search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலைப்பாம்பு"

    • பாம்பை பிடிப்பதற்காக வனத்துறையினர் பாம்பு நடமாட்டம் இருந்த பகுதியில் கூண்டில் கோழியை அடைத்து வைத்தனர்.
    • பிடிபட்ட மலைப்பாம்பை வன ஊழியர்கள் கிண்டியில் உள்ள சிறுவர்கள் பூங்காவில் கொண்டு சென்று விட்டனர்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் மலைப்பாம்பு ஒன்று காணப்பட்டது. 12 அடி நீளம் கொண்ட இந்த மலைப்பாம்பை அங்கு பணியில் இருந்த காவலாளிகள் பார்த்தனர். அவர்களை பார்த்ததும் பாம்பு தப்பியோடி விட்டது.

    இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையில் உள்ள பாம்பு பிடிக்கும் ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து மலை பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது தப்பி ஓடி மறைந்து கொண்டது. இந்த நிலையில் மீண்டும் மற்றொரு முறை அந்த மலைப்பாம்பை காவலாளிகள் பார்த்தனர். இதுபற்றி மீண்டும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர், ஐஐடி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பாம்பை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மாதமாக மலைப்பாம்பை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. பாம்பு பிடிக்கும் இருளர் சமூகத்தை சேர்ந்த 2 பேர் அழைத்து வரப்பட்டு அவர்களும் மலைப்பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    பாம்பை பிடிப்பதற்காக வனத்துறையினர் பாம்பு நடமாட்டம் இருந்த பகுதியில் கூண்டில் கோழியை அடைத்து வைத்தனர். இந்த நிலையில் கோழியை உண்ண வந்த போது மலைப்பாம்பு வனத்துறையினரிடம் சிக்கிக் கொண்டது. அதை வனத்துறையினர் பிடித்தனர். அந்த மலைப்பாம்பு 12 அடி நீளம் கொண்டது. அதன் எடை 30 கிலோ ஆகும்.

    பிடிபட்ட அந்த மலைப்பாம்பை வன ஊழியர்கள் கிண்டியில் உள்ள சிறுவர்கள் பூங்காவில் கொண்டு சென்று விட்டனர். இந்த மலைப்பாம்பு சில ஆண்டுகளுக்கு முன்பு கிண்டி சிறுவர் பூங்காவில் இருந்து தப்பி சென்ற பாம்பு என்று கருதப்படுகிறது. ஒருமாத கால தேடுதல் வேட்டைக்கு பிறகு மலைப்பாம்பு பிடிபட்டு உள்ளதால் ஐஐடி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

    • மாணவர்கள் விடுதியில் படுக்கைக்கு அடியில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது.
    • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பை பிடித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் விடுதியில் படுக்கைக்கு அடியில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பை பிடித்தனர். இதையடுத்து பாம்பை மீண்டும் காட்டுக்குள் விட்டனர்.

    • நகர முடியாமல் 3 மணிநேரம் தவிப்பு
    • வனத்துறையினர் மீட்டு காப்பு காட்டில் விட்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தையொட்டி சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது.

    வனத்தை ஒட்டியுள்ள இந்த கிராமத்தின் குடியிருப்பு பகுதிகளில், அடிக்கடி மான், மயில், மலைப்பாம்பு மற்றும் விஷபாம்புகள் இறையை தேடி வருகிறது.

    கிராமத்திற்கு நுழையும் மலைப்பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் பெரிய ஏரியூர்கிராம மக்கள், சுடுகாட்டு அருகே உள்ள வன பகுதி வழியாக நடந்து சென்றனர்.

    அப்போது சுமார் 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பு ஒன்று மரத்திற்கு அடியில் உணவு செறியூட்ட முடியாமல் தவித்து கொண்டு இருந்தது.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    3 மணி நேரத்துக்கு மேலாகியும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

    இதற்கிடையில் மலைப்பாம்பு அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் திக்கி, திணறியது.

    ஒரு கட்டத்தில் மலை பாம்பு விழுங்கிய புள்ளிமானை, வெளியே கக்கியது.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அங்கேயே அமர்ந்து கொண்டு, வனத்துறையினரை போனில் தொடர்பு கொண்டு அழைத்தனர்.

    காலதாமதமாக வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை மீட்டு அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 4 வீடுகளில் மலை பாம்பு புகுந்ததாக ரங்காவுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • விசாகப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல பாம்புகளை பிடித்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ரங்கா. இவர் எந்த வகை பாம்பாக இருந்தாலும் திறமையாக பிடிப்பதில் வல்லவர்.

    விசாகப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல பாம்புகளை பிடித்துள்ளார். ரங்கா சிறிய வகை பாம்புகள் முதல் பெரிய வகை பாம்புகளை பிடித்துச் சென்று நடுக்காட்டில் விடுவது வழக்கம்.

    இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வீடுகளில் மலை பாம்பு புகுந்ததாக ரங்காவுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற ரங்கா வீட்டில் இருந்த 4 மலை பாம்புகளை பிடித்தார்.

    பின்னர் பிடிக்கப்பட்ட பாம்புகளை கையில் சுற்றிக்கொண்டு சாகசம் செய்தார். இதனை வேடிக்கை பார்த்த சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர்.

    செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை பதிவிட்டனர்.

    தற்போது ரங்கா பாம்புகளை வைத்து சாகசம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • வனத்துறையிடம் ஒப்படைப்பு
    • காப்பு காட்டில் விட்டனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் விண்ணமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி விவசாய நிலத்தில் 13 அடி நீளம் உள்ள பெரிய மலை பாம்பு சிக்கியது.

    இந்த பாம்பை ஆம்பூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர் வனத்துறை ஊழியர்கள் ஆம்பூர் காப்பு காட்டில் அந்த பாம்பை விட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆட்டுக்குட்டியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிப்பட்டது.
    • 10 அடி நீளமுள்ளது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை அன்னவாசல் ஆலங்குளம் பகுதியில் சிலர் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது குளத்தின் கரையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு ஒன்று அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டு குட்டியை பாதி விழுங்கி விட்டு அசையமுடியாமல் கிடந்தது. இதைப்பார்த்த சிலர் இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்புவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மலைப்பாம்பிடம் இருந்து செத்த நிலையில், ஆட்டுக்குட்டியை இழுத்து வெளிேய கொண்டு வந்தனர். தொடர்ந்து 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் மலைப்பாம்பை நார்த்தாமலை காப்பு காட்டில் கொண்டு விட்டனர்.

    • மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது.
    • சில வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

    குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் பாம்புகளை கண்டால் துரத்தி அடிப்பவர்களுக்கு மத்தியில், ராட்சத மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க வாலிபர் ஒருவர் போக்குவரத்தை நிறுத்தி உதவிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    மத்தியபிரதேச மாநிலத்தில் நர்மதா புரத்தில் நெடுஞ்சாலையில் சுமார் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. ஆனால் அந்த பாம்பு சாலையில் நகர முடியாமல் 10 நிமிடங்களுக்கு மேலாக திணறுவதை அவ்வழியாக சென்ற வாலிபர் பார்த்தார். உடனடியாக அவர் தனது வாகனத்தை நிறுத்தியதோடு பாம்பின் மீது மற்ற வாகனங்கள் ஏறி விடாமல் இருப்பதற்காக அந்த வழியில் போக்குவரத்தை நிறுத்தி உள்ளார்.

    பின்னர் அந்த பாம்பு சாலையை கடக்கும் வகையில் கை தட்டி உள்ளார். அவரின் கை தட்டலை கேட்டு பாம்பு மெதுவாக சாலையை கடந்து செல்கிறது. இதை சில வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகிய நிலையில் வாலிபரை பாராட்டி பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • 10 அடி நீளம் உள்ள மலைபாம்பு ஒன்று பூனை ஒன்றை கடித்து கவ்வி கொண்டு இருந்தது.
    • தீயணைப்பு துறையினர் மலைபாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

    கன்னியாகுமரி :

    குலசேகரம் அருகே வெண்டலிகோடு பம்பச்சை தாழவிளை பகுதியில் கால்வாய் ஒன்று பாய்கிறது. நேற்று மாலை அந்த பகுதியில் சுமார் 10 அடி நீளம் உள்ள மலைபாம்பு ஒன்று பூனை ஒன்றை கடித்து கவ்வி கொண்டு இருந்தது.

    இது அந்த பகுதியில் உள்ள சுரேஷ் என்பவரின் பூனை என்று தெரியவந்தது. உடனே அந்த பகுதி மக்கள் குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு அலுவலர் செல்வமுருகன் தீயணைப்பு வீரர்களுடன் வந்து பார்க்கும்போது பாம்பு பூனையை கடித்து கொண்டு இருந்தது. அவர்கள் பாம்பின் பிடியில் இருந்து பூனையை விடுவித்தனர். பூனை இறந்தது தெரியவந்தது. உடனே தீயணைப்பு துறையினர் மலைபாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மலைபாம்பை பேச்சிப்பாறை அடர்ந்த காட்டு பகுதியில் விடுவதற்கு வேண்டிய நடவடிக்கை எடுத்தனர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • யார் அதிக பாம்புகளை கொல்கிறார்களோ அவரே வெற்றி பெற்றவர்
    • வெல்பவர்களுக்கு பரிசுத் தொகை ரூ.25 லட்சம்

    அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் பாம்பு பிடித்து கொல்லும் ஒரு வினோத போட்டி நடைபெறுகிறது.

    இந்த போட்டிக்கு உலகின் பல நாடுகளிலிருந்தும் போட்டியாளர்கள் ஆர்வமாக வந்து பங்கேற்கின்றனர்.

    இப்போட்டியில் பங்கு பெறும் போட்டியாளர்கள், பர்மிய வகை மலைப்பாம்புகளை பிடித்து கொல்ல வேண்டும். இதில், யார் அதிக பாம்புகளை கொல்கிறார்களோ அவர்கள் வெற்றியாளராக கருதப்படுகின்றனர்.

    புளோரிடா பைதான் சவால் எனும் இந்த போட்டியில் ஒவ்வொரு ஆண்டும் கனடா, பெல்ஜியம் மற்றும் லாட்வியா நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்கின்றனர்.

    16 அடி வரை நீளமுள்ள இந்த மலைப்பாம்புகளை பிடிக்க அதிக திறனும் துணிச்சலும் தேவைப்படும். ஆனாலும், ஆபத்தான இந்த போட்டியில் பங்கு பெறும் போட்டியாளர்கள், இதில் கிடைக்கும் புகழ் மற்றும் பணத்தால் ஈர்க்கப்பட்டு கலந்துக்கொள்கின்றனர்.

    போட்டியில் வெல்பவர்களுக்கு, பரிசுத் தொகை சுமார் ரூ.25 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புளோரிடாவின் தெற்கு பகுதியில் 20 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவில் உள்ள எவர்க்ளேட்ஸ் சதுப்புநில பகுதி. அங்கு அதிகமாக உலவும் பர்மிய மலைப்பாம்புகள் பிற உயிரினங்களை கொன்று, சுற்றுசூழல் சமநிலையை சேதப்படுத்துவதாகவும், அதனால் இந்த போட்டி அவசியமானது என உள்ளூர் வன மற்றும் இயற்கை பாதுகாவலர்கள் கூறுகின்றனர்.

    • மலைப்பாம்பு ஒன்று மேய்ந்து கொண்டிருந்த ஆட்டின் உடலை இறுக்கி தலையை விழுங்க தொடங்கியது.
    • வலி தாங்க முடியாமல் ஆடு கத்தியது. சத்தம் கேட்ட அன்னம்மா சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் தலித் வாடா பகுதியைச் சேர்ந்தவர் அன்னம்மா. இவர் 10-க்கும் ஏற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    நேற்று காலை ஊருக்கு அருகே உள்ள வனப்பகுதியில் ஆடுகளை மேய்ப்பதற்காக ஓட்டி சென்றார்.

    வனப்பகுதியில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன அப்போது 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று மேய்ந்து கொண்டிருந்த ஆட்டின் உடலை இறுக்கி தலையை விழுங்க தொடங்கியது.

    இதனால் வலி தாங்க முடியாமல் ஆடு கத்தியது. சத்தம் கேட்ட அன்னம்மா சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அருகில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்தார்.

    அவர்கள் ஆட்டை விழுங்கி கொண்டிருந்த மலைப்பாம்பை அடித்து கொன்றனர். ஆட்டை உயிருடன் மீட்டனர்.

    • பாம்பை கண்டதும் ஜேக் அதன் வாலை பிடித்து இழுக்கிறார். அப்போது பாம்பு அவரை கடிக்க முயற்சிக்கிறது.
    • நண்பர் ஓடி வந்து ஜேக்கை மீட்டதோடு பாம்பையும் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தை சேர்ந்தவர் ஜேக் வாலேரி. 22 வயதான இவர் ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். கடந்த 10-ந்தேதி இவர் அந்த பகுதி வழியாக சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது பெரிய மலைப்பாம்பு ஒன்று சாலையோரமாக செல்வதை கண்ட இவரும், இவரது நண்பர் ஸ்டீபனும் சேர்ந்து வெறும் கைகளாலேயே பாம்பை பிடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    பாம்பை கண்டதும் ஜேக் அதன் வாலை பிடித்து இழுக்கிறார். அப்போது பாம்பு அவரை கடிக்க முயற்சிக்கிறது. உடனே அவர் வாலை விட்டு விட்டு பாம்பின் வாயை முழு பலத்துடன் பிடித்து கொள்கிறார். அப்போது பாம்பு அவர் உடலை சுற்றுகிறது. உடனே அவரது நண்பர் ஓடி வந்து ஜேக்கை மீட்டதோடு பாம்பையும் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து ஜேக் வாலேரி கூறுகையில், இவ்வளவு பெரிய பாம்பை பிடிக்க முடிந்தது மிக பெரிய விஷயம். கடந்த ஆண்டு நானும், எனது உறவினரும் 18 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தோம். இவ்வளவு பெரிய பாம்புகளை நம்மால் கையாள முடியும் என்பதை அப்போது உணர்ந்தோம் என்றார்.

    • ஜெயராஜ் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
    • மலைப்பாம்பு, ஜெயராஜ் வீட்டில் வளர்த்து வந்த கோழியை விழுங்கி இருந்தது தெரியவந்தது.

    வடவள்ளி,

    கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூரை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது வீட்டின் கழிவறையில் மலைப்பாம்பு ஒன்று இருந்தது.

    இதை பார்த்த அவர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து பார்த்தனர். அப்போது, மலைப்பாம்பு, ஜெயராஜ் வீட்டில் வளர்த்து வந்த கோழியை விழுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 6 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை அட்டுக்கல் மலைப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.

    ×