search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலாளியின் கழுத்தை சுற்றிய மலைப்பாம்பை படத்தில் காணலாம்.
    X
    தொழிலாளியின் கழுத்தை சுற்றிய மலைப்பாம்பை படத்தில் காணலாம்.

    தோட்ட வேலையில் ஈடுபட்ட தொழிலாளியின் கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு - வீடியோ

    திருவனந்தபுரம் அருகே மலைப்பாம்பு ஒன்று தோட்ட வேலையில் ஈடுபட்ட தொழிலாளியின் கழுத்தை சுற்றி வளைத்து கொண்ட வீடியோ காட்சி வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கட்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் புவனசந்திரன், தோட்டத்தொழிலாளி.

    நெய்யாறு அணை பகுதியில் உள்ள ஒரு கல்லூரி தோட்டத்தில் புதர்களை அகற்றும் பணிக்கு புவனசந்திரன் நேற்று முன் தினம் சென்றார்.

    தோட்டத்தில் புதர்கள் அடர்ந்து காணப்பட்ட பகுதியில் சக தொழிலாளிகளுடன் செடி, கொடிகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    ஒரு புதரை அகற்றியபோது அங்கு ராட்சத பாம்பு ஒன்று இருப்பதை புவனசந்திரன் கண்டார். சக ஊழியர்களை அழைத்து அந்த பாம்பை பிடிக்க முயன்றார்.

    இதற்காக சாக்குப்பை ஒன்றை எடுத்துக்கொண்டு புதருக்குள் நுழைந்து பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்த பாம்பை சாக்குப்பைக்குள் போட்டு அதை தோளில் தூக்கினார். அப்போது சாக்குப்பையில் இருந்த பாம்பு திடீரென வெளியே வந்து புவனசந்திரனின் கழுத்தை சுற்றி வளைத்துக் கொண்டது.

    இதை சற்றும் எதிர்பாராத புவனசந்திரன் அலறினார். கழுத்தில் சுற்றிய பாம்பை அகற்ற முயன்றார். அதற்குள் சக ஊழியர்களும் ஓடி வந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி புவனசந்திரன் கழுத்தை சுற்றிய பாம்பை அகற்றினர்.

    பின்னர் இதுபற்றி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வன ஊழியர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை பத்திரமாக மீட்டுச் சென்றனர். அதனைஅடர்ந்த காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.


    மலைப்பாம்பு புவனசந்திரன் கழுத்தை சுற்றி வளைத்து இருப்பதை அவருடன் பணிக்கு சென்ற சில ஊழியர்கள் செல்போனில் பதிவு செய்தனர்.

    இந்த காட்சிகள் இப்போது வாட்ஸ் அப்பில் பரவி வைரலாகி வருகிறது.
    Next Story
    ×