search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமா?: 17-ம் தேதி அவசர விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்
    X

    மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமா?: 17-ம் தேதி அவசர விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்

    மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமா? என்பது தொடர்பான வழக்கில் 17-ம் தேதி அவசர விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    மத்தியில் கடந்தகால காங்கிரஸ் ஆட்சியின்போது இந்திய மக்களுக்கான தனிநபர் அடையாளமாக ஆதார் அட்டை திட்டம் அறிமுக செய்யப்பட்டது.

    ஆட்சி மாற்றத்துக்கு பிறகு மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு ஆதார் அட்டையை செயல்படுத்தியது. அனைத்து வகையான அரசின் திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தி வருகிறது.

    முதலில் சமையல் கியாஸ் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரே‌ஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது. ரெயில்வேயில் பல்வேறு சலுகையை பெறவும் கட்டாயப்படுத்தப்பட்டது.

    மேலும் வருமான வரி தாக்கல் செய்ய பான்கார்டு பெறுவதற்கும், வாகனங்கள் பதிவு செய்யப்படுவதற்கும், வங்கி கணக்கு தொடங்குவதற்கும், செல்போன் இணைப்பு பெறுவதற்கும், டிரைவிங் லைசென்ஸ்சுக்கும் ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயப்படுத்தியது.


    ஆதார் எண்ணை கட்டாயப்படுத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணையின்போது, அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு அறீவித்தது.

    அரசின் சலுகையை பெற ஆதாரை கட்டாயபடுத்தக்கூடாது என்று தலைமை நீதிபதி ஜே.எஸ். கேகெர் தலைமையிலான பெஞ்ச் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

    ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறி மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் கல்வி உதவித்தொகை மற்றும் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் இலவச மதிய உணவு திட்டம் மற்றும் மத்திய அரசின் இதர சலுகைகளை பெறவும் ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாகவும், இந்த உத்தரவானது, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் தேசிய குழந்தைகள் உரிமை ஆணையத்தின் முன்னாள் தலைவர் சாந்தா சின்ஹா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தனி வழக்கு தொடரப்பட்டது.

    இவ்விவகாரம் தொடர்பாக அவசர விசாரணை நடத்த வேண்டும். மேலும், இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என சாந்தா சின்ஹா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் திவான் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர், ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுதான் விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, இவ்வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க அனுமதியளித்த சுப்ரீம் கோர்ட், அடுத்த விசாரணையை வரும் 17-ம் தேதி நடத்தவும் ஒப்புதல் அளித்துள்ளது.
    Next Story
    ×