search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிகே சிவக்குமார்
    X
    டிகே சிவக்குமார்

    சாதி, மதத்தின் பெயரில் நாட்டை உடைக்க பாஜக முயற்சி: டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

    சாதி, மதத்தின் பெயரில் நாட்டை உடைக்க பாஜகவினர் முயற்சி செய்வதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
    பெலகாவி :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பெலகாவி உள்பட வட கர்நாடக மக்கள் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் அதிகளவில் கலந்து கொண்டனர். இன்று (நேற்று) காந்தியின் பிறந்த தினம். காந்தியின் கொள்கைகள் குறித்து பேசத்தொடங்கினால் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் பேசலாம். அவரின் சிந்தனைகளே காங்கிரசின் தத்துவம். இந்த சிந்தனைகளை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். அம்பேத்கர் ஒரு சமூகத்தின் தலைவர் மட்டுமல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலித்தவர் அம்பேத்கர்.

    இன்று நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றுமை மற்றும் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டு வருகிறது. நாட்டில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு, மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காக தெருவுக்கு வந்து போராட்டம் நடத்துவது அதிகரித்துவிட்டது. நாம் இந்தியர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற மத்திய அரசு சொல்கிறது. நாட்டில் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது. இந்த நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும். நமது முன்னோர் காட்டிய வழியில் நடக்க வேண்டும். பா.ஜனதாவினர் சாதி, மதத்தின் பெயரில் நாட்டை உடைக்க முயற்சிக்கிறார்கள்.

    இந்த நேரத்தில் காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, அம்பேத்கரின் கொள்கைகளை நாம் மக்களிடையே பரப்ப வேண்டியது அவசியம். விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் உள்பட யார், யாரெல்லாம் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதுகிறார்களோ அவர்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இந்த மாதம் இறுதி வரை இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளது.

    இந்த புண்ணிய பூமியில் இருந்து நான் எனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளேன். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சியினரை சந்திப்பேன்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
    Next Story
    ×