search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதா அமிர்தானந்தமயி
    X
    மாதா அமிர்தானந்தமயி

    கேரளாவில் மழை வெள்ளத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி - மாதா அமிர்தானந்தமயி

    கேரளாவில் மழை வெள்ளத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று மாதா அமிர்தானந்தமயி அறிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

    ஆகஸ்டு மாதத்தின் முதல் வாரத்தில் மிக தீவிரமாக பெய்த மழை வடகேரளத்தின் 5 மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

    மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 111 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் மண்ணுக்குள் புதைந்த 40 பேர் கதி என்ன? என்பது தெரியவில்லை. இவர்களும் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அப்போது பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

    கேரளாவில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீண்டு வர பல்வேறு தரப்பில் இருந்தும் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. தன்னார்வலர்களும் நிவாரண பொருட்களை கேரளாவிற்கு அனுப்பி வருகிறார்கள்.

    தமிழகத்தில் இருந்தும் ஏராளமான நிவாரண பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதா அமிர்தானந்தமயியின் அமிர்தா மடம் சார்பிலும் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மாதா அமிர்தானந்தமயி கேரளாவில் மழை வெள்ளத்தால் உறவுகளை இழந்தவர் குடும்பத்திற்கு அமிர்தா மடம் சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கேரளாவில் மழை வெள்ளத்தால் உறவுகளை இழந்தவர்கள், இழப்பில் இருந்து மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன். சோகத்தில் தவிக்கும் அவர்களுக்கு இயன்ற உதவியை செய்ய விரும்புகிறேன். இதற்காக அமிர்தா மடம் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கும்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அமிர்தா மடம் சார்பில் ஹெல்ப்லைன் தொடங்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் இத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம். மடத்தின் தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபடுவார்கள்.

    கேரளாவில் இப்போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்கு மரங்களை வெட்டி அழித்ததும், இயற்கையை நாசப்படுத்தியதுமே காரணம் என்று கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×