search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சச்சின் பைலட்
    X
    சச்சின் பைலட்

    காங்கிரசில் பதவிகள் பறிப்பு: சச்சின் பைலட்டுக்கு பாஜக அழைப்பு

    எங்கள் கொள்கைகளை நம்புவோருக்கு பா.ஜனதாவின் கதவு திறந்தே இருக்கிறது. சச்சின் பைலட் எங்களுடன் சேர்ந்தால் இருகரம் விரித்து வரவேற்போம் என்று மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் கூறியுள்ளார்.
    புதுடெல்லி :

    ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும், மாநில அரசில் துணை முதல்-மந்திரியாகவும் இருந்த சச்சின் பைலட், நேற்று அந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். காங்கிரசில் நீண்டகாலமாக முன்னணி தலைவராக இருந்த சச்சின் பைலட்டின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு கட்சிகளிடம் எழுந்துள்ளது. இந்த நிலையில் பைலட்டுக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்து உள்ளது. இது குறித்து மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மிகப்பெரிய அடித்தளம் கொண்ட ஒருவர் பா.ஜனதாவிலோ அல்லது வேறு எந்த கட்சியிலோ சேர்ந்தால், அவரை அனைவரும் வரவேற்பர். எங்கள் கொள்கைகளில் நம்பிக்கை வைத்து யாராவது வந்தால், அவர்களை நாங்கள் இருகரம் விரித்து வரவேற்போம். இது வழக்கமான நடைமுறைதான்’ என்று கூறினார்.

    இந்த கருத்தை எதிரொலித்த மற்றொரு பா.ஜனதா தலைவரான பி.பி.சவுத்ரி, ‘காங்கிரசில் இருந்து ஒரு இளம் தலைவர் ஓரங்கட்டப்பட்டு உள்ளார். காங்கிரசில் இளம் தலைவர்களுக்கு இடமில்லை. எனவே ஏராளமானவர்கள் அவருடன் இணைந்து வருகின்றனர். எங்கள் கொள்கைகளை நம்புவோருக்கு பா.ஜனதாவின் கதவு திறந்தே இருக்கிறது. சச்சின் பைலட் எங்களுடன் சேர்ந்தால் எந்த பிரச்சினையும் ஏற்படும் என நான் நினைக்கவில்லை. எனினும் இந்த விவகாரத்தில் கட்சியின் தேசிய தலைமை இறுதி முடிவு எடுக்கும்’ என தெரிவித்தார்.
    Next Story
    ×