search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகாவில் கனமழை
    X
    கர்நாடகாவில் கனமழை

    கர்நாடகா, ஆந்திராவில் பலத்த மழை - கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம்

    கர்நாடகா, ஆந்திராவில் கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.
    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    பெலகாவி, பாகல்கோட்டை, யாதகிரி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பிக்கொண்டு இருக்கின்றன. தொடர்ந்து பெய்யும் கனமழையால் ஏராளமான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    பெலகாவி மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக புனே-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஹூப்ளி டிவிசன் பகுதியில் ரெயில்வே தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.

    மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணா, கொய்னா உள்ளிட்ட நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகளில் இருந்து அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிரா மட்டுமின்றி வட கர்நாடகாவில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

    கொய்னா, கத்ரா உள்ளிட்ட அணைகளில் இருந்து 1 லட்சம் கன அடிக்கும் அதிகமான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வடகர்நாடக பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    வெள்ளத்தால் பெலகாவியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தது. வெள்ள மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மழை தொடர்வதால் மும்பையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் 8 விரைவு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. புனே மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புனே, கடாரா, நாசிக், கோலாப்பூர், பால்கர் மற்றும் தானே மாவட்டங்களில் நாளை வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×