search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் பதவியை விட்டு கொடுக்க தயார்- காங்கிரஸ் திடீர் முடிவு
    X

    பிரதமர் பதவியை விட்டு கொடுக்க தயார்- காங்கிரஸ் திடீர் முடிவு

    பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. #ParliamentElection #Congress #RahulGandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலுக்கான அட்டவணை பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு இன்னும் 7 மாதங்களே இருப்பதால் தேர்தல் பணிகளை அனைத்துக் கட்சிகளும் இப்போதே தொடங்கி விட்டன.

    பாரதிய ஜனதா கட்சி 29 மாநிலங்களில் தனது முதல் கட்ட ஆய்வை முடித்து பிரசாரத்தை தொடங்கி விட்டது. அடுத்த மாதம் முதல் மோடியும், அமித்ஷாவும் பா.ஜ.க. மூத்த தலைவர்களும் மாநிலம் வாரியாக சுற்றுப்பயணத்தை அதிகப்படுத்த உள்ளனர்.

    இந்த நிலையில் பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று துடிப்புடன் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் அதற்கான பணிகளை இன்னமும் தொடங்காமல் உள்ளனர். காங்கிரசை பொறுத்த வரை மாநில கட்சிகளுடன் கூட்டணியை முடிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. அதில் பல்வேறு சிக்கல்கள் நீடிப்பதால் காங்கிரசின் பிரசாரம் இன்னமும் தொடங்கப்படவில்லை.


    இதற்கிடையே கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நடந்த மோடி அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி மிக ஆவேசமாக பேசினார். மோடி மீதும், மோடி அரசு மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சரமாரியாக பட்டாசு வெடிப்பது போல் வெடித்து தீர்த்தார்.

    ராகுலின் அந்த ஆவேச பேச்சு அவர் மீதான இமேஜை நாடு முழுவதும் கணிசமான அளவுக்கு உயர்த்தி உள்ளது. மோடிக்கு நிகரான போட்டியாளராக ராகுல் தன்னை உயர்த்திக் கொண்டு இருப்பதாக பல்வேறு தரப்பினரும் புகழாரம் சூட்டினார்கள். இதையடுத்து மறுநாளே நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுலை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டது.

    அதோடு மட்டுமின்றி கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்து வி‌ஷயங்களிலும் முடிவை எடுக்கும் அதிகாரம் ராகுலுக்கு கொடுத்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக காங்கிரசுடன் நட்பாக உள்ள தோழமை கட்சிகளும் ராகுலின் தலைமையை ஏற்க முன்வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் ராகுலுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்பதற்கு மாநிலங்களில் வலுவாக உள்ள கட்சிகள் தயங்குவதாக தெரிய வந்துள்ளது.

    தற்போதைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க., சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டீரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வலுவான ஆதரவு கட்சிகளாக உள்ளன. ஆனால் இந்த கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரட்ட முடியாத நிலை நீடிக்கிறது.


    திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி தனி அணியை தனது தலைமையில் தொடங்கி உள்ளார். இந்த அணி சார்பில் அடுத்த மாதம் 19-ந்தேதி கொல்கத்தாவில் பிரமாண்டமான பேரணி நடைபெற உள்ளது. அதில் அவர் பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் மம்தா பானர்ஜி காங்கிரசுடன் ஒத்து வருவாரா? என்ற சந்தேகம் நிலவுகிறது.

    பகுஜன்சமாஜ் கட்சி தலைவரான மாயாவதியும் ராகுலை தலைவராக ஏற்க தயங்குகிறார். மேலும் காங்கிரசை விட அதிக இடங்களில் தனது கட்சி போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் கை கோர்த்துள்ள மாயாவதி காங்கிரசுக்கு 8 இடங்கள் மட்டுமே கொடுக்க முடியும் என்று கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    அதுபோல சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் ராகுலை கூட்டணி தலைவராக ஏற்றுக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு இதுவரை நேரடி பதிலை அளிக்கவில்லை. அவரும் காங்கிரசுக்கு அதிக இடங்களை கொடுக்க விரும்பவில்லை. இதனால் 80 எம்.பி. தொகுதிகளை கொண்டுள்ள உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஒற்றை இலக்கத்தில் போட்டியிட வேண்டிய துரதிருஷ்டம் ஏற்படுமோ? என்ற நிலை நிலவுகிறது.

    உத்தரபிரதேசத்துக்கு அடுத்தபடியாக அதிக எம்.பி.க்களை வைத்துள்ள பீகாரிலும் காங்கிரஸ் தலைமையை ஏற்க லாலு பிரசாத் மகன்கள் தயங்குகிறார்கள். தங்களது தலைமையை காங்கிரஸ் ஏற்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சரத்பவார் தனியாக ஒரு கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதுபோல தேவேகவுடாவும் ராகுலை ஆதரிக்கும் முடிவில் ஊசலாட்டமான மனநிலைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

    பா.ஜ.க.வுடன் உறவை முறித்துக் கொண்டுள்ள தெலுங்கு தேசம், சிவசேனா கட்சிகள் காங்கிரசை ஆதரிக்குமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. அதுபோல தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, பிஜு ஜனதா தளம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் உள்ள சிறு கட்சிகளும் காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றன.

    இத்தகைய சூழ்நிலையில் மாநில கட்சிகள் உதவி இல்லாமல் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த முடியாது என்ற நிர்ப்பந்தம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. எனவே ராகுலை முன் நிறுத்தும் முடிவை காங்கிரஸ் கட்சி மாற்றிக் கொண்டுள்ளது.

    அதன்படி மாநில கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக மாநில கட்சியின் பெண் தலைவரை பிரதமர் வேட்பாளராக ஏற்க காங்கிரசில் ஒருமித்த கருத்து உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர்களில் சிலர் கூறுகையில், “ஆர்.எஸ்.எஸ். பின்னணி இல்லாதவர் பிரதமர் வேட்பாளராக இருந்தால் அதை நாங்கள் ஏற்போம். இதற்காக நாங்கள் மெகா கூட்டணியை அமைக்க தயாராக இருக்கிறோம்” என்றனர்.

    பிரதமர் பதவியையே விட்டுக் கொடுக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முன் வந்திருப்பது மாநில கட்சி தலைவர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பிரதமர் வேட்பாளர் யார் என்ற பேச்சு எழுந்துள்ளது.

    அநேகமாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அல்லது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகிய இருவரில் ஒருவரை காங்கிரஸ் முன்னிறுத்தி மெகா கூட்டணியை அமைக்கும் என்று கூறப்படுகிறது.

    மம்தா பானர்ஜி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவருக்கு சிவசேனா, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, பிஜு ஜனதாதளம் மற்றும் வடகிழக்கு மாநில கட்சிகளின் ஒட்டு மொத்த ஆதரவை பெற முடியும் என்றும் அதன் மூலம் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்.

    ஆனால் இந்த திட்டம் முழு வடிவம் பெறுமா? என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது. #ParliamentElection #Congress #RahulGandhi
    Next Story
    ×