என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூதன மோசடி"

    • சில செயலிகளுக்கு ஒரு மார்க்கெட்டிங் குழு இருக்கும்.
    • டேட்டிங் செயலிகள் மூலம் ஏமாற வேண்டாம்.

    திருப்பதி:

    சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டும் செயலிகளுக்குப் பிறகு டேட்டிங் செயலிகள் மிகவும் பிரபலமான மோசடிகளாக மாறி வருகிறது.

    நீங்கள் தனியாக இருக்கிறீர்களா சலிப்பாக இருக்கிறதா நானும் தனியாக இருக்கிறேன். நாம் கொஞ்ச நேரம் பேசலாமா, ப்ளீஸ், என குண்டூரைச் சேர்ந்த வாலிபருக்கு ஒரு இளம்பெண் பேஸ்புக்கில் தகவல் அனுப்பினார்.

    யோசிக்காமல் வாலிபர் டேட்டிங் செயலியை பதிவிறக்கம் செய்து அவளுடன் அரட்டை அடிக்கத் தொடங்கினார். இரவும் பகலும் எந்த வித்தியாசமும் இல்லை அவளுடன் அரட்டை அடிப்பதே வேலையாக நீடித்தது.

    அவ்வப்போது வீடியோ அழைப்புகள் சின்னச் சின்னப் பேச்சுகளில் இருந்து தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது வரை பரிச்சயமானார்கள்.

    ஒருநாள் என் அப்பாவுக்கு ஒரு விபத்து நடந்து விட்டது. நீங்கள் எனக்கு உதவ முடியுமா என்று இளம்பெண் கேட்டார்.

    வாலிபர் சொத்து ஆவணங்களை அடமானம் வைத்தும் சில நண்பர்களிடமிருந்து கடன் வாங்கியும் இளம்பெண் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளில் 10 லட்ச ரூபாயை தவணைகளாக அனுப்பி வைத்தார்.

    அதன் பிறகு இளம்பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இறுதியில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வாலிபர் போலீசில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் சைபர்கிரைம் போலீசார் கூறியதாவது:-

    டேட்டிங் செயலிகளில் மணிக்கணக்கான அரட்டை, போதை தரும் பேச்சு மயக்கும் அழைப்பு, அவை உலகத்தையே மறக்கச் செய்கின்றன. கடைசியில் அதில் மூழ்கடித்து பணத்தை பறித்து விடுகின்றனர்.

    சில செயலிகளுக்கு ஒரு மார்க்கெட்டிங் குழு இருக்கும். சிலர் இளம்பெண்களை செயலிகளில் பதிவு செய்ய வைத்து வேண்டுமென்றே ஏமாற்றுகிறார்கள்.

    அவர்கள் முதலில் அரட்டையடிக்கத் தொடங்குவார்கள். படிப்படியாக அறிமுகம் குரல் அழைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்னேறுகிறது. சிலர் நிர்வாண அழைப்புகள் செய்து நிர்வாண புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    இதைப் பதிவு செய்து அந்தப் புகைப்படங்களைப் பயன்படுத்தி மிரட்டி பணம் பறிக்கின்றனர். டேட்டிங் செயலிகள் மூலம் ஏமாற வேண்டாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கோவை போலீஸ் நிலையத்தில மேலும் 6 பேர் புகார் அளித்தனர்.
    • தொகை வரவில்லை என பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.

    பீளமேடு,

    கோவை சவுரிபாளையம் கிருஷ்ணா நகர் பகுதிைய சேர்ந்தவர் பாபு என்கிற கோபி (வயது 40).

    இவர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து மளிகை மற்றும் விவசாய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு வியாபாரிகளிடமிருந்து வாங்கிய பொருள்களுக்கு உரிய தொகையை திருப்பி தராமல் இருந்து வந்ததாக புகார் எழுந்தது.

    இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபி மீது அன்னூர் மற்றும் ஈரோட்டை சேர்ந்த வியாபாரிகள் கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் கோபியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் ஆனைமலையை சேர்ந்த செந்தில்குமார் (40) என்பவர் ரூ. 1 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான தேங்காய் எண்ணையை கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு சப்ளை செய்துள்ளார். அதற்குரிய தொகை வரவில்லை என செந்தில்குமார் பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.

    இதேபோன்று சேலம் மாவட்டம் அம்மா பாளையத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில் ராஜா என்பவர் ரூ. 1 லட்சம் நூடுல்ஸ், கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த பவித்திரன் (27) ரூ. 32 ஆயிரம் மதிப்புள்ள தேங்காய் எண்ணெய் ,சமையல் எண்ணெய் மற்றும் ரீபைண்ட் ஆயில், அன்னூர் சேர்ந்த தனபாலன் (27)என்பவர் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள தேங்காய் எண்ணைய் மற்றும் கடலை எண்ணைய், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்( 33) என்பவர் அரிசி, தேங்காய் எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றை ரூ.1 லட்சத்து 56 ஆயிரம், மேலும் அன்னூர் சேர்ந்த சிவராமகிருஷ்ணன் என்பவர் ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் மதிப்புல் 90 மூட்டை அரிசி ஆகியவை வழங்கி உள்ளனர்.

    அதற்கான பணத்தை கோபி தரவில்லை என்று 6 பேரும் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் ஏற்கனவே கைது செய்த கோபி மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

    • 56 வயது நபர் வைத்திருந்த செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என தகவல் வந்தது
    • மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார்

    வேலூர்:

    ஆன்லைனில் பண மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்பம் குறித்து பெரியளவில் புரிதல் இல்லாத வயதனாவர்களை மோசடிகாரர்கள் குறிவைக்கின்றனர்.

    அவர்களும் எளிதாக விழுந்துவிடுகின்றனர். எனவே, ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் கூடுதல் கவ னம் அவசியம்.

    வாட்ஸ் அப்பில் நூதன முறையில் வேலூரை சேர்ந்தவரிடம் ரூ.4 லட்சம் பறித்து மோசடி செய்துள்ளனர்.இவரை வித்தியாசமான முறையில் வலையில் சிக்கவைத்துள்ளனர்.

    வேலூர் கொணவட்டத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் வைத்திருந்த செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என தகவல் வந்தது.

    அதனை நம்பி அவர் அதில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்துள்ளார். தொடர்ந்து அதில் காட்டப்பட்ட பல்வேறு பொருட்களை வாங்கினால் லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

    அதில் கொடுக்கப்பட்டிருந்த வங்கி கணக்கில் ரூ.4 லட்சத்தி 22, 617 செலுத்தினார்.

    இதனை தொடர்ந்து பணத்தை எடுக்க முயன்ற போது முடியவில்லை.

    அப்போதுதான் அவர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

    இது குறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலை-கடன் வாங்கித்தருவதாக நூதனமாக பேசி பெண் உள்பட 2 பேரிடம் ரூ.5½ லட்சம் மோசடி நடந்துள்ளது.
    • இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் சாத்தங்குடியை சேர்ந்தவர் உதயபாண்டி. இவரது மனைவி காயத்ரி(வயது29). சம்பவத்தன்று செல்போன் மூலம் இவரிடம் பேசிய மர்ம நபர் ரூ.10 லட்சம் கடன் வாங்கித்தருவதாக கூறியுள்ளார். அதற்கு ரூ.3 லட்சம் தர வேண்டும் என அந்த நபர் தெரிவித்துள்ளார்.

    இதை நம்பிய காயத்ரி சம்பவத்தன்று மாட்டுத் தாவணி அருகே சரவணன் என்பவரிடம் ரூ.3 லட்சத்தை கொடுத்ததாக தெரிகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமானார்.

    இதனால் அதிர்ச்சிய டைந்த காயத்ரி செல்போ னில் பேசிய நபருடன் பேச முயன்றார். ஆனால் பலனில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காயத்ரி புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபர்களை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள அரசூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த ராஜா என்பவர் கூறியுள்ளார். இதற்காக ராமசாமி அவருக்கு ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றபின் வேலை வாங்கித்தரவில்லை.

    இதையடுத்து ராமசாமி பணத்தை திரும்ப தருமாறு கேட்டபோது, ரூ.2½ லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்தை தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் ராஜா மற்றும் உடந்தையாக இருந்த வெங்கடேசன் என்பவர் மீது அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • மாற்றுத்திறனாளிக்கு போலீஸ் வலை வீச்சு
    • கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் டவுன் காமராஜர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மனைவி செல்வி (வயது 42). தாமோதரன் கொரோனா பாதிப்பால் இறந்துவிட்டார்.

    இதனை அறிந்த மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் செல்வியிடம் உன்னுடைய கணவர் கொரோனாவில் இறந்து விட்டதால், அரசு சார்பில் பணம் வந்துள்ளதாக கூறியுள்ளார்.

    மேலும் தாலுகா அலுவலகத்தில் பணம் கொடுத்தால் மட்டுமே உங்கள் கணவரின் இறப்பு பணம் கிடைக்கும் எனக் கூறி செல்வியின் காதில் இருந்த ½ பவுன் கம்மல் மற்றும் ரூ.500 ஆகியவற்றை வாங்கிக்கொண்டார். பின்னர் நான் முன்னால் இரு சக்கர வாகனத்தில் தாலுகா அலுவலகம் செல்கிறேன்.

    நீங்கள் பின்னால் வாருங்கள் எனக் கூறிவிட்டு சென்றார். செல்வி தாலுகா அலுவலகத்துக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்தும் அந்த நபர் வரவில்லை.

    இதனால் செல்வி தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து திருப் பத்தூர்டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் அங்கு வந்த போலீசார் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய மாற்றுத்திறனாளியை தேடி வருகின்றனர்.

    டிப்-டாப் வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

    கடலூர்:

    பண்ருட்டி ராஜாஜி சாலையில்சங்கர் (59) நகைகடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு நேற்று மாலை டிப்டாப் ஆசாமி ஒருவர் போன் பேசியபடி உள்ளே வந்தார்.உள்ளே வந்தகில்லாடி ஆசாமி அங்குள்ளசி.சி.டி.வி. கேமராக்களில் அவன் முகம் தெரியாதபடி தலைமுடியால் நெற்றி வரை மறைத்தபடியும் முககவசம் அணிந்திருந்தான்.

    அவன்போனில் கெத்து காட்டியபடிசிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். எதிர் முனையில் பேசியவர் அவரது மனைவி என்ற தோரணையில் கார் எடுத்துக் கொண்டு போக வேண்டியது தானே என்று கேட்டதாகவும் கார்ஒரு லிட்டருக்கு 8கிலோமீட்டர் தான் கொடுக்கிறது. அதனால் பைக்எடுத்துட்டு வந்துட்டேன் என்ற மாதிரி பேசி பெரிய பணக்காரன் மாதிரி காட்டிக் கொண்டு அங்கிருந்த கடை முதலாளி ,ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அதை எடுங்க,இதை எடுங்க என்றெல்லாம் கேட்டு இறுதியாக 4 கிராம் மோதிரத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஜிபே அனுப்புவது போல சாதாரண எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளான்.எஸ். எம். எஸ். சவுண்டு வந்தவுடன் முதலாளி போனை கவனித்துள்ளார். அதில் குறும் செய்தி நோட்டிபிகேஷன் வந்துள்ளது. அவர் போனுக்குஉள்ளே சென்று பேலன்ஸ் சரிபார்ப்பதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இடத்தை விட்டு மாயமாக மறைந்தார். குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு ஜிபே அனுப்பியதாக கூறி ஏமாற்றிய வாலிபர் குறித்து பண்ருட்டி போலீசில் நகைக்கடை அதிபர் சங்கர்புகார் செய்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் ,சப் இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, பிரசன்னா ஆகியோர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வினோத் இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.
    • முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்துடன் முகநூல் பக்கத்தில் மோசடியாக லிங்க்கை அனுப்பி தொடர்ந்து பணத்தை சுருட்டி வருவது தெரியவந்து உள்ளது.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத். தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சினி. இவர் பள்ளி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    வினோத் தனது செல்போனில் முகநூல் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதில்" 500 ரூபாய் மந்திர நோட்டைத் தொட்டு வெற்றி பெறுங்கள்.ரூ.5 ஆயிரம் கேஷ் பேக் பெறுங்கள்" என்று கவர்ச்சியான திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதைப் பார்த்தவுடன் பணம் கிடைக்கும் ஆசையில் அந்த பதிவை வினோத் கிளிக் செய்தார். உடனடியாக அவரது செல்போனுக்கு உங்களது வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் வந்து இருப்பதாக குறுந்தகவல் வந்தது.

    இதனால் மகிழ்ச்சியுடன் வினோத் தனது வங்கி கணக்கு இருப்பை சரி பார்த்தபோது அதில் இருந்த மனைவியின் சம்பளப் பணமான ரூ. 4650 மொத்தமாக எடுக்கப்பட்டு வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டு இருந்தது. இது தொடர்பாக சிறிது நேரத்தில் மற்றொரு குறுஞ்செய்தி அவருக்கு வந்தது.

    இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வினோத் இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். மோசடி கும்பல் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்துடன் முகநூல் பக்கத்தில் மோசடியாக லிங்க்கை அனுப்பி தொடர்ந்து பணத்தை சுருட்டி வருவது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×