என் மலர்
இந்தியா
- உரிமைகள் அடிப்படையிலான, தேவைக்கேற்ப வழங்கப்படும் உத்தரவாதங்களை அழித்து, மத்திய அரசிடம் இருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு பங்கீட்டுத் திட்டமாக மாற்றுகிறது.
- கோடிக்கணக்கான தொழிலாளர்களைப் பாதிக்கும் ஒரு சட்டத்தை ஆய்வு செய்யாமல், நிபுணர் ஆலோசனை பெறாமல் மற்றும் பொது மக்கள் கருத்து கேட்காமல் ஒரு போதும் திணிக்கப்பட்டிருக்கக் கூடாது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமான விக்சித் பாரத்-ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (விபி-ஜி ராம் ஜி) என்ற புதிய ஊரக வேலை திட்ட மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
20 ஆண்டுகால மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ) நேற்று ஒரே இரவில் மோடி அரசாங்கம் தகர்த்துவிட்டது.
விபி - ஜி ராம் ஜி என்பது எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ திட்டத்தின் மறுசீரமைப்பு அல்ல. உரிமைகள் அடிப்படையிலான, தேவைக்கேற்ப வழங்கப்படும் உத்தரவாதங்களை அழித்து, மத்திய அரசிடம் இருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு பங்கீட்டுத் திட்டமாக மாற்றுகிறது. இது அடிப்படையிலேயே மாநிலங்களுக்கும், கிராமங்களுக்கும் எதிரானது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் பெண்களுக்குத்தான் அதிகம் உதவியது. இந்த திட்டத்தை மாநில அரசுடன் நிதிப்பங்கீடு செய்யும்போது பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், நிலமற்ற தொழிலாளர்கள், ஏழ்மையில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும்தான் முதலில் வெளியேற்றப்படுவார்கள்.
விபி-ஜி ராம் ஜி மசோதா எவ்வித ஆய்வுமின்றி பாராளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டது. மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
கோடிக்கணக்கான தொழிலாளர்களைப் பாதிக்கும் ஒரு சட்டத்தை ஆய்வு செய்யாமல், நிபுணர் ஆலோசனை பெறாமல் மற்றும் பொது மக்கள் கருத்து கேட்காமல் ஒரு போதும் திணிக்கப்பட்டிருக்கக் கூடாது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டமானது உலகின் மிகவும் வெற்றிகரமான வறுமை ஒழிப்பு மற்றும் அதிகாரமளிப்புத் திட்டங்களில் ஒன்றாகும்.
கிராமப்புற ஏழைகளின் கடைசிப் பாதுகாப்பு அரணை அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த நடவடிக்கையைத் தோற்கடிக்கவும், சட்டத்தை திரும்பப் பெறுவதை உறுதி செய்யவும், தொழிலாளர்கள், பஞ்சாயத்துகள் மற்றும் மாநிலங்களுடன் நாங்கள் துணை நிற்போம். இவ்வாறு ராகுல்காந்தி கூறி உள்ளார்.
- இதற்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.
- நிறுவனங்களுடன் இணைந்து அரசு விரிவான ஆய்வுகளை நடத்தியுள்ளது.
கமல் ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் கமல் ஹாசன் அக்கூட்டணியால் மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நடப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் கமல் ஹாசன் எம்.பியாக தான் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய முதல் கேள்வி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பெட்ரோலுடன் வழக்கமான 10 சதவீதத்திற்கு பதிலாக 20 சதவீதம் எத்தனால் கலக்கும் மத்திய அரசின் E20 திட்டம் குறித்து கமல் ஹாசன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.
கமல் ஹாசனின் கேள்விகள்:
1)E20 எரிபொருளால் வாகனத்தின் மைலேஜ் மற்றும் எஞ்சின் பாகங்கள் பாதிக்கப்படுமா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளதா?
2) பழைய வாகனங்களுக்கு ஏற்ற E10 பெட்ரோல் நாடு முழுவதும் கிடைப்பது நிறுத்தப்பட்டது ஏன்? அதனை மீண்டும் கொண்டுவரும் திட்டம் உள்ளதா?
3) E20 பயன்பாட்டால் எஞ்சின் சேதமடைந்தால் அதற்கான உத்தரவாதம் அல்லது காப்பீடு குறித்து வழிகாட்டுதல்கள் உள்ளனவா?
நிதின் கட்கரி எழுத்துபூர்வமாக அளித்த பதில்:
நிறுவனங்களுடன் இணைந்து அரசு விரிவான ஆய்வுகளை நடத்தியுள்ளது. E20 எரிபொருள் குறித்து நடத்தப்பட்ட கள சோதனைகளில் வாகனங்களின் செயல்பாட்டில் எந்தப் பாதிப்பும் கண்டறியப்படவில்லை.
பழைய வாகனங்களில் கூட, E20 எரிபொருளைப் பயன்படுத்துவதால் எஞ்சின் தேய்மானமோ அல்லது செயல்திறன் குறைவோ ஏற்படவில்லை என்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாகனத்தின் மைலேஜ் என்பது எரிபொருளை மட்டும் சார்ந்தது அல்ல. முறையான பராமரிப்பு, டயர் காற்றழுத்தம் மற்றும் ஏசி பயன்பாடு போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தே அமைகிறது.
எத்தனால் கலப்பு அதிகரிப்பது நாட்டின் இறக்குமதிச் செலவைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதில் வந்தே மாதரம் பாடல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்டவை குறித்து காரசார விவாதங்கள் நடந்தன.
- காற்று மாசு குறித்து விவாதிக்கப்படாமலேயே கூட்டத்தொடர் முடிந்தது/
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டத்தொடர் 19-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
15 அமர்வுகள் கொண்ட குளிர்கால கூட்டத்தொட ரின் முதல் 2 நாட்களில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் பணி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. 3-ந் தேதி முதல் கூட்டத் தொடரின் அலுவல்கள் நடந்தன.
இதில் வந்தே மாதரம் பாடல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்டவை குறித்து காரசார விவாதங்கள் நடந்தன. அணுசக்தித் துறையில் தனி யாரை அனுமதிப்பது உள்பட முக்கிய மசோதாக்கள் இரு அவையிலும் நிறை வேற்றப்பட்டன.
மக்களவையில் நேற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமான விக்சித் பாரத்-ரோஜ்கர் மற்றும் அஜீவிகாமிஷன் (விபி-ஜி ராம் ஜி) மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் நிறைவேறியது.
இந்த நிலையில் இன்று காலை மக்களவை கூடிய தும் குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுவதாகவும், கால வரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அப்போது இந்தக் கூட்டத்தொடரின் போது சபையின் செயல்பாடு 111 சதவீதமாக இருந்தது என்று ஓம் பிர்லா கூறினார்.
மேல்சபை இன்று காலை கூடியதும் அவைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், 15 நாட்கள் நடைபெற்ற கூட்டத் தொடரின் போது மேற்கொள்ளப்பட்ட சட்ட மியற்றும் மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்த சுருக்கத்தை வாசித்தார்.
பின்னர் மேல்-சபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அவை தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் அறிவித்தார். இதையடுத்து மேல் சபையிலும் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவுபெற்றது. இரு அவைகளின் நிறைவிலும் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது. இன்று டெல்லி காற்று மாசு குறித்து விவாதிக்கப்பட இருந்த நிலையில் அது குறித்து விவாதிக்கப்படாமலேயே தொடர் முடிவுக்கு வந்தது.
- மத்திய அரசின் நிதியில் இருந்து ஒதுக்கீட்டை இவ்வளவு குறைக்கும்போது, மாநிலங்களால் அதைச் சமாளிக்க முடியாது.
- இதன் பொருள், அந்தத் திட்டம் செயலிழந்துவிடும் என்பதே.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றம் செய்து புதிய விதிகளை அறிமுகம் செய்யும் மசோதா நேற்று பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேதப்பட்டது. இது ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின் இது அமலுக்கு வரும்.
மசோதாவின்படி இந்தத் திட்டத்திற்கு விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சுருக்கமாக VB G RAM G என அழைக்கப்படுகிறது.
திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கும், புதிய திட்டத்தில் ஏழைகளுக்கு பாதகமாக உள்ள அம்சங்களுக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேற்று மசோதா தாக்கலின்போது எதிர்கட்சி எம்.பிக்கள் மசோதா நகலை கிழித்து எறிந்தனர். மேலும் நேற்று இரவு முழுவதும் பல எம்.பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் தர்ணா நடத்தினர்.
இந்நிலையில் குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றும் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய எதிர்காட்சி எம்.பிக்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, "இந்த மசோதா மிகவும் ஏழ்மையான மக்களுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கப் போகிறது. ஏனென்றால், அசல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், அது வடிவமைக்கப்பட்ட விதத்தின்படி அதில் 90% நிதியை மத்திய அரசு வழங்கியது.
கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், மிகவும் ஏழைகளாக இருந்து வேலைவாய்ப்பு பெறுவதில் சிரமப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய ஆதரவாகவும் இருந்தது.
கடந்த 20 ஆண்டுகளாக, இது ஏழை மக்களுக்கு, குறிப்பாக எதுவுமற்றவர்களுக்கு உதவிய ஒரு நல்ல திட்டமாகச் செயல்பட்டு வருகிறது. இப்போது, இந்த மசோதாவின் புதிய வடிவத்தில், மத்திய அரசின் நிதியில் இருந்து ஒதுக்கீட்டை இவ்வளவு குறைக்கும்போது, மாநிலங்களால் அதைச் சமாளிக்க முடியாது. இதன் பொருள், அந்தத் திட்டம் செயலிழந்துவிடும், அது மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதே" என்று தெரிவித்தார்.
- 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது.
- உதயம் இனி தேசிய அளவிலான பிராண்டாக மாற்றப்படும் என்று ரிலையன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற உணவுப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான 'உதயம்' பிராண்டை ரிலையன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் நுகர்வோர் பொருட்கள் பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ் லிமிடெட் உதயம் அக்ரோ புட்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கியுள்ளது.
ஒப்பந்தத்தின்படி, உதயம்ஸ் அக்ரோ ஃபுட்ஸ் நிறுவனத்தில் ரிலையன்ஸ் பெரும்பான்மையான பங்குகளைக் வைத்திருக்கும். அதேநேரம், பழைய உரிமையாளர்கள் ஒரு சிறிய பங்கைத் தக்க வைத்துக் கொள்வார்கள்.
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் உதயத்தின் பருப்பு வகைகள், அரிசி, மசாலாப் பொருட்கள், தின்பண்டங்கள் போன்றவை தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றவை.
தமிழ்நாட்டின் பாரம்பரியமான மற்றும் நம்பகமான இந்த பிராண்டை, ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் நாடு தழுவிய அளவில் கொண்டு செல்லவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் ஆகும்.
குறைந்த விலையில் உதயம் இனி தேசிய அளவிலான பிராண்டாக மாற்றப்படும் என்று ரிலையன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தென்னிந்தியாவின் உணவுப் பொருட்கள் சந்தையில் ரிலையன்ஸ் தனது பிடியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
- 12 முதல் 15 வயதுக்குள்பட்ட ஆறு குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- பாதிக்கப்பட்ட 6 குழந்தைகளுக்கும் தற்போது எச்.ஐ.விக்கான உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தலசீமியா என்பது ஹீமோகுளோபின் உற்பத்தியை பாதிக்கும் மரபணு ரத்தக்கோளாறு ஆகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ரத்தம் செலுத்தப்பட வேண்டும்.
அந்த வகையில் மத்தியபிரதேசத்தின் சத்னா, ஜபல்பூர் மற்றும் பிற மாவட்டங்களில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் உதவியுடன் ரத்தம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் தலசீமியா நோய்க்கு ரத்தம் செலுத்தி கொண்ட 12 முதல் 15 வயதுக்குள்பட்ட ஆறு குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரத்த வங்கி மூலம் ஏற்றப்பட்ட ரத்தம் வழியேதான் குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டதாக குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.
இது குறித்து 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில சுகாதாரத்துறை கடந்த டிசம்பர் 16-ம் தேதி 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது
அக்குழு தாக்கல் செய்த முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில் ரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் தேவேந்திர படேல் மற்றும் ஆய்வக டெக்னீஷியன்களான ராம் பாய் திரிபாதி, நந்தலால் பாண்டே ஆகிய மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சத்னா மாவட்ட மருத்துவமனையின் சிவில் சர்ஜன் மனோஜ் சுக்லாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முறையான பதில் அளிக்காத பட்சத்தில் அவர் மீதும் துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட 6 குழந்தைகளுக்கும் தற்போது எச்.ஐ.விக்கான உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முழுமையான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
- பொய்யான உறுதிமொழி அளிக்கப்பட்டு ரஷிய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படுகின்றனர்.
- இந்த ஆண்டு செப்டம்பர் முதல் உக்ரைன் போர் மண்டலத்தில் குறைந்தது நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 59 பேர் காணாமல் போயுள்ளனர்.
உக்ரைன் உடனான போரில் ரஷிய ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட்டு பணியாற்றிய 2 இந்தியர்கள் அண்மையில் சண்டையில் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் கடந்த புதன்கிழமை இந்தியா வந்தடைந்தது.
இறந்தவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த அஜய் கோதர் (22) மற்றும் உத்தரகண்டைச் சேர்ந்த ராகேஷ் குமார் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒரு வருடம் முன்பு, அஜய் மற்றும் ராகேஷ் இருவரும் மாணவர் விசாவில் ரஷ்யாவுக்குச் சென்றிருந்தனர். அங்கு பொய்யான வேலைவாய்ப்பு உறுதிமொழி அளிக்கப்பட்டு இருவரும் ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு, உக்ரைனுக்கு எதிராகப் போராட போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.
இந்த ஆண்டு செப்டம்பர் முதல் உக்ரைன் போர் மண்டலத்தில் குறைந்தது நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 59 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதற்கிடையே நேற்று மாநிலங்களவையில் கேள்விக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பதில் அளிக்கையில், ரஷிய ஆயுதப் படைகளில் பணியாற்றிய 26 இந்தியர்கள் இறந்துள்ளதாகவும், ஏழு பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்திய குடிமக்கள் இராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட மாட்டார்கள் என்று ரஷியா கடந்த ஆண்டு உறுதியளித்த போதிலும், ரஷிய தரைப்படைகளில் இந்தியர்கள் தொடர்ந்து சேர்க்கப்படுவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் ரஷிய அதிபர் புதின் இந்தியா வந்து பிரதமர் மோடியுடன் டெல்லியில் இந்தியா - ரஷியா உச்சிமாநாட்டில் கலந்துகொண்டபோதும் தீர்வு எட்டப்படாமல் இந்தியர்களின் உயிரிழப்புகள் தொடர்கின்றன.
- நுஸ்ரத் பர்வீனின் ஹிஜாப் முகத்திரையை அகற்றி நிதிஷ் குமார் அவரது முகத்தை பார்த்தார்.
- அவமானத்தின் சுமை காரணமாக தான் அவர் பணியில் சேர விரும்பவில்லை என்று நுஸ்ரத் கூறியதாக அவரது சகோதரர் தெரிவித்தார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமாரால் அரசு நிகழ்வின் போது ஹிஜாப் கழற்றப்பட்ட பெண் மருத்துவர் நுஸ்ரத் பர்வீன் தனது அரசு வேலையை ஏற்க மறுத்துள்ளார்.
அரசுத் திட்டத்தின் கீழ் 1,000க்கும் மேற்பட்ட ஆயுஷ் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆயுஷ் மருத்துவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் போது, நுஸ்ரத் பர்வீனின் ஹிஜாப் முகத்திரையை அகற்றி நிதிஷ் குமார் அவரது முகத்தை பார்த்தார்.
இதற்கு ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் பெண் மருத்துவர் நுஸ்ரத் தனது பணியை ராஜினாமா செய்தார்.
இந்த மாதம் 20 ஆம் தேதி அவருக்கு பணியில் சேர நியமனக் கடிதம் கிடைத்ததாகவும், ஆனால் அவர் பணியில் சேரவில்லை என்றும் அவரது சகோதரர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
அவமானத்தின் சுமை காரணமாக தான் அவர் பணியில் சேர விரும்பவில்லை என்று நுஸ்ரத் கூறியதாக அவரது சகோதரர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். மேலும் பணியில் சேர்த்த அரசு தரப்பில் இருந்து நிர்பந்திக்கப்படுவதாவும் அவர் தெரிவித்தார்.
- மக்களவையில் நிறைவேறிய நிலையில் நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஜ
- நமது தொழில்நுட்பத் துறைக்கு ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் தருணமாகும்.
இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களைத் தொடங்க அனுமதிக்கும் 'SHANTHI' மசோதா புதன்கிழமை மக்களவையில் நிறைவேறிய நிலையில் நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு இந்த மசோதா சட்டமாகும்.
இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 'SHANTI' மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது, நமது தொழில்நுட்பத் துறைக்கு ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் தருணமாகும்.
இந்த மசோதா நிறைவேற ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எனது நன்றிகள். செயற்கை நுண்ணறிவுக்கு ஊக்கமளிப்பது முதல் பசுமை உற்பத்திக்கு வழிவகுப்பது வரை, இது நாட்டிற்கும் உலகிற்கும் ஒரு தூய்மையான எரிசக்தி எதிர்காலத்திற்குத் தீர்க்கமான உந்துதலை அளிக்கிறது.
இது தனியார் துறைக்கும் நமது இளைஞர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகளையும் திறந்துவிடுகிறது. இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், புதுமைகளைப் படைப்பதற்கும், கட்டமைப்பதற்கும் இதுவே மிகச் சரியான நேரம்!" என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே எதிர்க்கட்சி எம்.பிக்கள், அணுசக்தி துறையை தனியார்மயமயக்குவதற்கு கவலை தெரிவித்தனர்.
- இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களைத் தொடங்க அனுமதிக்கும் அணுசக்தி மசோதா.
- பாதுகாப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளை இந்த மசோதா கையாளவில்லை
இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களைத் தொடங்க அனுமதிக்கும் 'SHANTHI' மசோதா புதன்கிழமை மக்களவையில் நிறைவேறிய நிலையில் நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு இந்த மசோதா சட்டமாகும்.
நேற்று மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி எம்.பிக்கள், அணுசக்தி துறையை தனியார்மயமயக்குவதற்கு கவலை தெரிவித்தனர்.
இருப்பினும், தனது உரையில், அணுசக்தி அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த மசோதா நாட்டின் அணுசக்தித் துறையில் பெரும் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்று கூறினார்.
காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், இந்தியாவில் அணுசக்தியின் வளமான வரலாறு 2014 க்கு பல தசாப்தங்களுக்கு முன்பே தொடங்கியது என்று சுட்டிக்காட்டினார்.
அறிவியல் உட்பட அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பாஜக ஆட்சிக்கு வந்த 2014 இல் தொடங்கியது என்று இப்போது நமக்கு பொய் சொல்லப்படுகிறது என தெரிவித்தார்.
திமுக எம்பி வில்சன், பாதுகாப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளை இந்த மசோதா கையாளவில்லை என்றும், காலநிலை மாற்றத்திற்கு மத்தியில் அணுசக்தி நிறுவல்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார்.
பிஆர்எஸ் எம்பி சுரேஷ் ரெட்டி, பாதுகாப்பு குறித்த கவலைகளைப் எழுப்பி, மசோதாவை தேர்வுக் குழுவிற்கு பரிந்துரைக்க வேண்டும் அல்லது சுற்றுச்சூழல் குழுவின் நிலையான மேற்பார்வையில் வைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
அணுசக்தி விநியோகஸ்தர்களுக்கு பயனளிக்கும் வகையில் இதுபோன்ற மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதாக சிபிஐ(எம்) நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம் குற்றம் சாட்டினார்.
- விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது.
- புதிய திட்டம் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அம்சங்களை கொண்டுள்ளதாகவும் கூறி மசோதா நகலை கிழித்தெறிந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றம் செய்து புதிய விதிகளை அறிமுகம் செய்யும் புதிய மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மசோதாவின்படி இந்தத் திட்டத்திற்கு விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சுருக்கமாக VB G RAM G என அழைக்கப்படுகிறது. புதிய மசோதாவின் கீழ் வேலைவாய்ப்பு உறுதி 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்துதல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய திட்டம் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அம்சங்களை கொண்டுள்ளதாகவும் கூறி மசோதா நகலை கிழித்தெறிந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் மசோதா நிறைவேறியது.
இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் பாராளுமன்றத்தில் அமர்ந்து பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இந்தச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கக்கூடும்
- பொது இடங்களில் பேசப்படும் உரைகள் மட்டுமின்றி, புத்தகங்கள், சமூக ஊடகங்கள் (வாட்ஸ்அப், வீடியோக்கள்) மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் பகிரப்படும் வெறுப்புச் செய்திகளுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்
மதம், சாதி ரீதியாக வெறுப்பைப் பரப்பி இருதரப்பினர் இடையான இணக்கத்தை குலைக்கும் வகையில் பேசுவது, எழுதுவது ஆகியவற்றை குற்றமாக்கி கர்நாடக அரசு சட்டம் இயற்றியுள்ளது. ஏப்ரல் மாதம் அஷ்ரஃப் என்ற முஸ்லிம் நபர் அடித்துக் கொல்லப்பட்டதில் தொடங்கி, கடலோர கர்நாடகாவில் தொடரும் வகுப்புவாதக் கொலைகளைத் தொடர்ந்து இந்த சட்டத்தை கர்நாடக அரசு இயற்றியது.
கர்நாடக சட்டமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்கள் தடுப்பு மசோதா 2025 கடந்த டிச.10ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மதம், இனம், சாதி அல்லது சமூகம், பாலினம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி, என எவை வைத்தும் ஒருவரை இழிவாகப் பேசினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவர்.
இது இந்துக்களை குறிவைத்து இயக்கப்பட்டது என்றும், இந்தச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கக்கூடும் என்றும், அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தப்படலாம் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தநிலையில், இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
கர்நாடக சட்டப்பேரவையில் இந்த மசோதாவை விளக்கிப் பேசிய மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா, "சமீப காலங்களில், சமூகத்தைப் புண்படுத்தும் கருத்துகளை பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்தப் போக்கு கணிசமாக அதிகரித்துள்ளது. இவற்றால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது நமக்குத் தெரியாது" என்று கொலைகள், தாக்குதல்கள் மற்றும் அதிகரித்து வரும் சமூக பதற்றங்களைக் குறிப்பிட்டு அவர் கூறினார்.
பொது இடங்களில் பேசப்படும் உரைகள் மட்டுமின்றி, புத்தகங்கள், சமூக ஊடகங்கள் (வாட்ஸ்அப், வீடியோக்கள்) மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் பகிரப்படும் வெறுப்புச் செய்திகளுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும். வெறுப்புப் பேச்சில் ஈடுபடும் அமைப்புகள் அல்லது குழுக்களின் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.
தண்டனை
இந்த மசோதா சட்டமாக மாறும்பட்சத்தில் குற்றத்தில் ஈடுபட்டால் முதல்முறை 1 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும். தொடர்ந்து மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டால், 2 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.






