search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    மோடி நேரடியாக வந்தால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்- அடம்பிடித்து மறுத்த கிராமவாசி

    கிராமவாசியை மீண்டும் அணுகி, அவரையும், அவரது மனைவியையும் தடுப்பூசி போடுவதற்கு சம்மதிக்க வைப்போம் என்று மாவட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.
    போபால்:

    மத்தியபிரதேச மாநில அரசு, கொரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி இருக்கிறது. அங்கு கிராமந்தோறும் சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்துகின்றனர். மாநிலத்தில் அனைவருக்கும் முதல் ‘டோஸ்’ தடுப்பூசி போட்டு முடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தார் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமமான கிக்கார்வாசுக்கு, ஒரு தடுப்பூசி போடும் சுகாதார குழுவினர் நேற்று முன்தினம் சென்றனர்.

    கிராமத்தினர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்ட நிலையில், ஒரு கிராமவாசி மட்டும் தனது மனைவியுடன் அதற்கு மறுத்துவிட்டார்.

    அப்போது அவரிடம், ‘யார் வந்தால் நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வீர்கள்?’ என்று சுகாதார குழுவினர் கேட்டனர்.

    அதற்கு அந்நபர் ஆரம்பத்தில், ‘ஒரு மூத்த அதிகாரி வந்தால் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’ என்றார்.

    ‘துணைக் கோட்ட மாஜிஸ்திரேட்டு வந்தால் தடுப்பூசி போட்டுக்கொள்வீர்களா?’ என்று குழுவினர் கேட்டபோது, ‘துணைக் கோட்ட மாஜிஸ்திரேட்டிடம் சொல்லி பிரதமர் மோடியை அழையுங்கள். அவர் இங்கு வந்தால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’ என்று கண்டிப்பாக கூறிவிட்டார்.

    பிரதமர் மோடி

    எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் ஒப்புக்கொள்ளாததால் சுகாதார குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டனர். இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

    இந்நிலையில், அந்த கிராமவாசியை மீண்டும் அணுகி, அவரையும், அவரது மனைவியையும் தடுப்பூசி போடுவதற்கு சம்மதிக்க வைப்போம் என்று மாவட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    ஆனால் பிரதமர் மோடி நேரடியாக வராமல் அவர் அதற்கு ஒப்புக்கொள்வாரா என்பது சந்தேகம்தான்!


    Next Story
    ×