என் மலர்
நாகப்பட்டினம்
தரங்கம்பாடி:
செம்பனார் கோவில் அருகே மடப்புரம் பெரியசாவடி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மாதவன் (வயது16). மேலப்பாதி புதுத்தெருவை சேர்ந்தவர் சித்திரைவேலன் மகன் சம்பத்ராஜ்(17). இவர்கள் 2 பேரும் பரசலூரில் உள்ள மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்2 வேளாண்மை பிரிவில் படித்து வருகின்றனர்.
இவர்களுக்கும், அதே பள்ளியில் பிளஸ்2 பொறியியல் பிரிவில் படித்து வரும் மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த பள்ளி நிர்வாகம் இருதரப்பையும் அழைத்து கண்டித்ததோடு மாணவர்களின் பெற்றோரையும் வரவழைத்து மாணவர்கள் மோதல் பற்றி கூறியுள்ளனர். மேலும் மாதவன், சம்பத்ராஜ் ஆகிய 2 பேரையும் பள்ளிக்கு வரக்கூடாது என பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவர்கள் 2 பேரும் விஷம் குடித்து விட்டு ஆறுபாதி கிராமம் விளாநகர் பகுதி மெயின் ரோட்டில் மரத்தடியில் மயங்கி கிடந்துள்ளனர்.
அவ்வழியே சென்ற பொதுமக்கள் சாலையோரம் மாணவர்கள் மயங்கி கிடப்பது கண்டு செம்பனார் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் மாணவர்களை பரிசோதித்தபோது அவர்கள் அருகில் பூச்சி மருந்து பாட்டில்கள் கிடப்பதை பார்த்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் 2 பேரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் மாணவர்கள் 2 பேரும் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து இதுபோன்று நடந்து கொண்டிருப்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆர்ச் அருகே கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் வேதாரண்யம் மருதூர் தெற்கு பகுதியை சேர்ந்த மணிவாசன்(வயது 46) மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார்.
இதே கடையில் திருக்குவளை தாலுகா மாராச்சேரியை சேர்ந்த செல்வம் (42), நாகை செம்மட்டி பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த சுபாஷ்(42), அகரஒரத்தூர் தென்கரைவேலி பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி(48) ஆகியோர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகின்றனர்.
சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு விற்பனையாளர்கள் செல்வம், சுபாஷ், பக்கிரிசாமி ஆகியோர் டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்தை ஒரு கைப்பையில் போட்டு எடுத்துக்கொண்டு கடையை பூட்டினர். அப்போது விற்பனையாளர்களுக்கு தினமும் உணவு கொண்டு வரும் வேளாங்கண்ணி பூக்காரத்தெருவை சேர்ந்த முருகானந்தம் (42) அங்கு வந்துள்ளார்.
அப்போது விற்பனையாளர்கள் கையில் வைத்திருந்த பணப்பையை முருகானந்தத்திடம் கொடுத்துவிட்டு கடையை பூட்டி உள்ளனர். அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேர் முருகானந்தம் வைத்திருந்த பணப்பையை பறித்துக் கொண்டு, அவர்கள் வைத்திருந்த கத்தியால் முருகானந்தத்தின் கையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் வசூலான பணம் ரூ.2¾ லட்சத்தை கொள்ளையடுத்து கொண்டு தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள ஆக்கூர் முக்கூட்டு ரோட்டில் பருத்தி வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருபவர் பாலகிருஷ்ணன்.
இவர் விவசாயிகளிடம் இருந்து பருத்தியை வாங்கி விற்பனை செய்து வருகிறார். நேற்று இரவு இவர் கடையில் ரூ.3 லட்சம் பணத்தை வைத்து விட்டு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே வைத்து இருந்த ரூ. 3 லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று காலை கடையை திறக்க வந்த பாலகிருஷ்ணன் பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் செம்பனார் கோவில் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் வழக்கு பதிவு செய்து ரூ. 3 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கு தினமும் கடலில் பிடிக்கப்படும் மீன்கள் விற்பனை செய்ததுபோக, மீதமுள்ள மீன்களை கருவாடாக உலர வைத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
கருவாடு உலர வைத்தல், அதனை வியாபாரம் செய்தல் போன்ற பணிகளில் மட்டும் சுமார் 5 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். கருவாடு உலர வைக்கும் பணியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தினமும் பழையாறு துறைமுகத்தில் இருந்து சுமார் 5 டன் முதல் 8 டன் வரை தினமும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் கருவாடு விற்பனைக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதனை உடனடியாக ரத்து செய்யக்கோரி பழைய துறைமுகத்தில் நேற்று தி.மு.க. மீனவர் அணியின் நாகை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் மீனவ பெண்கள் மற்றும் கருவாடு வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், கருவாடு அழுகக்கூடிய உணவு வகையை சேர்ந்தது. இதன் விலை தினமும் மாறுபடுகிறது. பழையாறு துறைமுகத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் கருவாடு விற்பனை செய்து வருகின்றனர். இப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட இதர செலவுகள் போக லாபம் மிக குறைவாகவே கிடைக்கிறது.
இந்தநிலையில் 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதால் வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகள் கருவாடுகளை வாங்க மறுக்கின்றனர். இதனால் கருவாடுகள் விற்பனையாகாமல் தேங்கி உள்ளன. மேலும், துறைமுகத்தில் கருவாடு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு கருவாடு விற்பனையில் விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை உடனடியாக திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே மணல்மேடு கொற்கை அம்பேத்கார் தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவருடைய மகன் ராஜசேகர் (வயது 20) விவசாய கூலி. இவரும் அதே பகுதியை சேர்ந்த இவருடைய நண்பர் இளையராஜா என்பவரும் ஐவாநல்லூரில் உள்ள இவர்களுடைய நண்பர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு கொண்டல் மெயின்ரோட்டில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலை ஓரம் உள்ள புளியமரத்தில் அவர்களது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் காயமடைந்த ராஜசேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ராஜசேகர் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ வடிவேல் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் ஊராட்சியில் பிரதமரின் நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலும், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலும் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் பிரதமரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.56 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் அரையபுரம் கிராமத்தில் நடைபெற்று வரும் ஏரிக்கரை சாலை மேம்பாட்டு பணிகளையும், ரூ.32 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் பாப்பா குளம் தூர்வாரும் பணிகளையும் கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டார். தொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் வானாதிராஜபுரம் கிராமத்தில் பெரிய வாய்க்கால் தூர்வாரும் பணியையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழலகம் கட்டுமான பணியையும், வில்லியநல்லூர் கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியையும் பார்வையிட்டார்.
ஆய்வின்போது, மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜ், ஜான்சன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், ஊரக வளர்ச்சி முகமை பொறியாளர்கள் பலராமன், செங்குட்டுவன், உதவி பொறியாளர் ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை, திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் கமலக்கண்ணன்(38). இவர் இதே ஊரில் அடகுக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று இவரது கடைக்கு வாடகை காரில் வந்த 4 பேர் தாங்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறியுள்ளனர். தங்களின் உயர் அதிகாரி காரில் இருப்பதாகவும், அவர் விசாரணைக்கு அழைப்பதாகவும் கூறி கமலக்கண்ணனை அழைத்துள்ளனர். இதனால் பதற்றமடைந்த கமலக்கண்ணன் காரின் அருகே சென்றுள்ளார்.
அப்போது மர்மநபர்கள் 4 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி கமலக்கண்ணனை மிரட்டி பணம்-நகைகளை கேட்டுள்ளனர். இதைக் கண்டு கமலக்கண்ணன் கூச்சலிட்டுள்ளார். இதனால் அவர்கள் கமலக்கண்ணன் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.500 பணத்தையும், கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினையும் பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர். இதில் செயின் கீழே விழுந்து விட்டது. அதற்குள் அக்கம் பக்கத்தினர் திரண்டு விட்டதால், நால்வரும் காரில் ஏறி தப்பி சென்றனர்.
இதுகுறித்து கமலக் கண்ணன் குத்தாலம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுகுணா, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், போலீசார் ராமமூர்த்தி, நரசிம்மபாரதி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதில் மர்மநபர்கள் வந்த கார் மயிலாடுதுறை திருவிழந்தூர் தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் அருகே நிற்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காரை சுற்றி வளைத்தனர். அப்போது காரில் இருந்த 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் சேந்தங்குடி தென்பாதி தெருவைச் சேர்ந்த சந்தானம் மகன் ஜெகன்(29), பக்கிரிசாமி மகன் கடவுள் பாண்டியன்(27), அழகேசன் மகன் அருண் பாண்டியன்(24), ரெயிலடி கரிமேட்டு தெருவைச் சேர்ந்த தங்கராசு மகன் ராஜாமணி(25) என்பது தெரியவந்தது.
இவர்கள் 4 பேரும் சேர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறி திருவாவடுதுறையில் நகைக்கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கள்ளிமேடு அடப்பனாற்றில் ஷட்டருடன் கூடிய தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று காலை 9.30 மணியளவில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்றது. அப்போது திடீரென கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்ட கிரேன் அறுந்து விழுந்தது.
அதில் தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். ஆந்திராவை சேர்ந்த சங்கர் ராவ் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவருடன் வேலை பார்த்து கொண்டிருந்த 4 பேர் காயம் அடைந்தனர். அவர்களை சக தொழிலாளர்கள் மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கிரேன் அறுந்து தொழிலாளி பலியான சம்பவத்தை தொடர்ந்து தடுப்பணை கட்டும் பணி நிறுத்தப்பட்டது. இது குறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த துளசாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (68). இவருக்கு பாக்கியம் என்ற மனைவியும், 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
சாமிநாதன் தோல் நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டிலிருந்த பூச்சிமருந்தை எடுத்து குடித்து விட்டார். ஆபத்தான நிலையில் இருந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.
இதுகுறித்து சாமிநாதன் மகன் பாரதிராசன் கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சித்தமல்லி மற்றும் கடக்கம் பகுதியில் கடந்த சில வாரங்களாக மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரிக்கு சித்தமல்லி, விராலூர், புலவனூர், குறிச்சி உள்ளிட்ட பகுதிகளின் வழியாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் செல்கின்றன.
இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது.அதிக அளவில் மணல் லாரிகள் செல்வதால் பள்ளி வாகனங்கள், அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதற்கு சிரமமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
இந்த வழித்தடத்தில் ஒரு நாளைக்கு 8 முறை இயக்கப்பட்ட அரசு பஸ்கள் தற்போது 3 முறை மட்டுமே இயக்கப்படுகின்றன.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மணல் குவாரிகளை மூடக்கோரி கிராம மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் சித்தமல்லி மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மணல் குவாரிகளை மூடக்கோரி கோஷங்கள் எழுப்பினர். மணல் ஏற்றி இருந்த 30 லாரிகளையும் வெளியில் விடாமல் சிறை பிடித்தனர்.

தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. சந்திரன், தாசில்தார் காந்திமதி, டி.எஸ்.பி. கலிதீர்த்தான் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை விடுவிக்க கோரினார்கள். அதற்கு பொதுமக்கள் மணலை இறக்கினால் மட்டுமே லாரிகளை வெளியே செல்ல அனுமதிப்போம் என்றனர். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. நேற்று இரவு விடிய விடிய பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
மணல் குவாரிகளை மூடும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
கதிராமங்கலம் பிரச்சினைக்கு தீர்வு காண கோரி மயிலாடுதுறை மற்றும் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த 30-ந் தேதி எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். போராட்டம் தொடர்பாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் போராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை விடுவிக்க கோரி கதிராமங்கலத்தில் தொடர்ந்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று 11-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், பழ. நெடுமாறன், டைரக்டர் கவுதமன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கதிராமங்கலம் வந்து மக்களை சந்தித்து கருத்துக்களை கேட்டனர்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் வெள்ளையன் கடந்த 7-ந் தேதி கதிராமங்கலம் வந்து வர்த்தகர்கள் மற்றும் மக்களை சந்தித்தார்.
இந்த நிலையில் கதிராமங்கலம் பிரச்சினைக்கு தீர்வு காண கோரி வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
அதன் படி இன்று (செவ்வாய்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை, திருவிடைமருதூர், திருப்பனந்தாள், திருபுவனம், பந்த நல்லூர், காகித பட்டறை தத்துவாஞ்சேரி, அணைக்கரை, நரசிங்கன் பேட்டை,திருவாலங்காடு, நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை பல்லவராயன்பேட்டை பகுதியை சேர்ந்த பாலமுருகன் மனைவி திரிவேணி (வயது 41). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் திரிவேணி, குடும்ப பிரச்சினை காரணமாக மனவேதனையுடன் இருந்தார். சம்பவத்தன்று இரவில் திரிவேணி தூங்க சென்றார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் திரிவேணி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து திரிவேணியின் தாய் பிருந்தாவனம் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இறந்துபோன திரிவேணியின் உடல், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.






