search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை இலை கிடைக்காததால் சசிகலா கடும் அதிர்ச்சி: தினகரன் 28-ந்தேதி சந்திப்பு
    X

    இரட்டை இலை கிடைக்காததால் சசிகலா கடும் அதிர்ச்சி: தினகரன் 28-ந்தேதி சந்திப்பு

    பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை வருகிற 28-ந்தேதி டி.டி.வி.தினகரன் சந்திப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இரட்டை இலை சின்னம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்ட தகவலை சசிகலா நேற்று தமிழ்செய்தி சேனலை பார்த்து தெரிந்து கொண்டார். பின்னர் அவர் இளவரசியுடன் இதுகுறித்து பேசிக் கொண்டிருந்தார்.

    பின்னர் அவர் சிறைத் துறை தலைமை சூப்பிரண்டு சோமசேகரை சந்தித்து ஒரு கடிதம் கொடுத்தார். அந்த கடிதத்தில் தன்னை வந்து தினகரன் சந்திக்குமாறு கூறப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தை சசிகலா வக்கீல் கிருஷ்ணப்பாவிடம் தலைமை சூப்பிரண்டு வழங்கினார்.

    பின்னர் வக்கீல் கிருஷ்ணப்பா தினகரனை போனில் தொடர்பு கொண்டு சசிகலா சந்திக்க விரும்பிய தகவலை தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட தினகரன் அடுத்தவாரம் பெங்களூரு வந்து சந்திப்பதாக உறுதி அளித்தார்.


    இதன்படி வருகிற 28-ந்தேதி தினகரன் பெங்களூரு வந்து சசிகலாவை சந்திப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து வக்கீல் கிருஷ்ணப்பாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    கடந்த 8-ந்தேதி தினகரன் சசிகலாவை சந்தித்து பேசினார். சிறை விதிமுறைகளின் படி 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே உறவினர்கள் சந்திக்க முடியும். அந்த கணக்குப்படி பார்த்தால் இன்று முதல் சசிகலாவை உறவினர்கள் சந்திக்கலாம். இன்று தினகரன் கோவையில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருப்பதால் அவர் அடுத்த வாரம் சசிகலாவை சந்திப்பார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஏற்கனவே 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு மன வேதனையில் இருந்த சசிகலாவுக்கு அவரது உறவினர்கள் வீடு மற்றும் நிறுவனங்களில் நடத்திய வருமான வரி சோதனை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறையில் அவருக்கு சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டது உறுதி என்று வினய் குமார் தலைமையிலான உயர் மட்டக்குழு விசாரணை முடிவில் தகவல் வெளியானது.

    இதனால் சசிகலா வி.ஐ.பி. அந்தஸ்தில் இருந்து சாதாரண கைதி போல நடத்தப்பட்டு வருகிறார். அவருக்கு மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகளே வழங்கப்படுகிறது.

    இரட்டை இலை சின்னம் தங்கள் கையை விட்டுபோய் விட்டது என்பதை அறிந்ததும் சசிகலா கடும் அதிர்ச்சி அடைந்தார். பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் உண்டு. அதற்காக மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறார். நேற்று இரட்டை இலை சின்னமும் எடப்பாடி அணிக்கு கிடைத்த தகவல் வெளியானதால் சசிகலாவுக்கு மேலும் அதிர்ச்சி ஏற்பட்டது. அவர் மதிய உணவு வாங்க வரவில்லை என்று செய்திகள் வெளியானது.

    இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    சசிகலா நேற்று மதிய உணவை 12.30 மணிக்கே முடித்து விட்டார். தேர்தல் கமி‌ஷன் அறிவிப்பு 3 மணிக்குத் தான் வெளியானது. இந்த தகவலை அறிந்த சசிகலா பதட்டத்துடன் இளவரசியுடன் சத்தமாக பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எங்களுக்கு தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×