என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாறைக்குழியில் குப்பைகள் கொட்டுவதை கண்டித்து திருப்பூர் பகுதியில் கடைகள் அடைப்பு
    X

    பாறைக்குழியில் குப்பைகள் கொட்டுவதை கண்டித்து திருப்பூர் பகுதியில் கடைகள் அடைப்பு

    • குப்பை கொட்ட வந்த ஒரு லாரியும் சிறை பிடிக்கப்பட்டது.
    • அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அனுப்பர் பாளையம்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் நெருப்பெரிச்சல் ஜி.என்., கார்டன் பத்திர பதிவு அலுவலகம் அருகில் உள்ள தனியார் பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது. குடியிருக்க முடியவில்லை. எனவே, குப்பை கொட்டக்கூடாது என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    கடந்த 24-ந்தேதி அனைத்து கட்சி சார்பில் ஜி.என். கார்டன் பஸ் நிறுத்தம் அருகே கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து பாறைக்குழியில் குப்பைகளை கொட்டி வரும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஜி.என். கார்டன் பகுதியில் கடையடைப்பு மற்றும் குப்பை லாரி சிறைபிடிப்பு போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, கொ.ம.தே.க., தே.மு.தி.க., பா.ஜ.க., த.வெ.க., சமூக நல அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும், குப்பை கொட்ட வந்த ஒரு லாரியும் சிறை பிடிக்கப்பட்டது.

    மேலும் அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், மறியல் போராட்டத்தை கைவிடாததால் சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் பூலுவப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இச்சம்பவத்தையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    Next Story
    ×