என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்கள் இன்று 2-வது நாளாக மறியலில் ஈடுபட்டகாட்சி
    X
    பொதுமக்கள் இன்று 2-வது நாளாக மறியலில் ஈடுபட்டகாட்சி

    மயிலாடுதுறை அருகே மணல் குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்: 30 லாரிகள் சிறை பிடிப்பு

    மயிலாடுதுறை அருகே மணல் குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் இன்று 2-வது நாளாக மறியலில் ஈடுபட்டனர். 30 லாரிகள் சிறை பிடிக்கப்பட்டது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சித்தமல்லி மற்றும் கடக்கம் பகுதியில் கடந்த சில வாரங்களாக மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரிக்கு சித்தமல்லி, விராலூர், புலவனூர், குறிச்சி உள்ளிட்ட பகுதிகளின் வழியாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் செல்கின்றன.

    இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது.அதிக அளவில் மணல் லாரிகள் செல்வதால் பள்ளி வாகனங்கள், அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதற்கு சிரமமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

    இந்த வழித்தடத்தில் ஒரு நாளைக்கு 8 முறை இயக்கப்பட்ட அரசு பஸ்கள் தற்போது 3 முறை மட்டுமே இயக்கப்படுகின்றன.

    இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மணல் குவாரிகளை மூடக்கோரி கிராம மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் சித்தமல்லி மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மணல் குவாரிகளை மூடக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர். மணல் ஏற்றி இருந்த 30 லாரிகளையும் வெளியில் விடாமல் சிறை பிடித்தனர்.

                                                         சிறை பிடிக்கப்பட்ட லாரிகள்

    தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. சந்திரன், தாசில்தார் காந்திமதி, டி.எஸ்.பி. கலிதீர்த்தான் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை விடுவிக்க கோரினார்கள். அதற்கு பொதுமக்கள் மணலை இறக்கினால் மட்டுமே லாரிகளை வெளியே செல்ல அனுமதிப்போம் என்றனர். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. நேற்று இரவு விடிய விடிய பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

    மணல் குவாரிகளை மூடும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×