search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைபர் கிரைம்"

    • அலங்காரப் பொருட்கள் கூட ரகசிய கேமராவை கொண்டிருக்கலாம்.
    • கேமராக்கள் பெரும்பாலும் மின்னணு சாதனங்களில் மறைக்கப்படுகின்றன.

    மறைந்திருக்கும் ரகசிய கேமராக்களால் அம்பலமாகும் அபாயம் தற்போது நிறைய இடங்களில் இருக்கிறது. ஓட்டல், ஜவுளிக்கடையில் உடை அணிந்து பார்க்கும் அறை, பொதுவான இடங்களில் உள்ள கழிப்பிடம் போன்றவற்றில் ரகசிய கேமராக்கள் நம்மை கவனித்துக் கொண்டிருக்கலாம்.

    இந்நிலையில், ரகசிய கேமராக்களை கண்டுபிடிப்பது எப்படி என்று பார்க்கலாம். ஓட்டல் அறைக்குள் சென்றதும். முதலில் அறையில் தேவையற்ற பொருட்களைக் கண்டால், உடனடியாக அவற்றை அகற்றச் சொல்லுங்கள். அகற்ற முடியாத பொருள் என்றால், அதுகுறித்து எச்சரிக்கையாக இருங்கள். அலங்காரப் பொருட்கள் கூட ரகசிய கேமராவை கொண்டிருக்கலாம்.

    கேமராக்கள் பெரும்பாலும் மின்னணு சாதனங்களில் மறைக்கப்படுகின்றன. எனவே தங்கும் அறையில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் மீது கவனம் செலுத்துங்கள். ஸ்பீக்கர்கள் அல்லது கேட்கும் சாதனங்களை நன்றாகப் பாருங்கள். இதன் மூலம் கேமராவை எளிதில் மறைக்க முடியும். எனவே இவை அனைத்தையும் சரியாக கவனிக்கவும்.

     குளியலறை கொக்கிகள் அல்லது துணி தொங்கும் கம்பியை சரிபார்க்கவும். கேமராக்களை ஹேங்கர்களிலும் மறைத்து வைக்கலாம். அறையில் உள்ள திரைச் சீலைகளையும் நன்றாகப் பாருங்கள்.

     உங்களுக்கு கண்ணாடியின் மீது சந்தேகம் எழுந்தால் உடனே அதன் அருகில் சென்று உங்கள் விரலை கண்ணாடியில் வைக்கவும். உங்கள் விரலுக்கும், கண்ணாடியின் பிரதிபலிப்பிற்கும் இடைவெளி இருந்தால் அது உண்மையான கண்ணாடி. இடைவெளி இல்லாமல் இரண்டும் ஒட்டி இருந்தால் அது பொய்யான கண்ணாடி அதன் பின்னணியில் ஆபத்து இருக்க வாய்ப்பிருக்கிறது.

    இன்னொன்று சில கேமராக்கள் இரவிலும் செயல்படக்கூடியதாக இருக்கும் அதனால் அதனைச்சுற்றி எல்.ஈ.டி. விளக்குகள் எரிந்துகொண்டு இருக்கும். நீங்கள் அறையின் விளக்கை அணைத்தால் அது தெரிய வாய்ப்பிருக்கிறது.

     இதுதவிர இன்ஃப்ராரெட் கேமராக்களை நீங்கள் உங்கள் கைபேசி கேமராக்கள் வழியாகவே கண்டறியமுடியும். கேமராவை ஆன்செய்து ஒவ்வொரு இடமாக நகர்த்தினால் அங்கு கேமரா இருந்தால் சிவப்பு நிற விளக்கு எரியும். அதை வைத்து கண்டறியலாம். ரிமோட்டின் மேல் பகுதியிலுள்ள விளக்குபோன்ற பகுதிக்கு முன் செல்போன் கேமராவை வைத்து படமெடுத்தபடியே எந்த பட்டனையாவது அழுத்தினால் அதில் சிவப்பு நிற ஒளி எரியும். அவைதான் இன்ஃப்ராரெட். இது சாதரண கண்களுக்கு தெரியாது. தேவை இல்லாமல் எதாவது வயர் சென்றால் அந்த இடத்தை சோதித்துப் பாருங்கள்.

    "ஹிட்டன் கேமரா டிடெக்டர்" என்ற ஒரு ஆப் உள்ளது. இதன்மூலமும் கண்டறியலாம். இந்த ஆப்பை முழுமையாக நம்ப முடியாது என்றாலும், ஓரளவு நம்பகத்தன்மை கொண்டதுதான். இப்படியான வழிகளைக்கொண்டு நாம் கண்டறியலாம். நீங்கள் ஒருவேளை அதை உறுதிசெய்தால் உடனே அதை பதிவு செய்யுங்கள், காவல்துறையை, சைபர் கிரைமை அணுகுங்கள். நமது பாதுகாப்பு, நமது உரிமை. அதை பறிக்க யாருக்கும் உரிமையில்லை. அப்படி அத்துமீறுபவர்களுக்கு தண்டனை கொடுப்பது நமது கடமை.

    • சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டிருக்கிறது.
    • குழந்தை கடத்தல் குறித்த தகவல்கள் வெளியாவது உண்மை இல்லை. தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

    குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் குழந்தை கடத்தல் குறித்து தேவையற்ற வதந்திகளை யாரும் பகிர வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், பர்தா அணிந்து பெண் வேடமிட்ட ஆண்கள் சுற்றி வருவதாகவும், இக்கடத்தலுக்காக வடமாநிலங்களில் இருந்து 400 பேர் தமிழகத்தில் குவிந்துள்ளதாகவும், கடத்தப்படும் சிறுவர், சிறுமிகளின் உடல் உறுப்புகளை ஒரு கும்பல் எடுப்பதாக கூறப்படும் தகவல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிவேகமாக பரவி வருகின்றன

    இதற்கு காவல்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், குழந்தைகள் கடத்தல் என்ற வதந்திகளை பரப்புபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சைபர் கிரைம் குறித்த ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றுகளையும் வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இதுபோன்ற ஹேக்கத்தான் போட்டிகளில் பல்வேறு தொழில்நுட்பங்களையும் யுக்திகளையும் கண்டுபிடித்து வருகின்றனர். அவை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். குழந்தை கடத்தல் தொடர்பான தகவல்கள் வெளியாவது உண்மை இல்லை. இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டுவிட்டது. தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அதே போல் உண்மையில்லாத தகவல்களை யாரும் பகிர வேண்டாம்." என்று அவர் தெரிவித்தார்.

    • தினேஷ்குமார் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் தெரிவித்தார்.
    • சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த ஜூஜூவாடி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் தினேஷ்குமார்.

    தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் வாட்ஸ்-அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் பகுதிநேரம் வேலை இருப்பதாகவும், இதற்காக குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று இருந்தது.

    இதனை நம்பிய தினேஷ்குமார் அந்த மெசேஜில் வந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, அதில் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.12 லட்சத்து 21ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.

    அதன்பின்பு அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது மர்ம நபரின் போன் சுவிட்ச் ஆப் செய்து இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டது தினேஷ்குமாருக்கு தெரியவந்தது.

    இதுகுறித்து தினேஷ்குமார் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் தெரிவித்தார்.

    இதேபோல் கிருஷ்ணகிரி பவர்ஹவுஸ் காலனியை சேர்ந்தவர் அஜீன்குமார் (வயது27). இவரது செல்போனில் வந்த எஸ்.எம்.எஸில் வந்த குறுஞ்செய்தியில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று வந்தது. அந்த லிங்க்கை கிளிக் செய்தபோது வந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, அதில் பேசிய மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் அஜீன்குமார் ரூ.7லட்சத்து 35ஆயிரத்தை செலுத்தினார். பின்னர் அந்த மர்ம நபரின் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அஜீன்குமார் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் தெரிவித்தார். இதேபோன்று ஓசூர் கே.சி.சி. நகரைச் சேர்ந்த ஷமீர் என்பவரின் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை நம்பி அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு மர்ம நபரின் வங்கி கணக்கில் ரூ.17 லட்சத்து 48 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அதன்பின்னர் அவரை மர்ம நபர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். மாவட்டத்தில் 3 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.38 லட்சம் பணம் பறித்த சம்பவம் குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • செல்போன் வாட்ஸ்-அப்பிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ கால் வந்துள்ளது.
    • கடந்த சில மாதங்களாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூரு:

    முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலம் (45). தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவராகவும், தெலங்கானா மாநில தேர்தல் பொறுப்பாளராகவும் உள்ளார். மேலும் பல்வேறு தொழில்களும் செய்து வருகிறார்.

    மோகன் குமாரமங்கலம் தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூரு பழைய விமான நிலையம் கோடிஹள்ளி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது செல்போன் வாட்ஸ்-அப்பிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ கால் வந்துள்ளது. அப்போது அவருக்கு தெரியாமலேயே அந்த அழைப்பு ஏற்கப்பட்டது.

    அப்போது சத்தம் கேட்டு அவர் தனது செல்போனை எடுத்து பார்த்தார். அப்போது அதில் ஒரு இளம்பெண் நிர்வாணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அந்த வீடியோ காலை உடனடியாக துண்டித்து விட்டார். மேலும் மோசடி கும்பல் மோகன் குமாரமங்கலத்தின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து அவர் சாட்டிங் செய்தது போலவும், நிர்வாணமாக தோன்றிய பெண்ணின் வீடியோவை அவர் பார்ப்பது போன்றும் போலியாக தயாரித்து அவரை மிரட்டி பணம் கேட்டு உள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ரூ.6ஆயிரம் அந்த கும்பலுக்கு செலுத்தி உள்ளார். ஆனாலும் தொடர்ந்து அவர்கள் பணம் கேட்டு அவரை மிரட்டினர்.

    இதையடுத்து மோகன் குமாரமங்கலம் கடந்த 11-ந் தேதி பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மோகன் குமாரமங்கலத்தை மிரட்டி பணம் பறித்த கும்பல் ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக பெங்களூரு பகுதியில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஆன்லைனில் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி துணிகரம்
    • சைபர் கிரைம் போலீசில் புகார்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், ஊசூர் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அமீன் (வயது 32). இவரை ஆன்லைனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் ஆன்லைனில் வேலை தருவதாக நம்பிக்கை வார்த்தைகள் கூறினர்.

    இதனை உண்மை என நம்பிய அமீன் அவர்கள் அனுப்பிய லிங்கில் இணைந்தார். பின்னர் சிறிது சிறிதாக ரூ.5 லட்சத்து 51 ஆயிரத்து 520 அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கில் செலுத்தினார்.

    மர்ம நபர்கள் கூறியபடி அமீன் முடித்துக் கொடுத்த வேலைக்கான பணம் அவரது வங்கி கணக்கில் வரவில்லை.

    இது குறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் கேட்டபோது தாங்கள் கொடுக்கும் பணிகளை மீண்டும் முடித்துக் கொடுத்தால் பணம் வங்கி கணக்குக்கில் செலுத்து வதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அமீன் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அவசர செலவுக்கு பணம் தேவைப்படுவதாக ஹரிசேகரன் போல் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
    • கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஹரிசேகரன் பெயரில் 6 போலி பேஸ்புக் வலைத்தள கணக்குகள் செயல்பாட்டில் இருந்தது தெரிய வந்துள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில தீயணைப்பு துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து வருபவர் ஹரிசேகரன். இவர் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். மேலும் இவர் மறைந்த தமிழக மந்திரி கக்கனின் உறவினர் ஆவார். இவரது பெயரில் பேஸ்புக் வலைதள பக்கத்தில் போலி கணக்கு தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அந்த கணக்கை கொண்டு பலரிடம் அவசர செலவுக்கு பணம் தேவைப்படுவதாக ஹரிசேகரன் போல் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதை நம்பிய சிலர் அதில் குறிப்பிட்டு இருந்த வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் சந்தேகம் அடைந்த சிலர் இதுகுறித்து போலீஸ் டி.ஜி.பி.க்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே அவர் இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஹரிசேகரன் பெயரில் 6 போலி பேஸ்புக் வலைத்தள கணக்குகள் செயல்பாட்டில் இருந்ததும், அவரது புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை பயன்படுத்தி பண மோசடி கும்பல் கைவரிசை காட்டியதும் தெரிந்தது.

    இதையடுத்து மோசடி கும்பலை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

    • 1930 என்ற உதவி எண் மூலமாக இந்தாண்டு 21,760 புகார் அழைப்புகள்.
    • 42 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில் நடந்த சைபர் கிரைம் மோசடி குறித்து தமிழக சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    இதில், தமிழகம் முழுவதும் கடந்த 10 மாதங்களில் மட்டும் சைபர் கிரைம் மோசடிகளில் சிக்கி ரூ.425 கோடியை பொதுமக்கள் இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

    இதில், தமிழகம் முழுவதும் 65,426 சைபர் கிரைம் புகார்கள் பெறப்பட்டுள்ளது.

    1930 என்ற உதவி எண் மூலமாக இந்தாண்டு 21,760 புகார் அழைப்புகள் வந்துள்ளதாக சைபர் கிரைம் தெரிவித்துள்ளது.

    திருடுபோன ரூ.338 கோடியை தமிழக சைபர் கிரைபர் போலீசார் வங்கி மூலமாக முடக்கி உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

    மேலும், 42 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 29,530 சிம்கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    • ஓ.டி.பி. எண்ணை பகிர்ந்து கொள்ளாத நிலையிலும் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
    • குற்றவாளிகள் தொடர்பாக விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறனும் அவரது மனைவியும் சேர்ந்து கோபாலபுரம் ஆக்சிஸ் வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளார்கள். கடந்த 8-ந் தேதி அவரது மனைவிக்கு வங்கியில் இருந்து பேசுவது போல் போன் அழைப்பு சென்று உள்ளது. அந்த இணைப்பை துண்டித்ததும் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.99,999 திருட்டு போனது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக அவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உடனடியாக சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

    இதற்கிடையில் ஓ.டி.பி. எண்ணை பகிர்ந்து கொள்ளாத நிலையிலும் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

    மேலும் 2018-ம் ஆண்டிலேயே ஆதார் தகவல்கள் விற்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்தன. மக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது? என்று காட்டமாக தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் தயாநிதி மாறன் வங்கிக்கணக்கில் இருந்து திருடப்பட்ட பணம் கண்டறியப்பட்டு வங்கிக்கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்பட்டுள்ளதாக ஆக்சிஸ் வங்கி நிர்வாகம் தரப்பில் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டது.

    மேலும் குற்றவாளிகள் தொடர்பாக விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார், குற்றவாளிகள் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளார்கள்.

    • தயாநிதி மாறன் செல்போன் எண்ணுக்கு பேசிய நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, வங்கி பண பரிவர்த்தனை விவரங்களை கேட்டுள்ளார்.
    • மோசடி சம்பவம் குறித்து தயாநிதி மாறன் எம்.பி., சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் புகார் தெரிவித்தார்.

    சென்னை:

    'டிஜிட்டல்' மயமான உலகில், மோசடி செயல்கள் 'ஹைடெக்' ஆகி உள்ளது. வங்கியில் இருந்து பேசுவதாக கூறி 'உங்கள் கணக்கு எண் விவரங்களை 'அப்டேட்' செய்ய வேண்டும்' என்று அப்பாவி மக்களை ஏமாற்றி, 'ஓ.டி.பி.' எண்ணை பெற்று பண மோசடி செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    இதே பாணியில், 'நீங்கள் மின்சார கட்டணம் செலுத்தவில்லை. குறிப்பிட்ட 'லிங்க்'கில் சென்று பணத்தை உடனடியாக செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்' என்று குறுந்தகவல் அனுப்பியும் வங்கி கணக்கில் இருந்து பணத்தை சட்டென்று எடுக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.

    இந்த நிலையில் மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறனிடம் 'சைபர்' மோசடி பேர்வழிகள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். அவருடைய செல்போன் எண்ணுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, வங்கி பண பரிவர்த்தனை விவரங்களை கேட்டுள்ளார்.

    சுதாரித்துக்கொண்ட தயாநிதி மாறன் எம்.பி. வங்கி கணக்கு விவரங்களை தராமல் அந்த இணைப்பை துண்டித்து விட்டார். ஆனால் அடுத்த சில நொடிகளில் தயாநிதி மாறன் எம்.பி.யின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.99 ஆயிரத்து 999 பணம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் இடம் பெற்றிருந்தது.

    இந்த மோசடி சம்பவம் குறித்து தயாநிதி மாறன் எம்.பி., சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் புகார் தெரிவித்தார்.

    வங்கி விவரங்கள், ஓ.டி.பி. எண் எதையும் பகிராமல் தனது வங்கி கணக்கில் பணம் திருடப்பட்டது குறித்து தயாநிதி மாறன் ஆதங்கத்துடன் சமூக வலைத்தளத்தில் கருத்துகளை பதிவிட்டார்.

    புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு 'சைபர் கிரைம்' போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • பாலசுப்பிரமணியன் வெவ்வேறு வங்கி கணக்குகளில் ரூ.7 லட்சத்து 9 ஆயிரத்து 329-யை செலுத்தியுள்ளார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் வந்த வண்ணமாக உள்ளது. தற்போது ஆன்லைன் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம், கமிஷன் பெறலாம் என்று மெசேஜ் அனுப்பி மீண்டும் 2 பேரிடம் ரூ.23 லட்சம் வரை மர்ம நபர்கள் பணமோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பால சுப்பிரமணியன். இவரது மனைவிக்காக செல்போன் மூலம் பகுதி நேர வேலை தேடிக்கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனில் டெலிகிராம் என்ற சமூக வலைதளத்தில் பகுதிநேரம் வேலை இருப்பதாகவும், அதில் குறைந்த முதலீடு செய்தால், அதிக சம்பளமும், கமிஷனும் கிடைக்கும் என்று குறுந்செய்தி வந்தது. அதனை நம்பிய பாலசுப்பிரமணியன் அந்த லிங்கை கிளிக் செய்ததன் மூலம் வந்த செல்போன் எண்ணில் மர்ம நபர் ஒருவரை தொடர்பு கொண்டார். அந்த மர்ம நபர் கூறியபடி பாலசுப்பிரமணியன் வெவ்வேறு வங்கி கணக்குகளில் ரூ.7 லட்சத்து 9 ஆயிரத்து 329-யை செலுத்தியுள்ளார். அதன்பின்னர் அந்த மர்மநபரை செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச்ஆப் என்று வந்தது. இதனால் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று கிருஷ்ணகிரி சாமந்தமலை அருகே தளவாய் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அருண்குமாருக்கு செல்போன் வாட்ஸ் அப்பில் ஒரு குறுந்செய்தி வந்தது. அதில் அதிக லாபம் மற்றும் கமிஷனுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக இருந்தது. இதனை நம்பிய அருண்குமார் மர்ம நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது அவர் கூறியபடி வங்கி கணக்குகளில் ரூ.15 லட்சத்து 59 ஆயிரத்து 470-யை செலுத்தியுள்ளார்.

    அதன்பின்னர் அந்த மர்ம நபரை அருண்குமார் தொடர்பு கொண்டார். அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. அதன்பின்னர் அருண்குமார் தன்னை மர்மநபர் ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் 2 பேரிடம் ரூ.23 லட்சம் வரை மர்ம நபர் பணமோசடி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அவசர தேவைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் செயலி மூலம் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றார்.
    • இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் (வயது40).

    இவர் புதுவை அரசு பல்நோக்கு ஊழியர் ஆவார். இவர் தனது அவசர தேவைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் செயலி மூலம் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றார்.

    இதற்காக அவர், அந்த செயலியில் அவரின் செல்போன்களில் உள்ள அனைத்து தகவல்களை பார்வையிடுவதற்கு அனுமதி அளித்தார்.

    அதையடுத்து அவருக்கு உடனே கடன் வழங்கப்பட்டது. கடன் பெற்ற ஒரு வாரத்திலேயே அந்த தொகையை ஆண்ட்ரூஸ் திரும்ப செலுத்திவிட்டார்.

    ஆனால் அவரை ரூ.15 ஆயிரம் செலுத்த வேண்டும் என தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஆண்ட்ரூசின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய நபர், நாங்கள் கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால் உனது நிர்வரண படத்தை உறவினர்கள், நண்பர்கள் செல்போன் எண்ணுக்கு அனுப்பிவிடுவோம் என மிரட்டினார். மேலும் ஆண்ட்ரூசின் நிர்வாண படத்தையும் அவரது செல்போனுக்கு அனுப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆண்ட்ரூஸ் பல்வேறு தவணைகளாக ரூ.3லட்சம்வரை வங்கிகணக்கு மூலம் செலுத்தினார்.

    ஆனாலும் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர்.

    இதையடுத்து ஆண்ட்ரூஸ் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடந்த சில மாதங்களாக இதேபோன்று நிர்வாண படங்களை அனுப்பி பணம் பறிக்கும் கும்பல் குறித்து புகார்கள் வந்ததால் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் இதனை பொருடப்படுத்தாமல் பலர் பணம் செலுத்தி ஏமாறுகின்றனர்.

    • புகாரின் பேரில் விசாரணை நடத்த தருமபுரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் வந்தது.
    • மர்ம கும்பல் ரூ.11 லட்சத்தை பறித்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சீரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவி ஆனந்த பிரியா (வயது28). சாப்ட் வேர் என்ஜினீயரான இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று அனந்த பிரியாவின் வாட்ஸ் அப்பிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் தனியார் வங்கி மூலம் ரூ.10 லட்சம் கடன் தங்களுக்கு வந்துள்ளது என்று இருந்தது. அதனை நம்பிய ஆனந்த பிரியா அந்த லிங்கை கிளிக் செய்தார்.

    அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.11 லட்சம் வரை பணம் காணமால் போய்விட்டது. இது குறித்து ஆன்ந்தபிரியா சைபர் கிரைம் போலீசாருக்கு செல்போன் மூலம் புகார் தெரிவித்தார். அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்த தருமபுரி மாவட்ட சைபர் கிரைம் போலீ சாருக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் ஆனந்த பிரியாவிடம் இருந்து ஆன்லைன் மூலம் மர்ம கும்பல் ரூ.11 லட்சத்தை பறித்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெண் என்ஜினீயரிடம் தனியார் வங்கி மூலம் கடன் தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×