என் மலர்tooltip icon

    இந்தியா

    • இந்த தாக்குதலை பார்த்த தனது மகள் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
    • தங்கள் ஊழியரின் இத்தகைய நடத்தையை வன்மையாகக் கண்டிப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

    டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானி ஒருவர் பயணியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் அங்கித் திவான் என்பவர், ஸைப்ஸ் ஜெட் விமானத்தில் ஏறுவதற்கு, தனது 7 வயது மகள், 4 மாத கைக்குழந்தை மற்றும் மனைவியுடன் பாதுகாப்பு சோதனைக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது ஊழியர்கள் என்ட்ரி வழியாக வரிசையில் புகுந்து முன்னால் செல்ல முயன்ற ஏர் இந்தியா விமானி வீரேந்தர் என்பவரை அங்கித் திவான் கடிந்துகொண்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த விமானி வீரேந்தர், இது ஊழியர்கள் என்ட்ரி என்றும், திவானை படிப்பறிவு இல்லையா என்று திட்டியுள்ளார். அதோடு அவரை தாக்கியும் உள்ளார்.

    இந்தத் தாக்குதலில் அங்கித் திவானின் முகத்தில் ரத்தம் வழிந்தது.முகம் முழுவதும் ரத்தக் கறையுடன் இருக்கும் தனது புகைப்படத்தை அங்கித் திவான் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், இந்த தாக்குதலை பார்த்த தனது மகள் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து புகார் அளிக்க வேண்டாம் என அதிகாரிகள் தன்னை வற்புறுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் ஊழியரின் இத்தகைய நடத்தையை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி வருகிறது.  

    • தண்டவாளத்தில் யானைகள் கூட்டம் இருப்பதைக் கண்டதும், ரெயில் ஓட்டுநர் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தினார்.
    • விபத்து குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுகாத்தி:

    மிசோரம் மாநிலம் சாய்ரங்கில் இருந்து புதுடெல்லிக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இன்று அதிகாலை அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சுமார் 126 கி.மீ தொலைவில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது தண்டவாளப் பகுதியில் யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தன. வேகமாக வந்த ரெயில் யானைகள் மீது மோதியது. இந்த விபத்தில் 8 யானைகள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. ஒரு குட்டி யானை படுகாயம் அடைந்தது. தகவல் அறிந்த மீட்பு குழுவினர் உடனடியாக வந்து படுகாயம் அடைந்த குட்டி யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

    மேலும் இந்த விபத்தில் சில ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. ஆனால் ரெயிலில் பயணம் செய்தவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை. விபத்து நடந்த பகுதிக்கு நிவாரண ரெயில்கள் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் விரைந்தனர். யானைகள் வழித்தடமாக குறிப்பிடப்படாத இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    தண்டவாளத்தில் யானைகள் கூட்டம் இருப்பதைக் கண்டதும், ரெயில் ஓட்டுநர் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தினார். எனினும், யானைகள் மீது மோதியதால் ரெயில் தடம் புரண்டது. ரெயில் தடம் புரண்டதாலும், யானையின் உடல் பாகங்கள் தண்டவாளங்களில் சிதறிக் கிடந்ததாலும், அசாம் மற்றும் வடகிழக்கின் பிற பகுதிகளுக்கான ரெயில் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

    இந்த விபத்து குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுக்கடை ஒன்றின் அருகே நின்று கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு போதையில் தள்ளாடியபடி வந்த 17 வயது சிறுவன், மேலும் மது வாங்க ரூ.10 கேட்டுள்ளார்.

    ஆந்திராவில் மது வாங்க 10 ரூபாய் தராத ஆத்திரத்தில், 49 வயது நபரை 17 வயது சிறுவன் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த தாத்தாஜி (49) என்ற நபர் நேற்று முன்தினம் மதுக்கடை ஒன்றின் அருகே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு போதையில் தள்ளாடியபடி வந்த 17 வயது சிறுவன், மேலும் மது வாங்குவதற்காக தாத்தாஜியிடம் 10 ரூபாய் கேட்டுள்ளான். தாத்தாஜி பணம் தர மறுத்துள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தாத்தாஜி அந்தச் சிறுவனை அடித்ததாகக் கூறப்படுகிறது.

    இதனால் கோபமடைந்த சிறுவன், அங்கிருந்து சென்று ஒரு கத்தியை எடுத்து வந்து, மதுக்கடைக்கு சற்று தொலைவில் வைத்து தாத்தாஜியை சரமாரியாகக் குத்தினான். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுவனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.    

    • கிராம பஞ்சாயத்து அலுவலகம் அருகே ஒரு சைரன் அமைத்தனர்.
    • பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சுவர்ண விதான சவுதா அருகில் உள்ளது ஹலகா கிராமம். இங்கு 1452 வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பெரும்பாலான குழந்தைகள் செல்போன்களில் மூழ்கினர். மேலும் பொதுமக்கள் டி.வி. பார்ப்பதிலும் கவனம் செலுத்தினர்.

    இதை கவனித்த கிராம பஞ்சாயத்து தலைவர் லட்சுமி ஜெகபதி மாணவர்களிடம் படிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அப்போது மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கிராம மக்கள் தினமும் 2 மணி நேரம் செல்போன் மற்றும் டி.வி. பயன்படுத்துவதை கட்டுப்படுத்த முடிவு செய்து இருப்பது தெரியவந்தது. எனவே அதே போன்று இங்கும் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்.

    அதன்படி கிராம மக்களை அழைத்து இது குறித்து தெரிவித்தார். பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். அதன்படி கிராம பஞ்சாயத்து அலுவலகம் அருகே ஒரு சைரன் அமைத்தனர். அந்த சைரன் தினமும் இரவு 7 மணிக்கு ஒலிக்க தொடங்கியதும் கிராமத்தில் உள்ள அனைவரும் இரவு 9 மணிவரை 2 மணி நேரம் செல்போன், டி.வியை அணைத்து விடுகிறார்கள். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

    • புதிய விதிகளின் கீழ் விருதுகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் அதனபடிதான் விருது வென்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் விரும்புகிறது.
    • தன்னாட்சி அமைப்பின் செயல்பாடுகளை மத்திய அரசு முடக்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    தமிழ் உட்பட இந்திய மொழிகளில் படைக்கப்ட்ட இலக்கியத்திற்காக ஒவ்வோர் ஆண்டும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    சாகித்ய அகாடமி என்பது மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட இருந்த நிலையில் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி விருது வென்றவர்களின் பெயர்கள் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தேர்வு செயல்முறையில் அமைச்சகம் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தன்னாட்சி அமைப்பின் செயல்பாடுகளை மத்திய அரசு முடக்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    விருது பெற்றவர்களின் பட்டியலை நிர்வாகக் குழு  அங்கீகரித்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறவிருந்த சில நிமிடங்களுக்கு முன்பு, அரசு பிரதிநிதிகள் சாகித்ய அகாடமி அதிகாரிகளுக்கு விருது வென்றவர்களின் பட்டியலை அறிவிக்க வேண்டாம் என்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து பேசிய சாகித்ய அகாடமி உறுப்பினர் ஒருவர் "நிர்வாகக் குழு பரிசு பெற்றவர்களின் பட்டியலை அங்கீகரித்த பிறகு, அரசாங்கப் பிரதிநிதிகள் அறிவிப்பை நிறுத்தி வைக்குமாறு பரிந்துரைத்தனர். பரிசு பெற்றவர்களைச் சரிபார்க்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்" என்று தெரிவித்தார்

    புதிய விதிகளின் கீழ் விருதுகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் அதனபடிதான் விருது வென்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் விரும்புவதாகக் கூறப்படுகிறது. கடைசி நிமிடத்தில் சாகித்ய அகாடமி விருது செயல்பாடுகளை முடக்கியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.   

    • தனது வீடு வரும்போது, மனைவிக்கு ஹார்ன் அடித்து சிக்னல் தருகிறார்.
    • கணவரின் சிக்னல் கிடைத்ததும் ஜன்னல் வழியே கையசைத்து தனது அன்பை பரிமாறிக்கொள்கிறார்.

    கணவன் வேலைக்கு சென்றால் எப்போது வீடு திரும்புவார் என்று மனைவிமார்கள் வழிமேல் விழிவைத்து காத்திருப்பார்கள். ஆனால் பணிக்கு இடையிலும் கணவனை காணும் வாய்ப்பு மனைவிக்கு கிடைத்தால் எப்படியிருக்கும். அவர்கள் எப்படி அன்பை பரிமாறிக்கொள்வார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

    ரெயில் என்ஜின் டிரைவராக பணிபுரியும் ஒருவர், அந்த வழித்தடத்தில் தனது வீடு வரும்போது, மனைவிக்கு ஹார்ன் அடித்து சிக்னல் தருகிறார். இதை எதிர்பார்த்து அவரது மனைவியும் காத்திருக்கிறார்.

    கணவரின் சிக்னல் கிடைத்ததும் ஜன்னல் வழியே கையசைத்து தனது அன்பை பரிமாறிக்கொள்கிறார். அவர்களின் இந்த அன்புப் பரிமாற்றம் அடிக்கடி நடைபெறுகிறது. இதை அந்த பெண்மணி வீடியோவாகவும் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டார்.

    கணவன்-மனைவி இடையே உள்ள அன்பை பார்த்து பயணிகளும், வலைத்தளவாசிகளும் வியப்படைகின்றனர். அந்த வீடியோ 12 லட்சம் பேரின் பார்வையாளர்களை பெற்று வைரலானது. ''உங்களின் இந்த அன்பு வாழ்நாள் முழுவதும் தொடரட்டும்'' என்று பலரும் வாழ்த்தி இருந்தனர்.

    • டெல்லியில் ரஷிய அதிபர் புதினுடன் மோடி ஒரே காரில் பயணம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் அதிகம் விரும்பப்பட்டு உள்ளது.
    • விரும்பப்பட்ட பதிவுகளை கொண்ட முதல் 10 பேர் பட்டியலில் இடம் பெற்ற ஒரே அரசியல்வாதியும் மோடிதான்.

    புதுடெல்லி:

    கடந்த 30 நாட்களில் எக்ஸ் சமூக வலைதளத்தில் அதிகம் விரும்பப்பட்ட மற்றும் மறுபதிவு செய்யப்பட்ட பதிவுகள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதில் பிரதமர் மோடி வெளியிட்ட 8 கருத்துகள் அல்லது படங்கள்தான் அதிகம் விரும்பப்பட்ட மற்றும் மறுபதிவு செய்யப்பட்ட பதிவுகளாக தெரியவந்துள்ளது.

    டெல்லியில் ரஷிய அதிபர் புதினுடன் மோடி ஒரே காரில் பயணம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் அதிகம் விரும்பப்பட்டு உள்ளது. அந்த புகைப்படம் 34 ஆயிரம் மறுபதிவுகளையும், 2 லட்சத்து 14 ஆயிரம் விருப்பங்களையும் பெற்றது.

     

    எக்ஸ் வலைதளத்தில் மோடியின் 8 வலைத்தள பதிவுகளும் சேர்த்து ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 700 மறு பதிவுகளையும், 14.76 லட்சம் விருப்பங்களையும் பெற்றுள்ளன.

    இப்படி அதிகம் பகிரப்பட்ட மற்றும் விரும்பப்பட்ட பதிவுகளை கொண்ட முதல் 10 பேர் பட்டியலில் இடம் பெற்ற ஒரே அரசியல்வாதியும் மோடிதான். அவரது 8 பதிவுகளே முதல் 10 இடங்களை ஆக்கிரமித்து உள்ளன.

    • பராமரிப்பு பணிக்காக கொண்டு செல்லப்பட்டபோது துவார பாலகர் சிலை கவசம், கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் அபகரிக்கப்பட்டது.
    • அமலாக்கத்துறைக்கு விசாரணை செல்வதால், ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மேலும் சிக்குவார்கள் என பேசப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் சன்னிதான முகப்பில் துவார பாலகர் சிலை கவசம் மற்றும் கதவு நிலைகளில் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. 2019-ம் ஆண்டு பராமரிப்பு பணிக்காக கொண்டு செல்லப்பட்டபோது துவார பாலகர் சிலை கவசம் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் அபகரிக்கப்பட்டது.

    இதற்கு அப்போதைய அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும் அம்பலமானது.

    முதலில் 4 கிலோ தங்கம் வரை அபகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர்தான், இந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்டவர். அதற்கு அதிகாரிகள் மட்டுமின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகளும் உடந்தையாக இருந்த தகவலும் அடுத்தடுத்து வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது. இது ஆளும் அரசுக்கு கடும் நெருக்கடியை தந்தது.

    பின்னர் கேரள ஐகோர்ட்டு உத்தரவுப்படி இந்த விவகாரத்தை சிறப்பு விசாரணைக்குழு கையிலெடுத்தது. முதற்கட்டமாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையை துரிதப்படுத்தினர்.

    இந்த 10 பேரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு கைது நடவடிக்கையை தொடர்ந்தனர். அந்தவகையில் இதுவரை உன்னிகிருஷ்ணன் போற்றி, தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு, பத்மகுமார் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதில் பத்மகுமார் என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சிலரிடம் விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழுவினர் தயாராக இருந்தனர்.

    அதில், 2017-ம் ஆண்டு முதல் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தில் செயலாளராக பணியாற்றிய ஜெயஸ்ரீயும் ஒருவர். இதனை தொடர்ந்து முன்ஜாமின் கேட்டு அவர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. பிறகு சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 2017-ம் ஆண்டு திருவிதாங்கூர் தேவஸ்தான செயலாளராக பொறுப்பேற்றதாகவும், இந்த காலக்கட்டத்தில் சபரிமலை தொடர்பான எந்த பிரச்சனையிலும் தலையிடவில்லை என்றும் கூறியிருந்தார். எனவே தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து ஜெயஸ்ரீயை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. அதே சமயத்தில் சிறப்பு விசாரணை அதிகாரிகள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி சிறப்பு விசாரணைக்குழுவினர் அறிக்கையை தாக்கல் செய்தனர்.

    அப்போது, தங்கம் அபகரிப்பு விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம், கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் நடவடிக்கை நடந்துள்ளதாகவும் சிறப்பு விசாரணைக்குழுவினர் முதல் தகவல் அறிக்கையாக தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை, இந்த வழக்கின் விசாரணையை கையிலெடுக்க முடிவெடுத்தது. அதன்படி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. ஆனால் அதற்கு சிறப்பு விசாரணைக்குழு எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் சபரிமலையில் தங்கம் அபகரிப்பு வழக்கை அமலாக்கத்துறை விசாரணைக்கு மாற்றி கொல்லம் குற்றவியல் கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும், விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்க சிறப்பு புலனாய்வு குழுவிற்கும் உத்தரவிட்டுள்ளது.

    ஏற்கனவே ஆளும்கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பு இருப்பது சிறப்பு விசாரணைக்குழு நடத்திய விசாரணையில் தெரியவந்தது. தற்போது அமலாக்கத்துறைக்கு இந்த விசாரணை செல்வதால், ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மேலும் சிக்குவார்கள் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த விவகாரத்தில் பங்கஜ் பண்டாரி மற்றும் நகை கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டனர்.

    • பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்திற்கு இன்று பயணம் மேற்கொள்கிறார்.
    • நாடியா மாவட்டத்தில் நெடுஞ்சாலை திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    கொல்கத்தா:

    தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிரப்பணிகள் (எஸ்ஐஆர்) நடந்தது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆர்) மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்திற்கு பிரதமர் மோடி இன்று காலை பயணம் மேற்கொள்கிறார். அங்குள்ள நாடியா மாவட்டத்தில் நெடுஞ்சாலை திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    இதையடுத்து, இன்று மதியம் அசாம் செல்லும் பிரதமர் மோடி கவுகாத்தியில் அமைக்கப்பட்டுள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தைத் திறந்து வைக்கிறார். மேலும் அசாமில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.
    • மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று தேநீர் விருந்தளித்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    காப்பீடு துறையில் அந்நிய முதலீடு அதிகரிப்பு, அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட 'விபி ஜி ராம் ஜி' மசோதா உள்ளிட்டவை விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்பட்டன.

    கூட்டம் தொடங்கிய போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அதன்பின், விவாதங்களில் அக்கட்சிகள் பங்கேற்றன.

    இதற்கிடையே, ஒவ்வொரு பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவுபெறும் போது, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா எம்.பி.க்களுக்கு தேநீர் விருந்தளிப்பது வழக்கம்.

    இந்நிலையில், நேற்றும் சபாநாயகர் ஓம்பிர்லா தேநீர் விருந்து அளித்தார். இந்த முறை எதிர்க்கட்சி எம்.பி.க்களும் இந்த விருந்தில் பங்கேற்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அருகே காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா அமர்ந்திருந்தார்.

    அப்போது, எத்தியோப்பியா, ஜோர்டான் மற்றும் ஓமன் பயணம் குறித்து மோடியிடம் பிரியங்கா கேட்டார்.அதற்கு மோடி, பயணம் சிறப்பாக அமைந்ததாக தெரிவித்தார்.

    சமாஜ்வாதி கட்சியின் தர்மேந்திர யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • பசு பால் கொடுக்கவில்லை என்றால் ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்
    • மத்திய அரசின் நோக்கங்கள் தெளிவாக உள்ளன

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில் மத்திய அரசு பல மசோதாக்களை தாக்கல் செய்து, அவை நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு மாற்றாக, 'விபி-ஜி ராம் ஜி' என்னும் புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது.

    முன்னதாக, இந்த "விபி-ஜி ராம் ஜி மசோதா" நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது உத்தரகண்ட் நைனிடால் மக்களவை உறுப்பினர் அஜய் பட் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மசோதா தொடர்பாக பேசிய அஜய் பாட், "ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை என்றால், வேலை கிடைக்கவில்லை என்றால், வீட்டில் பிரச்சனை இருந்தால், கணவன் மனைவிக்கு ஒத்துப்போகவில்லை என்றால், ஒரு மகன் வழிதவறிச் சென்றிருந்தால், அல்லது ஒரு பசு பால் கொடுக்கவில்லை என்றால், "ஸ்ரீ ராம், ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம்" என்று சொன்னால் போதும், அது நிறைவேறும்." என தெரிவித்தார். 

    தொடர்ந்து மத்திய அரசின் நோக்கங்கள் தெளிவாக உள்ளன என்றும், மசோதா கொண்டுவரப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் தெரிவித்தார். தற்போது இவர் பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

     

    • இந்தியாவில், சட்டத்தின் ஆட்சி மேலோங்கி நிற்கிறது
    • நிதிஷ்குமார் அப்பெண்ணை வேறு எங்காவது தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?

    பீகாரில் திங்கள்கிழமை அன்று (டிச.15) 1000க்கும் மேற்பட்ட ஆயுஷ் மருத்துவர்கள், அரசுப் பணிக்கான தங்கள் நியமன கடிதங்களை, அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரிடம் இருந்து பெற்றனர். அப்போது முஸ்லீம் பெண் மருத்துவர் ஒருவரும் பெற்றார்.

    அவருக்கு பணி நியமன ஆணையை வழங்கும்போது நிதிஷ், அப்பெண் மருத்துவர் அணிந்திருந்த ஹிஜாபை பிடித்து இழுத்தார். அவரின் இந்த செயலை அவரின் அருகில் இருந்தவர்களும் தடுக்க முயன்றனர். ஆனால் பீகாரின் முதலமைச்சரோ சிரித்துக் கொண்டே இந்த வேலையை செய்தார். இந்தச் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே நிதிஷ்குமாரின் இந்த செயலால் அப்பெண் மருத்துவர் தனக்கு அரசு வேலை வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

    இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்,

    "அப்பெண் வேலையை மறுக்கலாம் அல்லது நரகத்திற்குகூட செல்லலாம். அது அவளுடைய விருப்பம். ஆனால், நிதிஷ்குமார் செய்தது சரியே. அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. நீங்கள் பாஸ்போர்ட் எடுக்கப் போகிறீர்கள் என்றால், உங்கள் முகத்தைக் காட்ட மாட்டீர்களா? விமான நிலையத்திற்குச் செல்லும்போது, உங்கள் முகத்தைக் காட்ட மாட்டீர்களா? மக்கள் பாகிஸ்தான் மற்றும் ஆங்கிலேயர்களைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் இது இந்தியா. இந்தியாவில், சட்டத்தின் ஆட்சி மேலோங்கி நிற்கிறது,"  என தெரிவித்துள்ளார். 

    முன்னதாக இதுதொடர்பாக கருத்து தெரிவித்த உத்தரபிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், நிதிஷ்குமார் அப்பெண்ணை வேறு எங்காவது தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×