search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோரக்பூரில் 71 குழந்தைகள் பலியான சம்பவம் மாநில அரசு ஏற்படுத்திய பேரிடர் - ராகுல் காந்தி காட்டம்
    X

    கோரக்பூரில் 71 குழந்தைகள் பலியான சம்பவம் மாநில அரசு ஏற்படுத்திய பேரிடர் - ராகுல் காந்தி காட்டம்

    உத்தரப்பிரதேசம் மாநிலம், கோரக்பூரில் உள்ள71 குழந்தைகள் பலியான சம்பவம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிகழ்ந்துள்ளது. இது மாநில அரசு ஏற்படுத்திய சோகம் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில், உரிய சிகிச்சை அளிக்க தவறியதால், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக 71 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

    இதற்கிடையே, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று கோரக்பூருக்கு வந்தார். கோரக்பூர் அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை இன்றி தங்களது குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோரை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். அவருடன் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை மந்திரி குலாம் நபி ஆசாத், மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பாபர் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ,எம்.எல்.ஏ.க்களும் வந்திருந்தனர்.

    பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, கோரக்பூர் மருத்துவமனையில் 71 பச்சிளம் தளிர்கள் பலியான சம்பவத்தை ஆக்சிஜன் பற்றாக்குறையால் மாநில அரசு ஏற்படுத்திய பேரிடர் என்று குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் அரசின் மெத்தனப்போக்கை மூடி மறைக்கவும், தவறு செய்தவர்களை காப்பாற்றவும் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் முயற்சிக்க கூடாது. அவர்கள் மீது உடனடியாக பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
    Next Story
    ×