search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி: சச்சின் பைலட்டுக்கு ராகுல் காந்தி பாராட்டு
    X

    ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி: சச்சின் பைலட்டுக்கு ராகுல் காந்தி பாராட்டு

    ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டி உள்ளார்.
    புதுடெல்லி:

    3 எம்.பி. தொகுதி இடைத்தேர்தலிலும் பா.ஜனதா தோல்வியை தழுவியது.

    பா.ஜனதா ஆளும் மாநிலமான ராஜஸ்தானில் 2 தொகுதியிலும், திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்காளத்தில் ஒரு தொகுதியிலும் அந்த கட்சி தோல்வி அடைந்தது.

    ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் எம்.பி. தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கரண்சிங் யாதவ் 1 லட்சத்து 96 ஆயிரத்து 496 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர் ஐஸ்வந்த் சிங்கை தோற்கடித்தார்.

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் மகாந்த்சந்த் நாத் 2 லட்சத்து 83 ஆயிரத்து 895 ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜிதேந்திர சிங்கை தோற்கடித்து இருந்தார்.

    4 ஆண்டுகளுக்கு முன்பு 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பா.ஜனதா தற்போது 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்று இருப்பது மிகப்பெரிய பின்னடைவாகும்.

    அதே மாநிலம் அஜ்மீர் எம்.பி. தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரகுசர்மா 88,414 ஓட்டுகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர் ராம்ஸ்வரூப் லம்பாவை தோற்கடித்தார்.

    2014 தேர்தலில் இந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் சன்வார் லால்ஜட் 1,71,983 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சச்சின் பைலட்டை வீழ்த்தி இருந்தார். 4 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜனதா இந்த தொகுதியில் 84 ஆயிரம் ஓட்டில் தோற்று அதிர்ச்சி அடைந்துள்ளது.

    இதேபோல ராஜஸ்தான் மாநிலம் மண்டல்கர் எம்.எல்.ஏ. தொகுதி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் விவேக் தனகர் 12,976 ஓட்டுகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளரான சக்தி சிங்கை வீழ்த்தினார். 2013 சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் பா.ஜனதா 18,540 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    இந்த மாநிலத்தில் வசுந்தரா ராஜே தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 6 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில் 2 எம்.பி. மற்றும் ஒரு எம்.எல்.ஏ. தொகுதி இடைத்தேர்தலில் தோல்வியை தழுவி இருப்பது ஆளும் பா.ஜனதாவுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. வசுந்தரா அரசின் தோல்வியை இது காட்டுகிறது.

    மேறகு வங்காள மாநிலம் உலுபெரியா எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

    அந்த கட்சியை சேர்ந்த சமுக்தலா அகமத 4 லட்சத்து, 74 ஆயிரத்து 510 ஓட்டுகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர் அனுபம் மாலிக்கை தோற்கடித்தார். 2014 தேர்தலில் இந்த தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சுல்தான் அகமது 2 லட்சத்து ஆயிரத்து 222 ஓட்டு வித்தியாசத்தில் மார்க்சிஸ்டு வேட்பாளரை தோற்கடித்து இருந்தார். 4 ஆண்டுகளில் திரிணாமுல் காங்கிரஸ் கூடுதலாக 2.75 லட்சம் ஓட்டுகள் பெற்று முத்திரை பதித்து உள்ளது.

    இதேபோல நோபரா தொகுதி எம்.எல்.ஏ. தேர்தலில் காங்கிரசிடம் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது. அந்த கட்சி வேட்பாளர் சுனில்சிங் 63,102 ஓட்டுகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர் சந்திப்பானர்ஜியை வீழ்த்தினார்.

    2016-ம் ஆண்டு இங்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 1095 ஓட்டு வித்தியாசத்தில் திரிணாமுல் வேட்பாளர் மஞ்சு யாதவை தோற்கடித்து இருந்தார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த 2 எம்.பி. தொகுதி இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டி உள்ளார்.



    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ராஜஸ்தான் காங்கிரசை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். தேர்தலில் ஒவ்வொரு வரும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்று தந்தனர். இந்த தேர்தல் முடிவு மூலம் பா.ஜனதாவை ராஜஸ்தான் மக்கள் நிராகரித்து விட்டது தெரிய வந்துள்ளது.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார். #tamilnews
    Next Story
    ×