என் மலர்
இந்தியா

கட்டாயப்படுத்தப்பட்டு ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 26 இந்தியர்கள் மரணம் - மத்திய அரசு
- பொய்யான உறுதிமொழி அளிக்கப்பட்டு ரஷிய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படுகின்றனர்.
- இந்த ஆண்டு செப்டம்பர் முதல் உக்ரைன் போர் மண்டலத்தில் குறைந்தது நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 59 பேர் காணாமல் போயுள்ளனர்.
உக்ரைன் உடனான போரில் ரஷிய ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட்டு பணியாற்றிய 2 இந்தியர்கள் அண்மையில் சண்டையில் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் கடந்த புதன்கிழமை இந்தியா வந்தடைந்தது.
இறந்தவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த அஜய் கோதர் (22) மற்றும் உத்தரகண்டைச் சேர்ந்த ராகேஷ் குமார் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒரு வருடம் முன்பு, அஜய் மற்றும் ராகேஷ் இருவரும் மாணவர் விசாவில் ரஷ்யாவுக்குச் சென்றிருந்தனர். அங்கு பொய்யான வேலைவாய்ப்பு உறுதிமொழி அளிக்கப்பட்டு இருவரும் ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு, உக்ரைனுக்கு எதிராகப் போராட போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.
இந்த ஆண்டு செப்டம்பர் முதல் உக்ரைன் போர் மண்டலத்தில் குறைந்தது நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 59 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதற்கிடையே நேற்று மாநிலங்களவையில் கேள்விக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பதில் அளிக்கையில், ரஷிய ஆயுதப் படைகளில் பணியாற்றிய 26 இந்தியர்கள் இறந்துள்ளதாகவும், ஏழு பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்திய குடிமக்கள் இராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட மாட்டார்கள் என்று ரஷியா கடந்த ஆண்டு உறுதியளித்த போதிலும், ரஷிய தரைப்படைகளில் இந்தியர்கள் தொடர்ந்து சேர்க்கப்படுவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் ரஷிய அதிபர் புதின் இந்தியா வந்து பிரதமர் மோடியுடன் டெல்லியில் இந்தியா - ரஷியா உச்சிமாநாட்டில் கலந்துகொண்டபோதும் தீர்வு எட்டப்படாமல் இந்தியர்களின் உயிரிழப்புகள் தொடர்கின்றன.






