search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தொடர் மின்வெட்டை கண்டித்து கோட்டக்குப்பத்தில் கடைகள் அடைப்பு
    X

    தொடர் மின்வெட்டை கண்டித்து கோட்டக்குப்பத்தில் கடைகள் அடைப்பு

    • மின் துறையை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
    • சிறு, நடுத்தர மற்றும் பெரிய கடைகள் உள்பட வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஏற்படும் தொடர் மின்வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களாக ஏற்படும் மின்வெட்டு மற்றும் குறைந்த அழுத்த மின்சாரம் காரணமாக கோட்டக்குப்பம் பகுதிகளில் உள்ள வீடு, வணிக நிறுவனங்களில் மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி வருகிறது.

    கோட்டக்குப்பம் பகுதியில் மின்வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மக்கள் நல கூட்டமைப்பினர் மின் துறையை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) கோட்டக்குப்பம் பகுதியில் கடையடைப்பு மற்றும் தொடர் முழக்கப் போராட்டத்தை அறிவித்து இருந்தனர்.

    இதற்கிடையில் போராட்டத்தை கைவிடும்படி மக்கள் நல கூட்டமைப்பினரிடம் காவல்துறை சார்பில் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நேற்று கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வானூர் தாசில்தார் நாராயண மூர்த்தி தலைமையில் நகராட்சி ஆணையர் புகேந்திரி, மின்துறை அதிகாரிகள் ஆதிமூலம், சிவசங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் மக்கள் நல கூட்ட மைப்பினருடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    அதில் மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வருவாய்த்துறை நிலம் கையகப்படுத்தி மின் துறைக்கு ஒப்படைக்கப்பட உள்ளதையும், அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் மின்துறை பணியையும் எடுத்துரைத்தனர்.

    போராட்டத்தை கைவிடும்படியும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் இன்று அறிவித்தபடி மக்கள் நல கூட்டமைப்பினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி இன்று காலை 6 மணி முதலே கோட்டக்குப்பம் பகுதியில் டீக்கடை, ஓட்டல் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்படவில்லை. கோட்டகுப்பம் முதல் சின்ன முதலியார்சாவடி வரை சுமார் 3000 சிறு, நடுத்தர மற்றும் பெரிய கடைகள் உள்பட வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன.

    போராட்டக்காரர்கள் நகராட்சி திடலில் இன்று தொடர் முழக்கப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கடையடைப்பு போராட்டத்தையொட்டி கோட்டகுப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×