search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆன்லைன் மோசடி
    X
    ஆன்லைன் மோசடி

    பெங்களூரு: மர்மநபர்களால் முடக்கப்பட்ட 1,312 வங்கி கணக்குகளில் இருந்து ரூ.48 கோடி மீட்பு

    ஆன்லைனில் மோசடிக்கு உள்ளாகுபவர்கள் உடனடியாக புகார் அளிக்கும் வகையில் சைபர் கிரைம் போலீசார் சார்பில் 112 என்ற உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நேரடியாக நடைபெறும் குற்றச்சம்பவங்கள் குறைந்து உள்ளது. ஆனால் ஆன்லைன் மூலம் நடக்கும் சைபர் குற்றங்கள் அதிகரித்து உள்ளது.

    அதாவது கொரோனா நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரிகளில் படுக்கை பெற்று தருவதாக கூறியும், ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர் வழங்குவதாக கூறியும் கொரோனா நோயாளிகள் உறவினர்களிடம் ஆன்லைன் மூலம் மர்மநபர்கள் பண மோசடி செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    இதுபோல வங்கி மேலாளர், செல்போன் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறியும் மர்மநபர்கள் பண மோசடியை அரங்கேறி வருகின்றனர். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் பதிவாகி உள்ளன. பொதுவாக இது மாதிரியான ஆன்லைன் மோசடியில் பாதிக்கப்படுவர்கள் போலீஸ் நிலையம் சென்று புகார் அளிக்கும் போது, மோசடியில் ஈடுபட்ட நபரை கண்டுபிடிக்க காலதாமதம் ஆகிறது.

    இதனால் ஆன்லைனில் மோசடிக்கு உள்ளாகுபவர்கள் உடனடியாக புகார் அளிக்கும் வகையில் சைபர் கிரைம் போலீசார் சார்பில் 112 என்ற உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கும் போது மோசடிக்கு ஆளாகுபவர்களின் புகார்கள் உடனடியாக பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளனர். 112 என்ற எண்ணுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    இதுபோல கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த மே மாதம் வரை பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் மர்மநபர்களால் முடக்கப்பட்ட 1,312 வங்கிக்கணக்குகளில் இருந்து ரூ.48 கோடியே 24 லட்சத்து 17 ஆயிரத்து 764-ஐ மீட்டு பாதிக்கப்பட்டவர்கள் வங்கிக்கணக்குக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் அறிக்கையின் கீழ் 3,145 வழக்குகள் பதிவாகி உள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

    மோசடியாளர்களிடம் இருந்து ரூ.48 கோடியை மீட்டு உள்ள பெங்களூரு சைபர் கிரைம் போலீசாரை பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் வெகுவாக பாராட்டி உள்ளார்.
    Next Story
    ×