search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீண்டும் மந்திரி பதவி ஏற்றவருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்
    X

    மீண்டும் மந்திரி பதவி ஏற்றவருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்

    பாலியல் புகாரில் சிக்கிய மந்திரிக்கு மீண்டும் பதவி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இவரது மந்திரி சபையில் தேசிய வாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசீந்திரன் போக்குவரத்து துறை மந்திரியாக பதவி வகித்து வந்தார்.

    இந்தநிலையில் அவர் தன்னுடன் டெலிபோனில் பேசிய ஒரு பெண்ணுடன் ஆபாசமாக பேசியதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக வழக்கு கோர்ட்டில் நடந்தபோது அந்த வழக்கில் தொடர்புடைய பெண் பல்டி அடித்ததால் சசீந்திரன் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து அவருக்கு கேரள மந்திரி சபையில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது. அவர் ஏற்கனவே வகித்து வந்த போக்குவரத்துத்துறை மீண்டும் அவருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. நேற்று கேரள கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் சசீந்திரன் மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார். விழாவில் முதல்-மந்திரி பினராய் விஜயன் மற்றும் மந்திரிகள் பங்கேற்றனர்.



    புகாரில் சிக்கிய மந்திரிக்கு மீண்டும் பதவி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள். கேரள அரசு தலைமை செயலகம் முன்பு நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு முரளிதரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் திரளான காங்கிரசார் கலந்து கொண்டு மந்திரி சசீந்திரனுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இதுதொடர்பாக முரளிதரன் எம்.எல்.ஏ. கூறும்போது கம்யூனிஸ்டு ஆட்சி கேரளாவில் அமைந்தபிறகு 3 மந்திரிகள் சர்ச்சையில் சிக்கி பதவியை இழந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் கம்யூனிஸ்டு ஆட்சியில் தான் நடைபெறுகிறது. மக்கள் விரோத அரசாக இந்த அரசு செயல்படுகிறது. சசீந்திரனுக்கு மீண்டும் மந்திரி பதவி வழங்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். #tamilnews
    Next Story
    ×