search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அக்னிபாத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்- கே.எஸ்.அழகிரி, திருமாவளவன் வேண்டுகோள்
    X

    அக்னிபாத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்- கே.எஸ்.அழகிரி, திருமாவளவன் வேண்டுகோள்

    • அக்னிபாத் திட்டத்தை ஒத்திவைத்து விட்டு, பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற முப்படை அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும்.
    • தரம், செயல் திறன் மற்றும் பொருளாதாரம் ஆகிய 3 விஷயங்களில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் புதிய திட்டத்தை வகுக்க வேண்டும்.

    சென்னை:

    மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அக்னிபாத் திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் ஆபத்தானது என்று இளைஞர்கள் அஞ்சுவதால் தான் தன்னெழுச்சியோடு இன்றைக்குத் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    எனவே, அக்னிபாத் திட்டத்தை ஒத்திவைத்து விட்டு, பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற முப்படை அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும். தரம், செயல் திறன் மற்றும் பொருளாதாரம் ஆகிய 3 விஷயங்களில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் புதிய திட்டத்தை வகுக்க வேண்டும்.

    இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி அவர்களது எதிர்காலத்தை உறுதி செய்யாமல், தொடர்ந்து அவர்களுக்கு எதிரான தாக்குதலில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதையே அக்னிபாத் திட்டம் வெளிப்படுத்துகிறது.

    இளைஞர்கள் தேன்கூடு போன்றவர்கள். அவர்கள் எதிர்காலம் மீது நீங்கள் தொடர்ந்து கல் எறிந்தால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலை வாய்ப்பின்றி அல்லாடும் கோடிக்கணக்கான இளைஞர்களின் வாழ்வைப் பொசுக்கி அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் 'அக்னிபாத்' என்னும் திட்டத்தை மோடி அரசு அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

    'அக்னிபாத்' என்ற மோசடி திட்டத்தை உடனடியாக மோடி அரசு திரும்பப் பெற வேண்டும். காலியாக உள்ள 10 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்தலில் வாக்குறுதி அளித்தது போல எஞ்சியுள்ள இந்த இரண்டு ஆண்டுகளிலாவது ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வர வேண்டும்.

    அக்னிபாத் என்னும் இந்து விரோத-வெகுமக்கள் விரோத ஆளெடுப்புத் திட்டத்தை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால், பிற மாநிலங்களிலும் இந்தக் கிளர்ச்சி மாபெரும் புரட்சியாக வெடிப்பதை எவராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×