search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓரினச்சேர்க்கையை குற்றமாக்கும் சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு
    X

    ஓரினச்சேர்க்கையை குற்றமாக்கும் சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு

    ஒரே பாலினத்தவர்கள் விருப்பப்பட்டு ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதை குற்றமாக குறிப்பிடும் 377-வது சட்டப்பிரிவை நீக்கக்கோரும் வழக்கில் நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்கிறது. #Article377
    புதுடெல்லி:

    ’ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் இல்லற வாழ்வின் மகத்துவம் நாளுக்குநாள் மங்கி, மழுங்கி ’யாரோடும் யாரும்’ என்ற நிலைக்கு இன்று மாறிவருகிறது. குறிப்பாக யூடியூபில் சமீபத்தில் வெளியாகி பல்வேறு கடுமையான விமர்சனங்களுக்குள்ளான ‘லக்‌ஷ்மி’ போன்ற குறும்படங்கள் இந்திய கலாசாரத்தையும், தமிழர்களின் கற்புநெறி சார்ந்த வாழ்க்கை முறைகளையும் கேலிப்பொருளாகவும் கடும் கேள்விக்குரியதாகவும் சித்தரித்திருந்தது.

    ஜீன்ஸ், பீட்ஸா போன்ற மேற்கத்திய வாழ்வியில் முறைகளை கடைபிடித்துவந்த இந்தியர்கள் ஆடைகளை மாற்றுவதுபோல் ஜோடிகளையும் மாற்றிக்கொள்வதில் மிகுந்த முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளனர்.

    இது போதாது என கருதி, வெளிநாடுகளில் உள்ளதுபோல் ஆணோடு ஆணும் பெண்ணோடு பெண்ணும் கணவனும் கணவனுமாகவும் மனைவியும் மனைவியுமாகவும் வாழ விரும்பும் ஓரினச்சேர்க்கை உறவுமுறையில் நம்மவர்களிடையே நாட்டம் அதிகரித்து வருகிறது.

    ஆணும் பெண்ணும் என்னும் இயற்கையின் நியதியை கடந்து கடைபிடிக்கப்படும் பாலியல் வக்கிரங்கள் அனைத்தும் நமது கலாசாரத்தின்படி அருவெறுக்கத்தக்க அம்சமாகவும், பாவச்செயலாகவும், கொடுங்குற்றமாகவும் கருதப்பட்டு வந்தது.

    ஆனால், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னர், எல்.ஜி.பி.டி. எனப்படும் ஓரினச்சேர்க்கை பிரியர்களின் குரல் தற்போது சட்ட பாதுகாப்பை தேடி ஒலிக்க தொடங்கியுள்ளது.

    பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட குற்றவியல் சட்டப்பிரிவு 377-ன்படி இயற்கை நியதிக்கு மாறான வகையில் உடலுறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய செயலாக குறிப்பிடுகிறது. இந்த சட்டத்தை கடந்த 2013-ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டும் உறுதிப்படுத்தியது.

    பிரபல பாலிவுட் நடன இயக்குனர் என்.எஸ்.ஜோஹர், பத்திரிகையாளர் சுனில் மெஹ்ரா போன்ற பல்துறை பிரபலங்கள் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இப்படி உணர்வுப்பூர்வமாகவோ, விளம்பரத்துக்காகவோ தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. ஓரினச்சேர்க்கை பிரியர்களும் இந்நாட்டில் கவுரத்துக்குரிய குடிமக்களாக வாழும் சட்ட பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே இவ்வழக்குகளின் முக்கிய கோரிக்கையும், சாரம்சமாகவும் உள்ளது.

    இதுதொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள சில முக்கிய அம்சங்களையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்ட இந்த வழக்குகள் கிணற்றில் போட்ட கல்லாய் கிடந்தன.

    இந்நிலையில், லலித் சூரி குழுமம் என்னும் பிரபல விருந்தோம்பல் நிறுவனத்தின் உரிமையாளரான கேசவ் சூரி என்பவரும் இதே கோரிக்கையுடன் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

    தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் இந்த வழக்கு முதன்முதலாக விசாரணைக்கு வந்தபோது, இதை அவசர வழக்காக தொடர்ந்து விசாரித்து தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும் என மனுதாரர் கேசவ் சூரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷாலி பாசின் வலியுறுத்தினார்.

    தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா

    தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எ.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே அரசியலமைப்பு சட்ட அமர்வின்முன் நடைபெற்றுவரும் இதர வழக்குகளுடன் இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மேலும், இரு ஆண்கள் விருப்பப்பட்டு ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதை குற்றமாக குறிப்பிடும் சட்டப்பிரிவை நீக்கக்கோரும் இவ்வழக்குகள் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.

    மத்திய அரசு அளித்த விளக்கத்தின் அடிப்படையிலும் இருதரப்பினரின் வாதப்பிரதிவாதத்தை வைத்தும் ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

    இந்நிலையில், இவ்வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது. அனேகமாக, ஓரினச்சேர்க்கையை குற்றம் என அறிவிக்கும் சட்டப்பிரிவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  #Article377 #SCverdict
    Next Story
    ×