search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தி
    X
    சோனியா காந்தி

    கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் - சோனியா காந்தி

    இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை மிகப்பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 2.87 லட்சத்துக்கு மேற்பட்டோர் கொடூர கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர்.
    புதுடெல்லி:

    கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து அனாதையான குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

    இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை மிகப்பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 2.87 லட்சத்துக்கு மேற்பட்டோர் கொடூர கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர்.

    இதனால் அவர்களின் குடும்பங்கள் மிகுந்த பரிதவிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இதில் முக்கியமாக ஏராளமான குழந்தைகளை இந்த கொரோனா அனாதைகளாக்கி இருக்கிறது.

    அந்தவகையில் தாய்-தந்தை இருவரையும் இழந்தவர்கள், இருவரில் ஒருவரை இழந்தவர்கள் என ஆயிரக்கணக்கான குழந்தைகள் பேரிடரில் தள்ளப்பட்டு இருக்கின்றனர். இந்த குழந்தைகளின் மறுவாழ்வுக்கு மத்திய அரசும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    பிரதமர் மோடி


    இந்த நிலையில் கொரோனாவால் அனாதைகளாகி இருக்கும் இந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கொரோனாவால் தங்கள் தாய்-தந்தை இருவரையும் அல்லது இருவரில் ஒருவரை இழந்து வாடும் குழந்தைகள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

    கற்பனைக்கு எட்டாத மிகப்பெரும் இழப்பை சந்தித்திருக்கும் அவர்களுக்கு வளமான எதிர்காலத்துக்கான நம்பிக்கையை வழங்க வேண்டியது, ஒரு தேசமாக நமது கடமை என எண்ணுகிறேன்.

    இழப்பின் வலியுடன் எஞ்சியிருக்கும் அவர்களுக்கு நிலையான கல்வி மற்றும் எதிர்காலத்துக்கான ஆதரவு எதுவும் இல்லை. எனவே கொரோனாவில் தாய்-தந்தை இருவரையும் இழந்த அல்லது வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தையை இழந்த இந்த குழந்தைகளுக்கு நவோதயா வித்யாலயா பள்ளிகளில் இலவச கல்வி வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு இந்த கடிதத்தை நான் எழுதுகிறேன்.

    இவ்வாறு சோனியா காந்தி அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    நாடு முழுவதும் 661 நவோதயா பள்ளிகள் இருப்பதாக கூறியிருந்த சோனியா காந்தி, இந்த பள்ளிகளை உருவாக்கியதில் தனது கணவரும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பங்களிப்பு குறித்தும் அந்த கடிதத்தில் நினைவு கூர்ந்திருந்தார்.

    உயர்தர நவீன கல்வியை எளிதில் பெறக்கூடியதாகவும், திறமையான இளைஞர்களுக்கு, குறிப்பாக கிராமப்புறங்களை சேர்ந்தவர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கக்கூடியதாகவும் மாற்றுவதே அவரது கனவாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
    Next Story
    ×