்ளத்தில் கிடந்த தேஜ்பால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், மருத்துவமனையை அடைவதற்கு முன்பே அவர் உயிரிழந்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பழைய பகை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். 

    • 5 மாத பெண் குழந்தை ரூஹிக்கு இருமல் மற்றும் சளி இருந்தது.
    • மருந்து குடித்த சில மணி நேரங்களுக்குள், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தது.

    மத்தியப் பிரதேசத்தில் போலி இருமல் மருந்துகளால் அண்மையில் 24 குழந்தைகள் உயிரிழந்தனர்.

    இந்த சர்ச்சை தொடரும் நிலையில் தற்போது ஆயுர்வேத இருமல் மருந்து கொடுக்கப்பட்ட 5 மாத குழந்தையின் உயிரிழந்தது அதிர்ச்சிய ஏற்படுத்தி உள்ளது.

    சிந்துவா மாவட்டத்தில் உள்ள பிச்வா கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் மினோட்டின் 5 மாத பெண் குழந்தை ரூஹிக்கு இருமல் மற்றும் சளி இருந்தது.

    இதன் காரணமாக, அக்டோபர் 27 அன்று உள்ளூர் மருத்துவக் கடையில் கடைக்காரரின் ஆலோசனையின் பேரில் ஆயுர்வேத இருமல் சிரப்பை வாங்கி குழந்தையை அருந்த செய்துள்ளனர்.

    மருந்து குடித்த சில மணி நேரங்களுக்குள், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தது. குழந்தை உடனடியாக உள்ளூர் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

    சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருமல் மருந்து விற்கப்பட்ட மருத்துவக் கடை சீல் வைக்கப்பட்டு, மீதமுள்ள இருப்பு பறிமுதல் செய்யப்பட்டது.

    மருந்து மாதிரிகள் அரசு ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டன. குடும்ப உறுப்பினர்களின் புகாரின் அடிப்படையில் பிச்வா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

    • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சர்தார் வல்லபாய் படேல் சொன்ன கருத்துக்களை உண்மையிலேயே மதித்தால், ஆர்எஸ்எஸ்ஸை தடை செய்ய வேண்டும்.
    • காஷ்மீர் முழுவதையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார், ஆனால் நேரு அவரது முயற்சிகளைத் தடுத்தார் என்று பிரதமர் மோடி பேசினார்.

    இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக இன்று கொண்டாடப்பட்டுகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினமும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இதையொட்டி டெல்லியில் அவர்களின் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, சர்தார் வல்லபாய் படேல், இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி ஆகிய இருவரும்தான் நாட்டின் ஒற்றுமைக்காக மிகக் கடுமையாக உழைத்தார்கள்.

    அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் மரியாதை கொடுத்திருக்கிறது. பாஜகவும் அதன் தலைவர்களும் நேருவுக்கும் படேலுக்கும் இடையில் மோதல் நிலவியதுபோன்ற பொய்யான பிம்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் மிக நல்ல உறவில் இருந்தனர்.

    பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சர்தார் வல்லபாய் படேல் சொன்ன கருத்துக்களை உண்மையிலேயே மதித்தால், ஆர்எஸ்எஸ்ஸை தடை செய்ய வேண்டும்.

    இன்று நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது. இதற்குபாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸுமே காரணமாக இருக்கின்றன. நாட்டில் நடக்கும் அத்தனை தவறுகளுக்கும் இவர்களே மூல காரணமாக உள்ளனர்

    சர்தார் வல்லபாய் படேல், மகாத்மா காந்தி படுகொலைக்குப் பிறகு ஆர்எஸ்எஸ்ஸை ஏன் தடை செய்தார் என்பதற்கான காரணங்களை அவர் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.

    சர்தார் படேல், ஷியாம் பிரசாத் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் காந்தியின் மரணத்தைக் கொண்டாடி, இனிப்புகளை விநியோகித்தனர்' என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ்ஸின் பேச்சுகள் விஷம் நிறைந்தவை" என்று தெரிவித்தார்.

    முன்னதாக, காஷ்மீர் முழுவதையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார், ஆனால் நேரு அவரது முயற்சிகளைத் தடுத்தார் என்று பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில் இதற்கு பதிலடியாக கார்கே பேசியுள்ளார்.   

    1948 மகாத்மா காந்தி படுகொலைக்கு பின் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு பின்பு 1949 இல் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

    • 2017-ல் விமானப்படையின் இரண்டாவது பெண் போர் விமானிகள் பிரிவில் இணைந்தார்.
    • பாகிஸ்தான் ஊடகங்கள் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது ஷிவாங்கி சிங் பிடிபட்டதாகத் தவறான தகவலைப் பரப்பியிருந்தன.

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று முன்தினம் அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    அவருடன் புகைப்படத்தில் இருந்த இந்தியாவின் ஒரே பெண் ரஃபேல் விமானி ஷிவாங்கி சிங் கவனம் பெற்றுள்ளார்.

    அம்பாலா விமானப்படை தளத்தில் உள்ள 'கோல்டன் ஆரோஸ்' என்ற 17வது ஸ்க்வாட்ரனின் ஸ்க்வாட்ரன் லீடராக ஷிவாங்கி சிங் பணியாற்றி வருகிறார்.

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஷிவாங்கி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 2017-ல் விமானப்படையின் இரண்டாவது பெண் போர் விமானிகள் பிரிவில் இணைந்தார்.

    ஆரம்பத்தில் அவர் கடினமான மிக்-21 பைசன் விமானங்களை ஓட்டினார். 2020-ல் ரஃபேல் போர் விமானியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதை இயக்கிய இயக்கிய முதல் இந்தியப் பெண்மணி ஆனார்.

    பாகிஸ்தான் ஊடகங்கள் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது ஷிவாங்கி சிங் பிடிபட்டதாகத் தவறான தகவலைப் பரப்பியிருந்தன.

    இதன் பின்னணியில் ஜனாதிபதி முர்முவுடன் ஷிவாங்கி சிங் எடுத்துக்கொண்ட புகைப்படம் கவனம் ஈர்த்து வருகிறது.

    இன்று டெல்லியில் நடந்த ஆர்ய சமாஜ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "நமது நாட்டின் மகள்கள் போர் விமானங்களை இயக்குகின்றனர்" என சிவிங்கி சிங்கை குறிப்பிட்டு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.  

    • அரசியல் காரணங்களால் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்ய சமாஜத்தின் பங்கிற்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை.
    • இன்று உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பெண் பட்டதாரிகளைக் கொண்ட நாடு இந்தியா என்றார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நடந்த சர்வதேச ஆர்ய மகா சம்மேளனம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்தநாளையும், ஆர்ய சமாஜத்தின் சமூக சேவையின் 150 ஆண்டுகளையும் நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்தநாளையும், சமூகத்திற்கு ஆர்ய சமாஜம் ஆற்றிய 150 ஆண்டுகால சேவையையும் குறிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    சுவாமி தயானந்த சரஸ்வதியின் பாதங்களில் வணங்கி அவருக்கு எனது மரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்துகிறேன். அவரது 200-வது பிறந்தநாள் விழாவைத் தொடங்கி வைக்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது.

    இன்று உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பெண் பட்டதாரிகளைக் கொண்ட நாடு இந்தியா என்று நாம் பெருமையுடன் கூறலாம்.

    துரதிர்ஷ்டவசமாக அரசியல் காரணங்களால் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்ய சமாஜத்தின் பங்கிற்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. ஆர்ய சமாஜம் தேசபக்தர்களின் அமைப்பாக இருந்து வருகிறது.

    இந்தியா முன்னேற வேண்டுமானால் நமது சமூகங்கள் இடையே உள்ள அடிமைத்தனத்தை அகற்ற வேண்டும் என்பதை சுவாமி தயானந்த சரஸ்வதி அறிந்திருந்தார். எனவே, அவர் ஜாதி, தீண்டாமை மற்றும் பாகுபாட்டைக் கண்டித்தார் என தெரிவித்தார்.

    • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் 2009ம் ஆண்டில் காங்கிரசில் சேர்ந்தார்.
    • தெலுங்கானா முதல் மந்திரியாக காங்கிரசின் ரேவந்த் ரெட்டி செயல்பட்டு வருகிறார்.

    ஐதராபாத்:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன். இவர் 2009ம் ஆண்டில் காங்கிரsil சேர்ந்தார். கட்சியின் பல்வேறு பொறுப்புகளிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில முதல் மந்திரியாக ரேவந்த் ரெட்டி செயல்பட்டு வருகிறார்.

    இதற்கிடையே, தெலுங்கானாவில் மாநில மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தெலுங்கானா மந்திரி சபையில் முகமது அசாருதீனுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. நியமன மந்திரியாக முகமது அசாருதீன் இடம்பெற்றுள்ளார். தெலுங்கானா மந்திரியாக அசாருதீன் இன்று பதவியேற்றார்.

    கடந்த 2023 சட்டசபை தேர்தலில் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்ட அசாருதீன் தோல்வி அடைந்தார். தற்போது அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அசாருதீன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.
    • பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    பாட்னா:

    பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 243 தொகுதிகள் கொண்ட சட்ட சபைக்கு இரு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி 121 தொகுதிகளுக்கு நடக்கிறது.

    லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி. எனப்படும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையில் எதிர்க்கட்சிகளின், மகாகட்பந்தன் கூட்டணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இன்று தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது. முதல் மந்திரி நிதிஷ்குமார், பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் வெளியிட்டனர். அதன் விபரம் பின்வருமாறு:

    ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

    பெண்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

    விவசாயிகளுக்கு நிதி உதவி ரூ.6,000ல் இருந்து ரூ.9,000ஆக உயர்த்தப்படும்.

    பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவு வழங்கப்படும்.

    பீகாரில் மேலும் 4 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்படும்.

    இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐஐடியும் அமைக்கப்படும்.

    பீகாரில் பத்து புதிய தொழில் பூங்காக்கள் திறக்கப்படும்.

    பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.10 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

    புதிய வீடுகள், இலவச ரேஷன், 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

    • இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம், ஆதார் புதுப்பித்தல் செயல் முறையை எளிதாக்க உள்ளது.
    • புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) பதிவு முறை நவம்பர் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

    நவம்பர் 1-தேதி முதல் வங்கி வாடிக்கையாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைப் பயனர்களுக்கு பல முக்கியமான நிதி விதிகள் மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன.

    இதில் புதிய வங்கிக் காப்பாளர் விதிகள், ஆதார் புதுப்பித்தலில் எளிமை, எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு கட்டணங்கள், என்.பி.எஸ்-ஐ யு.பி.எஸ்-க்கு மாற்றும் காலக்கெடு நீட்டிப்பு, மற்றும் எளிமையாக்கப்பட்ட ஜி.எஸ்.டி பதிவு முறை ஆகியவை அடங்கும்.

    நவம்பர் 1-ந்தேதி முதல், வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு கணக்கு, லாக்கர் அல்லது பாதுகாப்பு காப்பகப் பொருளுக்கு 4 நபர்கள் வரை காப்பாளர்களாக நியமிக்க முடியும். இந்த நடவடிக்கை அவசர காலங்களில் குடும்பங்களுக்கான நிதி அணுகலை எளிதாக்குவதையும், உரிமை தொடர்பாக எழும் சட்டப் பிரச்சனைகளைக் குறைக்க கொண்டு வரப்படுகிறது. மேலும் காப்பாளர்களைச் சேர்ப்பது அல்லது மாற்றுவது போன்ற நடைமுறையும் எளிமையாக்கப்பட்டுள்ளது.

    எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு மற்றும் கட்டண அமைப்புகளிலும் மாற்றங்கள் காணப்பட உள்ளன. கல்வி தொடர்பான பரிவர்த்தனைகள் மற்றும் ரூ.1,000-க்கு அதிகமாகச் செய்யப்படும் மூன்றாம் தரப்பு கட்டண செயலிகள் மற்றும் வாலெட் டாப்-அப்களுக்கான பரிவர்த்தனைகளுக்கு இனி 1 சதவீத கட்டணம் விதிக்கப்படும்.

    இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம், ஆதார் புதுப்பித்தல் செயல் முறையை எளிதாக்க உள்ளது. இதன் மூலம் ஆவணங்களைப் பதிவேற்றாமல் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை ஆன்லைனிலேயே திருத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் கைரேகைகள் அல்லது கருவிழி ஸ்கேன்கள் போன்ற பயோமெட்ரிக் புதுப்பித்தல்களுக்கு, ஒரு நேரடி ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டியது இன்னும் அவசியமாகும்.

    புதிய கட்டண அமைப்பின்படி, பயோமெட்ரிக் அல்லாத புதுப்பித்தல்களுக்கு ரூ.75-ம், பயோமெட்ரிக் புதுப்பித்தல்களுக்கு ரூ.125-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஓய்வூதியதாரர்களுக்கு தொடர்ந்து தடையின்றி ஓய்வூதியம் பெற, ஓய்வு பெற்றவர்கள் நவம்பர் 1 முதல் 30 வரை தங்கள் வருடாந்திர வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்.பி.எஸ்.) இருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யு.பி.எஸ்.) மாறுவதற்கான காலக்கெடு நவம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) பதிவு முறை நவம்பர் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

    இது பதிவு செயல் முறையை எளிதாக்குவதற்கும், சிறு வணிகங்கள் இணங்குவதைச் சுலபமாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    • செல்போனில் குற்றப்பிரிவு போலீஸ்காரர் என கூறி ஒருவர் வீடியோ காலில் பேசினார்.
    • குண்டு வெடிப்பு மற்றும் கடத்தல் வழக்குகளில் முதியவர் செல்போன் எண் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், ஸ்ரீ நகர் காலனியை சேர்ந்தவர் 78 வயது முதியவர். இவர் மத்திய அரசு ஊழியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவருடைய செல்போனில் குற்றப்பிரிவு போலீஸ்காரர் என கூறி ஒருவர் வீடியோ காலில் பேசினார்.

    குண்டு வெடிப்பு மற்றும் கடத்தல் வழக்குகளில் முதியவர் செல்போன் எண் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சிபிஐயின் நோட்டீஸ்களை காட்டினார். இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் முதியவர் கணக்கில் இருந்து குறிப்பிட்ட வங்கி எண்ணிற்கு ரூ.51 லட்சத்தை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்தார். வழக்கு முடிந்த பிறகு நீங்கள் அனுப்பும் பணத்தை மீண்டும் உங்களுடைய வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்யப்படும் என கூறினார்.

    போலீசார் இந்த வழக்குகளில் தன்னை கைது செய்து விடுவார்களோ என பயந்த முதியவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.51 லட்சத்தை அனுப்பி வைத்தார். பின்னர் டிஜிட்டல் கைது மூலம் தான் ஏமாற்றப்பட்டுதை அறிந்த முதியவர் இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×