search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவேகவுடா
    X
    தேவேகவுடா

    கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணியா?- தேவேகவுடா பேட்டி

    கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா பதிலளித்துள்ளார்.
    பெங்களூரு :

    முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    கர்நாடகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. ஆனால் சட்டசபையில் காலியாக உள்ள 17 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால், கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் எடுக்கும் முடிவை பொறுத்து நாங்கள் செயல்படுவோம். இந்த 17 தொகுதிகளில் ஜனதாதளம்(எஸ்) 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    மீதமுள்ள தொகுதிகள் காங்கிரசுக்கு சேர்ந்தவை ஆகும். 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் என்ன தீர்ப்பு வருகிறது என்பதை பார்க்க வேண்டும். அதனால் சட்டசபை இடைத்தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

    குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமிக்கு எங்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் நாங்கள் எதையும் மூடிமறைக்கவில்லை. சினிமா வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். அந்த பணிகள் முடிவடைந்ததும், கட்சியை பலப்படுத்தும் பணிகளில் அவர் ஈடுபடுவார்.

    நிகில் குமாரசாமி,  குமாரசாமி,

    கே.ஆர்.பேட்டை தொகுதியில் நிகில் குமாரசாமி போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அழுத்தம் கொடுக்கிறார்கள். பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி., ஹாசனுக்கு மட்டும் சேர்ந்தவர் அல்ல. மக்களவை கூட்டத்தில் அவர் கர்நாடகத்தின் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசியுள்ளார். 2 தேசிய கட்சிகளுக்கு இடையே மாநில கட்சியான ஜனதா தளம்(எஸ்) கட்சியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

    நாங்கள் யாருக்கும் போட்டியாக இருக்கமாட்டோம். துமகூரு தொகுதியில் தோல்வி அடைந்த பிறகு கட்சியை பலப்படுத்தும் பணிகளில் என்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளேன். மேல்சாதியில் ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்.

    குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது, பிராமணர்களின் மேம்பாட்டிற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சவிதா வளர்ச்சி வாரியம் அமைக்கப்பட்டு அவற்றுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
    Next Story
    ×