search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கடவுளின் சொந்த நாடான கேரளா - கடவுளால் கைவிடப்பட்ட நாடாகி விட்டது: பாராளுமன்றத்தில் காரசார விவாதம்
    X

    கடவுளின் சொந்த நாடான கேரளா - கடவுளால் கைவிடப்பட்ட நாடாகி விட்டது: பாராளுமன்றத்தில் காரசார விவாதம்

    கடவுளின் சொந்த நாடு என கூறப்பட்டுவந்த கேரள மாநிலம் தற்போது கடவுளால் கைவிடப்பட்ட நாடாகி விட்டது என பா.ஜ.க., எம்.பி. பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    கேரள மாநிலத்தில் சமீபகாலமாக அரசியல் படுகொலைகள் தொடர்பாக இன்று பாராளுமன்ற மக்களவையில் நேரமில்லாத நேரத்தில் (ஜீரோ ஹவர்) விவாதிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குற்றம்சாட்டி பேசிய பா.ஜ.க. எம்.பி., பிரஹலாத் ஜோஷி, கேரளாவில் கடந்த 17 மாதங்களில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

    இந்த கொலைகளில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதால் இந்த கொலை வழக்குகளை சி.பி.ஐ. அல்லது தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இதே பிரச்சனை தொடர்பாக பேசிய புதுடெல்லி தொகுதி பா.ஜ.க. எம்.பி., மீனாட்சி லேக்ஹி, கேரள மாநிலத்தில் ஆளுங்கட்சியினர் தங்களது அரசியல் எதிரிகளை தலிபான் தீவிரவாதிகளின் பாணியில் கொன்று குவித்து வருவதாக தெரிவித்தார்.

    பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த தொண்டர்களின் குடும்பத்தாரும் தாக்குதலில் இருந்து தப்பவில்லை. இந்த குடும்பங்களை சேர்ந்த 7 பச்சிளம் குழந்தைகளும் தாக்கப்பட்டுள்ளனர். கண்ணூர் மாவட்டத்தில் மட்டும் 40 காங்கிரஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய கம்யூனிஸ்டு மற்றும் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தவர்களும் தாக்குதலுக்குள்ளாகி இருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    இந்த படுகொலைகளால் கடவுளின் நாடான கேரளா கடவுளால் கைவிடப்பட்ட நாடாகி விட்டது என மீனாட்சி லேக்ஹி கூறிய கருத்துக்கு இடதுசாரி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×