என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கத்தரிப்புலம் கீழகுத்தகை பகுதியைச் சேர்ந்தவர் சக்தீஸ்வரன் (56). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு அருள்மணி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் குடும்பத்தினரிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அவரது மனைவி கொடுக்க மறுத்துவிட்டார்.
இதனால் மனமுடைந்த சக்தீஸ்வரன் விஷம் குடித்து விட்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்தீஸ்வரன் நேற்று இறந்து விட்டார். மனைவி அருள்மணி கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பேரளம்:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த தினகரன் மகன் அருண்(வயது17). எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த பாபு மகன் பரதன்(18). பேரளம் அருகே அண்டக்குடியை சேர்ந்த செல்வம் மகன் அபிஷேக்(18). இவர்கள் 3 பேரும் பிளஸ் 2 படித்து முடித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பேரளத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்றனர். கடுவங்குடி அருகே சென்றபோது பொதக்குடியை சேர்ந்த சாமிநாதன்(38) என்பவர் மோட்டார் சைக்கிளில் எதிரே வந்துள்ளார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.
மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையின் வலதுபுறம் விழுந்த அருண், பரதன் ஆகிய 2 பேர் மீது அவ்வழியே வந்த டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
மேலும் சாலையின் மறுபுறம் விழுந்த அபிஷேக்கும், சாமிநாதனும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் விபத்து குறித்து பேரளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த அபிஷேக், சாமிநாதன் ஆகிய 2 பேரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து விபத்தில் பலியான அருண், பரதன் ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்தில் 2 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை அருகே உள்ள ஆறுபாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் மகேஷ் என்கிற மகேந்திரன். இவர் மீது கொலை, மற்றும் கடை வீதியில் பணம் கேட்டு மிரட்டிய வழக்குகள் உள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நாகை கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
அதன்படி செம்பனார் கோவில் போலீசார் மகேசை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இது பற்றிய தகவல் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா ஸ்ரீகண்டபுரம் அருகே நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மகன் செல்வகுமார் (வயது29) கொத்தனார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் பாலையூர் சென்றுள்ளார். அப்போது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் நிலை தடுமாறி அருகில் இருந்த மரத்தில் மோதி கீழே விழுந்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த செல்வகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த திருமால், சத்திய நாதன், ராஜேந்திரன் உள்ளிட்ட 4 பேர் கடந்த 4-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
நேற்று இரவு அவர்கள் கோடியக்கரைக்கு தென் கிழக்கு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் கத்தி முனையில் வேதாரண்யம் மீனவர்களை மிரட்டினார்கள்.
பின்னர் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறித்தனர். சுமார் 600 கிலோ எடையுள்ள வலைகளையும் அறுத்து வீசினார்கள் இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 3 லட்சம் ஆகும். வேதாரண்யம் மீனவர்கள் கெஞ்சியும் அவர்கள் கேட்கவில்லை. அங்கிருந்து விரட்டியடித்தனர்.
இன்று காலை வேதாரண்யம் மீனவர்கள் கரைக்கு திரும்பினார்கள். இது குறித்து கடலோர காவல் குழுமத்தில் புகார் செய்தனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்லும் சம்பவம் நடைபெற்று வரும் நிலையில் இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களை விரட்டியடித்தது மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 19). இவர் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த 4 வயது பெண் குழந்தையை அருகில் உள்ள பாத்ரூமிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை தந்துள்ளார். இதனை அவ்வழியே சென்ற பெண் ஒருவர் பார்த்து விட்டு அருகில் உள்ளவர்களை அழைத்து விக்னேசை மடக்கி பிடித்தனர்.
சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசாருக்கு இதுபற்றி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ராணி, விக்னேசை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது விக்னேஷ் போலீசாரிடம் கூறுகையில், நான் மட்டும் சிறுமிக்கு பாலியல் தொல்லை தரவில்லை. இதே பகுதியை சேர்ந்த கரூரில் படித்து வரும் வேல்கண்ணன்(19) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் ஆகியோரும் சிறுமியிடம் இதேபோல் நடந்து கொண்டுள்ளனர் என்று கூறினார். இவர்கள் 3 பேரும் கடந்த 3 மாதமாக சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி யடைந்த போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த 17 வயது சிறுவன் மற்றும் விக்னேஷ், வேல்முருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் விக்னேஷ் மற்றும் சிறுவன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். வேல்முருகனை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
4 வயது சிறுமிக்கு 3 மாதமாக 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தி.நகரை சேர்ந்தவர் ஈஸ்வர மூர்த்தி(58). கனரா வங்கியில் மேலாளராக உள்ளார். இவர் நேற்று தனது சகோதரரின் சஷ்டியப்த பூர்த்தி (60-ம் கல்யாணம்) விழாவிற்காக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு குடும்பத்தினருடன், காரில் வந்துள்ளார்.
விசேஷம் முடிந்து திருக்கடையூரிலிருந்து புறப்பட்டு குத்தாலம் ஓ.என்.ஜி.சி. அருகில் வரும் போது, கார் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற சாலையில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த ஈஸ்வர மூர்த்தி, அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களுக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த குத்தாலம் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை நிலைய அலுவலர் வீரராகவன், தீயணைப்பு படை வீரர்கள் ஜோதி, ரமேஷ், சரவணன், ஏழுமலை, செந்தில் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு குத்தாலம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி பெற்ற அவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே பொரும்பூர் ஊராட்சி வேலங்குடியில் நேற்று முன்தினம் பாஸ்கர் என்பவரது வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்டவர்களுக்கு விருந்து பறிமாறப்பட்டது. இந்த விருந்தில் பங்கேற்ற இவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.
இதையெடுத்து சிறுவர், சிறுமியர் உள்பட 25 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்களை உடனிருந்த உறவினர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
ஊராட்சியில் விநியோகிக்கப்படும் சுகாதாரமற்ற குடிநீரே வாந்தி மயக்கத்திற்கு காரணம் என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள பழையாறு இயற்கை மீன்பிடி துறைமுகம் உள்ளது.
இங்கு புதுப்பட்டினம், கொட்டயம்மேடு, ஓல கொட்டயம்மேடு, தொடுவாய், கூலயார், திருமுலைவாசல் ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் மீன் பிடி தொழிலுக்கு செல்வது வழக்கம். அங்கு லட்ச கணக்கில் மீன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை மற்றும் பிறபகுதியில் இருந்து பழையாறு இயற்கை மீன்பிடி தொழிலுக்காக இன்று காலை 6 மணிக்கு மினி லாரியில் 21 பேர் வந்து கொண்டிருந்தனர். வண்டியை பழைய பாலையத்தை சேர்ந்த பாபு ஓட்டினார். மினி லாரி புதுப்பட்டினம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலைதடுமாறி ரோட்டோரத்தில் உள்ள பனை மரத்தில் மோதியது.
இதில் மினிலாரி உருக்குலைந்தது. டிரைவர் பாபுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் வண்டியில் இருந்த சாமி (வயது 50), பாஸ் (55), உத்திராடம் (45), இளையராஜா (40), முத்தையன் (60) உட்பட 21 காயம் அடைந்தனர்.
இதை பார்த்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனே 108 ஆன்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். பின்பு ஆம்புலன்ஸ் உதவியுடன் அவர்களை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாலையில் மினிலாரி பனைமரத்தில் மோதி 21 பேர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யம் அடுத்த செம்போடை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் (வயது 40). இவரது வீட்டு வேலி அருகே உள்ள வாழை மரம் ஒன்று தார் போட்டுள்ளது. அது சாய்ந்த நிலையில் இருந்ததை கம்பால் முட்டுக்கொடுத்து பக்கத்து வீட்டுக்காரர் நிலத்தோடு வைத்திருந்தார்.
இதைப்பார்த்த முனியப்பனின் பக்கத்து வீட்டுக்காரர் செல்வராசு வாழை மரத்தை சேதப்படுத்தும் வகையில் தன் வரப்பில் உள்ள கம்புகளை தள்ளிவிட்டாராம்.
இதை தட்டிக்கேட்ட முனியப்பன் மனைவி சவுந்தரவள்ளியை செல்வராசு தரக்குறைவாக திட்டினாராம். இதைப்பார்த்த முனியப்பன் என் மனைவியை ஏன் திட்டுகிறாய் என்று கேட்டதற்கு ஆத்திரமடைந்த செல்வராசு முனியப்பனையும் தரக்குறைவாக பேசி மண்வெட்டி கொண்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதில் காயமடைந்த முனியப்பன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றிய புகாரின் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன் வழக்குபதிவு செய்து செல்வராசுவை கைது செய்தார்.
வேதாரண்யம், மருதூர் வடக்கு, கோடியக்காடு, கோடியக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதார துறையினருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் சுகாதார துறை இணை இயக்குனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர்ராஜன், வட்டார சுகாதார துறை மேற்பார்வையாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும் சுகாதார துறை அலுவலர்கள் வேதாரண்யம், கோடியக்கரை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது 11 கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு இருந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.2,800 அபராதம் விதித்து, அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.20 ஆயிரம் என கூறப்படுகிறது.
வேதாரண்யத்தை சேர்ந்தவர் சுகுமார் (வயது36). இவர் வேதாரண்யம் பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர் செல்வதற்காக பஸ் ஏறினார். அப்போது அவருக்கு பின்னால் வந்த கோடியக்கரையை சேர்ந்த சக்திய மூர்த்தி என்பவர், சுகுமார் சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.500-யை திருடினார்.
உடனே அருகில் இருந்தவர்கள் சக்திய மூர்த்தியை பிடித்து வேதாரண்யம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திய மூர்த்தியை கைது செய்தனர்.






