என் மலர்
செய்திகள்

கோஷ்டி மோதலை பள்ளி நிர்வாகம் கண்டித்ததால் விஷம் குடித்து சாலையோரம் மயங்கி கிடந்த மாணவர்கள்
தரங்கம்பாடி:
செம்பனார் கோவில் அருகே மடப்புரம் பெரியசாவடி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மாதவன் (வயது16). மேலப்பாதி புதுத்தெருவை சேர்ந்தவர் சித்திரைவேலன் மகன் சம்பத்ராஜ்(17). இவர்கள் 2 பேரும் பரசலூரில் உள்ள மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்2 வேளாண்மை பிரிவில் படித்து வருகின்றனர்.
இவர்களுக்கும், அதே பள்ளியில் பிளஸ்2 பொறியியல் பிரிவில் படித்து வரும் மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த பள்ளி நிர்வாகம் இருதரப்பையும் அழைத்து கண்டித்ததோடு மாணவர்களின் பெற்றோரையும் வரவழைத்து மாணவர்கள் மோதல் பற்றி கூறியுள்ளனர். மேலும் மாதவன், சம்பத்ராஜ் ஆகிய 2 பேரையும் பள்ளிக்கு வரக்கூடாது என பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவர்கள் 2 பேரும் விஷம் குடித்து விட்டு ஆறுபாதி கிராமம் விளாநகர் பகுதி மெயின் ரோட்டில் மரத்தடியில் மயங்கி கிடந்துள்ளனர்.
அவ்வழியே சென்ற பொதுமக்கள் சாலையோரம் மாணவர்கள் மயங்கி கிடப்பது கண்டு செம்பனார் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் மாணவர்களை பரிசோதித்தபோது அவர்கள் அருகில் பூச்சி மருந்து பாட்டில்கள் கிடப்பதை பார்த்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் 2 பேரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் மாணவர்கள் 2 பேரும் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து இதுபோன்று நடந்து கொண்டிருப்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






