என் மலர்
இந்தியா

டெல்லி விமான நிலையத்தில் பயணியை ரத்தம் பீறிட சரமாரியாக தாக்கிய ஏர் இந்தியா விமானி!
- இந்த தாக்குதலை பார்த்த தனது மகள் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
- தங்கள் ஊழியரின் இத்தகைய நடத்தையை வன்மையாகக் கண்டிப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானி ஒருவர் பயணியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் அங்கித் திவான் என்பவர், ஸைப்ஸ் ஜெட் விமானத்தில் ஏறுவதற்கு, தனது 7 வயது மகள், 4 மாத கைக்குழந்தை மற்றும் மனைவியுடன் பாதுகாப்பு சோதனைக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது ஊழியர்கள் என்ட்ரி வழியாக வரிசையில் புகுந்து முன்னால் செல்ல முயன்ற ஏர் இந்தியா விமானி வீரேந்தர் என்பவரை அங்கித் திவான் கடிந்துகொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த விமானி வீரேந்தர், இது ஊழியர்கள் என்ட்ரி என்றும், திவானை படிப்பறிவு இல்லையா என்று திட்டியுள்ளார். அதோடு அவரை தாக்கியும் உள்ளார்.
இந்தத் தாக்குதலில் அங்கித் திவானின் முகத்தில் ரத்தம் வழிந்தது.முகம் முழுவதும் ரத்தக் கறையுடன் இருக்கும் தனது புகைப்படத்தை அங்கித் திவான் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், இந்த தாக்குதலை பார்த்த தனது மகள் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து புகார் அளிக்க வேண்டாம் என அதிகாரிகள் தன்னை வற்புறுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் ஊழியரின் இத்தகைய நடத்தையை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி வருகிறது.






