search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதார்
    X
    ஆதார்

    சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு

    சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு உறுதிபட தெரிவித்து உள்ளது.
    புதுடெல்லி:

    தனிநபர்களின் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மும்பை, சென்னை உள்ளிட்ட ஐகோர்ட்டுகளில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இவை அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைப்பது தொடர்பான சட்டம் உருவாக்கும் பரிந்துரை எதுவும் மத்திய அரசிடம் உள்ளதா? என பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

    தனிநபர்களின் சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக சட்டம் இயற்றும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. ஆதாரின் கொள்கை மற்றும் வடிவமைப்பு அடிப்படையில் ஆதார் ஆணையமே தனிநபர்களின் தகவல்களை சேகரிக்கவும், அவர்களை கண்காணிக்கவும் தடை விதிக்கிறது.

    ரவிசங்கர் பிரசாத்


    ஆதாரின் ஒட்டுமொத்த பயோமெட்ரிக் தகவல்கள் அனைத்தும் குறியாக்கம் செய்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவை ஒருபோதும் பகிரப்படாது. ஒட்டுமொத்த ஆயுள் சுழற்சியில் ஒரு ஆதார் தரவுத்தொகுப்பானது, அதன் உருவாக்கம் மற்றும் மேம்படுத்துதலின்போது, தனிநபர் அளிக்கும் தகவல்களை மட்டுமே கொண்டிருக்கும். அதில் குறிப்பிட்ட நபர்கள் அளித்திருந்தால், அவர்களின் செல்போன் எண், இ-மெயில் முகவரி போன்றவையும் இணைக்கப்பட்டு இருக்கும்.

    குறைந்தபட்ச தகவல், உகந்த அறியாமை மற்றும் கூட்டாட்சி தகவல் தொகுப்பு ஆகிய 3 அடிப்படை கோட்பாடுகளில்தான் ஆதார் திட்டம் இயங்குகிறது.

    இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

    இதைப்போல வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் திட்டம் குறித்த கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்கையில், ‘வெளிநாடுவாழ் இந்தியர்கள், நாடு திரும்பியபின் அவர்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்தை கடந்த செப்டம்பர் 20-ந்தேதி முதல் ஆதார் ஆணையம் நடைமுறைப்படுத்தி வரும் நிலையில், கடந்த 14-ந் தேதி வரை வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு 2,800 ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன’ என்று தெரிவித்தார்.
    Next Story
    ×