search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைகள் அடைப்பு"

    • தாமிரபரணி பாசன விவசாயிகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
    • ஆழ்வார்திரு நகரியில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீவைகுண்டம்:

    ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகம் 150 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் செயல்பட்டு வருகிறது.

    தற்போது இந்த தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகம் நிர்வாக காரணங்களுக்காக இரண்டாகப் பிரித்திட திட்டமிடப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்கு தாமிரபரணி பாசன விவசாயிகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாசன வடிநில கோட்டத்தை இரண்டாகப் பிரிக்க கூடாது. மீண்டும் பழைய முறைப்படி இந்த அலுவலகம் ஸ்ரீவைகுண்டத்தில் செயல்படுவதற்கு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று ஸ்ரீவைகுண்டத்தில் மேல ரதவீதி, கீழ ரதவீதி, பேருந்து நிலையம் மற்றும் பஸ் சுற்றியுள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகளை வியாபாரிகள் அடைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    அதேபோல் ஆழ்வார்திரு நகரியில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகம் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டத்திலேயே இயங்க வேண்டும். தவறும்பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தனர்.

    இந்த போராட்டத்தில் வக்கீல் கருப்பசாமி, வியாபாரி சங்கத் தலைவர் காளியப்பன், முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர் கந்த சிவசுப்பு, தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு, தாமிரபரணி பாசன திட்ட குழு முன்னாள் தலைவர் உதயசூரியன், பாசன விவசாய சங்க தலைவர்கள் சீனிப்பாண்டியன், வைகுண்ட பாண்டியன், தியாகசெல்வன், பரமசிவன், துரையப்பா, பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் விவசாய சங்க தலைவர் அலங்காரம், பொருநை நதிநீர் மேலாண்மை சங்க பொதுச் செயலாளர் முருகன் மற்றும் விவசாய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

    ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • காட்டு யானைகள் தாக்கி விவசாயிகள் உயிரிழப்பதை தடுக்க பழைய ரெயில்வே தண்டவாளங்களை பயன்படுத்தி வேலிகள் அமைக்க வேண்டும்.
    • விவசாய சங்கத்தின் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்து வணிகர் சங்கங்களும் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி கிராமம் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. தாளவாடி மக்களின் பிரதான தொழிலே விவசாயம் தான். இங்குள்ள விவசாயிகள் தென்னை, வாழை, மக்காச்சோளம் போன்றவற்றை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர்.

    தாளவாடி அருகே வனப்பகுதி உள்ளதால் அடிக்கடி வனவிலங்குகள் கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள நீர் குட்டைகள் வறண்டு போய் உள்ளன.

    இதனால் கடந்த சில நாட்களாக தண்ணீர் உணவைத் தேடி காட்டு யானைகள் கிராமத்துக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் தாளவாடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் இரவு நேரங்களில் தங்கள் தோட்டத்தில் காவலில் இருப்பது வழக்கம்.

    இந்த நேரங்களில் சில சமயம் யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து இரவு நேரம் காவலில் இருக்கும் விவசாயிகளை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதில் சில விவசாயிகளும் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தாளவாடி அருகே திகனாரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாக்கையா (வயது 62) என்பவர் தனது மக்காச்சோளம் காட்டில் இரவு நேர காவலில் இருந்தபோது அவரது தோட்டத்துக்குள் வந்த காட்டு யானை மாக்கையாவை மிதித்து கொன்றது.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தாளவாடி விவசாயிகள் ஒன்று திரண்டு விவசாயி மாக்கையா உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வனத்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.

    இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இருப்பது போல் வனப்பகுதியை விட்டு யானை வெளியேறும் இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும், காட்டு யானைகள் தாக்கி விவசாயிகள் உயிரிழப்பதை தடுக்க பழைய ரெயில்வே தண்டவாளங்களை பயன்படுத்தி வேலிகள் அமைக்க வேண்டும், யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க அகழி வெட்ட வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கம் அறிவித்திருந்தது.

    விவசாய சங்கத்தின் இந்த அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்து வணிகர் சங்கங்களும் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று தாளவாடி பகுதியில் 350-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஓசூர் ரோடு, அண்ணா நகர், சாம்ராஜ்நகர் ரோடு, சக்தி ரோடு, தலமலை ரோடு போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

    இருப்பினும் வழக்கம் போல் மருந்தகங்கள், ஆஸ்ப த்திரிகள் செயல்பட்டன. அதே போன்று பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாளவாடி பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மின் துறையை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
    • சிறு, நடுத்தர மற்றும் பெரிய கடைகள் உள்பட வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஏற்படும் தொடர் மின்வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களாக ஏற்படும் மின்வெட்டு மற்றும் குறைந்த அழுத்த மின்சாரம் காரணமாக கோட்டக்குப்பம் பகுதிகளில் உள்ள வீடு, வணிக நிறுவனங்களில் மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி வருகிறது.

    கோட்டக்குப்பம் பகுதியில் மின்வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மக்கள் நல கூட்டமைப்பினர் மின் துறையை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) கோட்டக்குப்பம் பகுதியில் கடையடைப்பு மற்றும் தொடர் முழக்கப் போராட்டத்தை அறிவித்து இருந்தனர்.

    இதற்கிடையில் போராட்டத்தை கைவிடும்படி மக்கள் நல கூட்டமைப்பினரிடம் காவல்துறை சார்பில் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நேற்று கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வானூர் தாசில்தார் நாராயண மூர்த்தி தலைமையில் நகராட்சி ஆணையர் புகேந்திரி, மின்துறை அதிகாரிகள் ஆதிமூலம், சிவசங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் மக்கள் நல கூட்ட மைப்பினருடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    அதில் மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வருவாய்த்துறை நிலம் கையகப்படுத்தி மின் துறைக்கு ஒப்படைக்கப்பட உள்ளதையும், அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் மின்துறை பணியையும் எடுத்துரைத்தனர்.

    போராட்டத்தை கைவிடும்படியும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் இன்று அறிவித்தபடி மக்கள் நல கூட்டமைப்பினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி இன்று காலை 6 மணி முதலே கோட்டக்குப்பம் பகுதியில் டீக்கடை, ஓட்டல் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்படவில்லை. கோட்டகுப்பம் முதல் சின்ன முதலியார்சாவடி வரை சுமார் 3000 சிறு, நடுத்தர மற்றும் பெரிய கடைகள் உள்பட வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன.

    போராட்டக்காரர்கள் நகராட்சி திடலில் இன்று தொடர் முழக்கப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கடையடைப்பு போராட்டத்தையொட்டி கோட்டகுப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • டாஸ்மாக் முற்றுகை போராட்டத்தால் பெரும் பரபரப்பு பதட்டம் ஏற்பட்டது .
    • பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த நிலையில் சட்டசபையில் ஏற்கனவே அறிவித்தபடி தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

    இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 கடைகள் மூடப்பட்டது. தஞ்சை நகரில் மட்டும் 10 கடைகள் அடைக்கப்பட்டன.

    இந்த பட்டியலில் தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகே மாட்டு மேஸ்திரி சந்து பகுதியில் செயல்படும் அரசு டாஸ்மாக் இடம் பெறவில்லை. எனவே இந்த டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு இயக்கம், அமைப்புகள் சார்பில் ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டன. இந்த கோரிக்கையை நிறைவேற்றாததால் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தனர்.

    இந்த நிலையில் மாட்டு மேஸ்திரி சந்து டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடுவதற்கான முதல்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி இன்று மதியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் வசந்தி தலைமையில் மாநகர செயலாளர் வடிவேலன் மற்றும் பொதுமக்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர்.

    அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையிலான போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் முடிவு எட்டப்படாததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தடையை மீறி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    அப்போது மூட வேண்டும்.. மூட வேண்டும்.. மாட்டு மேஸ்திரி சந்து டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியவாறே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது போலீசாரிடம், மாட்டு மேஸ்திரி சந்து மற்றும் சுற்றியுள்ள இடங்களில் ஏராளமான வணிக நிறுவனங்கள் , வங்கிகள், மருத்துவமனைகள், பள்ளிகள், கோவில்கள் உள்ளன. இந்தக் கடையில் மது குடிப்பவர்கள் பலர் அந்த வழியை கடந்து வீட்டுக்கு செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்து வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    மேலும் பொதுமக்கள், வேலைக்கு செல்வோரும் இன்னலுக்கு ஆளாகினர். எனவே இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறோம். தற்போது மூடப்பட்ட பட்டியலிலும் இந்த கடை இல்லாதது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் நிரந்தரமாக இந்த டாஸ்மாக்கை மூடும் வரை எங்களது போராட்டம் ஓயாது என்று போராட்டக்காரர்கள் கூறினர்.

    தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்தப் போராட்டத்தால் டாஸ்மாக் கடை இன்று திறக்கப்படவில்லை.

    டாஸ்மாக் முற்றுகை போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு பதட்டம் ஏற்பட்டது . பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாட்டு மேஸ்திரி சந்து, பழைய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

    • வர்த்தகர்கள் தெரிவிக்கையில் கோவிலில் அனைவரும் சமம் என்பதை அதிகாரிகள் உணரவேண்டும்.
    • தரிசனத்திற்கு வரும் மக்களுக்கு இடையூறு செய்யும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்க உள்ளோம் என்றார்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனிமுருகன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு. இதனால் உள்ளூர் பக்தர்கள் பெரும்பாலும் கூட்டம் இல்லாத நாட்களில் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

    குறிப்பாக செவ்வாய்க்கு அதிபதியாக விளங்கும் முருகப்பெருமானை உள்ளூர் பக்தர்கள் செவ்வாய்கிழமைகளில் அதிகளவு வந்து தரிசனம் செய்கின்றனர். அதன்படி நேற்று உள்ளூர் பக்தர்கள் பழனி மலைக்கோவிலுக்கு வந்தபோது கோவில் கண்காணிப்பாளர் அவர்களை தரக்குறைவாக பேசி சாமி தரிசனம் செய்ய விடாமல் தடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

    எனவே அனைவருக்கும் பொதுவான கோவிலில் சர்வாதிகாரி போல செயல்படும் கோவில் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று அடிவாரம் சன்னதி வீதியில் வர்த்தகர் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    இதுகுறித்து வர்த்தகர்கள் தெரிவிக்கையில் கோவிலில் அனைவரும் சமம் என்பதை அதிகாரிகள் உணரவேண்டும். தரிசனத்திற்கு வரும் மக்களுக்கு இடையூறு செய்யும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்க உள்ளோம் என்றார். இதனால் அடிவாரம் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாய்க்காலை சீரமைக்க ரூ.733 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.
    • மே 1-ந் தேதி முதல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு , திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்ட ங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்த வாய்க்காலை சீரமைக்க ரூ.733 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. வாய்க்காலை புனரமைக்க ஒருத்தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்தனர். அமைச்சர் முத்துசாமி இருதரப்பு விவசாயிகளையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். எனினும் சுமுகமான முடிவு ஏற்படவில்லை.

    இந்நிலையில் கீழ்பவானி முறைநீர் பாசன கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மே 1-ந் தேதி முதல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டத்தை கைவிட கோரியும், விவசாயம் காக்க வேண்டியும், மண் கால்வாயிகவே இருக்க வேண்டும் என வலியுறுத்தி அரச்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக விவசாயிகள் கடை வியாபாரிகளிடம் ஆதரவு கேட்டிருந்தனர்.

    அதன்படி இன்று காலையில் இருந்து அரச்சலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியான பிச்சாண்டாம் பாளையம், கருக்கம் பாளையம், வாய்க்கால் மேடு ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து விவசாயிகள் மற்றும் வணிகர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரச்சலூர் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் அரச்சலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக ஆட்கள் நடமாட்டம் இன்றி வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    கீழ்பவானி வாய்க்காலில், பழைய கட்டுமானங்களில் உள்ள மராமத்துப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

    புதிதாக வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க கூடாது. வாய்க்காலின் மண் கரை அப்படியே தொடர வேண்டும், கசிவுநீர் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று அரச்சலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இன்று தருமபுரி மாவட்டத்தில் வணிகர் தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    தருமபுரி,

    ஆண்டுதோறும் மே 5-ந்தேதி வணிகர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று தருமபுரி மாவட்டத்தில் வணிகர் தினம் கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தருமபுரி நகரில் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள ஆறுமுக ஆசாரி தெரு, சின்னசாமி நாயுடு தெரு, முகமது அலி கிளப்ரோடு, பென்னாகரம் ரோடு, கடைவீதி, துரைசாமி நாயுடு தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    இதுதொடர்பாக ஏற்கனவே பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டதால் கடை அடைப்பால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. நகரில் ஆங்காங்கே மருந்து கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. வணிகர்கள் கடை அடைப்பால் பெரும்பாலான சாலைகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    பாலக்கோடு, காரிமங்கலம், அரூர், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, பென்னாகரம், ஒகேனக்கல், பாப்பாரப்பட்டி, தொப்பூர், ஏரியூர், பெரும்பாலை, இண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5-ந்தேதி 40-வது வணிகர் தினம் மாநாடு ஈரோடு டெக்ஸ்வேலி 'மைதானாத்தில் இன்று தமிழகத்தின் அனைத்து வணிகர்கள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், கிளைச்சங்க நிர்வாகிகள், ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள், வெளிமாநில வணிக அமைப்பு தலைவர்கள் என அனைவரின் பங்கேற்புடன் மாநில த்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெறுகிறது.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    • தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான வணிகர்கள் தங்களது குடும்பத்துடன் வந்தனர்.
    • மாநாட்டையொட்டி அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு சித்தோடு டெக்ஸ்வேலி மைதானத்தில் இன்று 40-வது வணிகர் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான வணிகர்கள் தங்களது குடும்பத்துடன் வந்தனர். மாநாட்டையொட்டி அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

    ஈரோடு வ.உ.சி. காய்கறி பெரிய மார்க்கெட் வணிகர் மாநாட்டையொட்டி இன்று அடைக்கப்பட்டிருந்தது. இதேபோல் ஈரோட்டில் புகழ்பெற்ற கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) இன்று அடைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது.

    இதேப்போல் கொங்காலம்மன் கோவில் வீதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மளிகை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மாநகர் பகுதி முழுவதும் உள்ள பெட்டிக்கடைகள், மளிகை கடைகள், மால்கள் அடைக்கப்பட்டிருந்தன.

    இதனால் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.எம்.கே.ரோடு பகுதியில் உள்ள ஜவுளி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இதேப்போல் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், சத்தியமங்கலம், கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, பெருந்துறை என மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள் அனைத்தும் வணிகர் மாநாட்டையொட்டி அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதே நேரம் பால் பூத்துகள், மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன.

    • மகாவீர் ஜெயந்தியையொட்டி 4-ந் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
    • சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 4-ந் தேதி (செவ்வாய்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுகிறது. மேலும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம் FL1, FL2, FL3, FL3A, FL3AA, Fl4A உரிமம் பெற்ற ஓட்டல்கள், கிளப் மற்றும் கேண்டீன்களில் இயங்கும் மதுக்கூடங்களையும் மேற்கண்ட தினத்தில் முழுவதுமாக மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • திடீர் நடவடிக்கைக்கு சிறு வியாபாரிகளில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • 50-க்கும் மேற்பட்ட கடைகளை வியாபாரிகள் அடைத்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி.

    தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சி பொம்மிடியில் ெரயில்வே ஜங்ஷன் முதல் ஓமலூர் சாலை மிகவும் போக்குவரத்து மிகுந்த பகுதியாகும்.

    வாகனங்களில் செல்பவர்கள் ஆக்கிரமிப்பு கடைகள் நெடுஞ்சாலை வரை அமைத்து வியாபாரம் செய்ததால் வாகனம் செலுத்துவதுமிகவும் சிரமாக இருந்தது. இதனால் அடிக்கடி விபத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இப்பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள், நெடுஞ்சாலை ஓரங்களிலும், பேரூராட்சிக்கு சொந்தமான இடத்திலும் ஆக்கிரமிப்பு செய்து போக்குவதற்கு இடையூறாக கடைகள் நடத்தி வந்தன.

    இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் சாலை விபத்துக்கள் அடிக்கடி நடைபெற்று வந்தது. இந்த பகுதியில் உள்ள நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து, சிலர் முன் பணமாக 50 முதல் ஒரு லட்சம் என பெற்றுக் கொண்டு வாடகைக்கு விட்டு வந்தனர்.

    இவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பேரூராட்சி செயலர் நாகராஜ், பேரூராட்சி தலைவர் சாந்தி புஷ்பராஜ், கவுன்சிலர்கள் சிலர் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் வாகனங்களுடன் 30-க்கு மேற்பட்டோர் சென்று ஆக்கிரமிப்பு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். 50 சிறு வியாபாரிகளுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கு அடையாளக் குறியீடுகளை செய்தனர்.

    ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பொருட்களையும் அப்புறப்படுத்தி வாகனத்தில் ஏற்றவும் முயற்சி மேற்கொண்டனர். இந்த திடீர் நடவடிக்கைக்கு சிறு வியாபாரிகளில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து பொ.மல்லாபுரம் பேரூராட்சி கடைகளை அகற்றியதை கண்டித்து இன்று காலை 50-க்கும் மேற்பட்ட கடைகளை வியாபாரிகள் அடைத்தனர். பின்னர் அவர்கள் ஒன்று திரண்டு பொம்மிடி போலீசில் புகார் கொடுத்தனர்.

    பொம்மிடி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்ட தால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தனர்.

    இன்று கடைகள் அடைக்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

    • 100 சதவீத சொத்து வரி உயர்வை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் கடைகள் அடைத்து போராட்டம் நடைபெற்றது.
    • முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன

    கடலூர்:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் நெல்லிக்குப்பம் நகர அனைத்து தொழில் வர்த்தகம் சங்கம் சார்பில் வர்த்தக பயன்பாட்டு 100 சதவீதம் சொத்து வரி உயர்வை நகராட்சி நிர்வாகம் மறு பரிசீலனை செய்யக்கோரியும், மாநில அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது‌. இதற்கு சங்க செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். நகர தலைவர் நாசர் அலி, நகர அமைப்பாளர் அமர்நாத், ஆலோசகர் முகமது அபுசாலிக், மேல்பட்டாம்பாக்கம் வர்த்தக சங்கத் தலைவர் சையது முகமது, துணைத்தலைவர் ராஜா ரஹீமுல்லா, இணைச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட இணை செயலாளர் சுரேஷ் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் வீரப்பன், மாவட்ட பொருளாளர் ராஜ மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். இதில் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன. முடிவில் சங்க பொருளாளர் சம்சுதீன் நன்றி கூறினார். முன்னதாக நெல்லிக்குப்பம் நகர பகுதிகள் முழுவதும் அனைத்து கடைகளும் மூடப்பட்டு கடையடைப்பு போராட்டத்தில் வணிகர்கள் ஈடுபட்டனர். இதில் அத்தியாவசிய கடைகள் மட்டும் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக கடைத்தெரு வெறிச்சோடி காணப்பட்டது.

    • மதுக்கடை மட்டுமின்றி பல்வேறு வகையிலும் பஜார் பகுதியில் உள்ள பிற கடைகளுக்கும் வருவாய் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
    • மஞ்சூர் அனைத்து கடைக்காரர்கள் நலச்சங்கத்தின் சார்பில் நேற்று காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை இரண்டு மணி நேரம் கடைகளை அடைத்தனர்.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த குடிமகன்கள் ஏராளமானோர் தினசரி மது பாட்டில்கள் வாங்குவதற்காக மஞ்சூருக்கு வந்து செல்கின்றனர்.

    இவர்கள் மூலம் மதுக்கடை மட்டுமின்றி பல்வேறு வகையிலும் பஜார் பகுதியில் உள்ள பிற கடைகளுக்கும் வருவாய் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் தற்போது அரசு டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ள பகுதியின் அருகே வசிக்கும் சிலர் மதுக்கடையால் பெரும் இடையூறு ஏற்படுவதாகவும், அப்பகுதியில் இருந்து மதுக்கடையை அகற்ற வேண்டும் என தொடர்ந்து புகார் கூறிவருகின்றனர்.

    மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு அதிகாரிகளுக்கும் மனு கொடுத்துள்ளனர். இதை தொடர்ந்து டாஸ்மாக் மதுக்கடையை அப்பகுதியில் இருந்து மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் பரவியது.

    இந்நிலையில் மதுக்கடையை மஞ்சூரில் இருந்து வேறு பகுதிக்கு மாற்றினால் தங்களது வியாபாரம் பாதிக்ககூடும் என்பதால் வியாபாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து டாஸ்மாக் மதுக்கடையை வேறு பகுதிக்கு மாற்றம் செய்வதை தவிர்த்து மஞ்சூர் பகுதியிலேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மேலும் மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் 2 மணி நேரம் கடையடைப்பு நடத்தவும் தீர்மானத்தனர். இதன்படி மஞ்சூர் அனைத்து கடைக்காரர்கள் நலச்சங்கத்தின் சார்பில் நேற்று காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை இரண்டு மணி நேரம் கடைகளை அடைத்தனர்.

    இதை தொடர்ந்து மஞ்சூரிலேயே மதுக்கடையை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை கோரி வரும் 20ம் தேதி மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுக்க உள்ளதாக கடைக்காரர்கள் சங்க தலைவர் சிவராஜ் தெரிவித்தார்.

    அரசு டாஸ்மாக் மதுக்கடையை மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் அவசர தேவைகளுக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டார்கள்.

    ×