என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    குத்தாலம் அருகே ஒரே நேரத்தில் 2 சிறுவர்கள் குட்டையில் மூழ்கி இறந்தது தென்குடி கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா பெரம்பூர் காவல் சரகம் தென்குடி கிராமம் நடுத் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் கிரு‌ஷணகுமார் (வயது 10), நாகராஜன் மகன் சஞ்சய்(10). இவர்கள் அதே பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    இந்ந நிலையில் நேற்று மாலை கிருஷ்ணகுமாரும், சஞ்சயும் அங்குள்ள தாமரைகுட்டை அருகில் விளையாடினர். அப்போது குட்டையில் தவறி விழுந்த 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். விளையாட சென்ற சிறுவர்கள் 2 பேரும் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோர் தேடினர். அப்போது அவர்கள் குட்டையில் மூழ்கி இறந்து பிணமாக மிதப்பது தெரியவந்தது. அவர்கள் உடலை மீட்டு வீட்டுக்கு கொண்டு சென்றனர்.

    ஒரே நேரத்தில் 2 சிறுவர்கள் குட்டையில் மூழ்கி இறந்தது தென்குடி கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரிதாப சம்பவம் சுற்று வட்டார பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய பகுதிகளில் பெட்ரோலிய ஆய்வு மண்டலம் அமைக்கப்படுவதை கண்டித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது:-

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய பகுதிகளில் பெட்ரோலிய ஆய்வு மண்டலம் அமைப்பதாக கடந்த 19-ந் தேதி மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் 21 வருவாய் கிராமங்களில் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்படும். இந்த அறிவிப்பு விவசாயிகளை வாழ வைக்காமல் சாக அடிக்க நினைகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து அனைத்து விவசாயிகளும் அரங்கத்தில் இருந்து கோ‌ஷங்கள் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து கூறினர்.

    சரபோஜி (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலக்குழு உறுப்பினர்) :- அனைத்து விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும். தனியார் மூலம் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவது முற்றிலும் விவசாயிகளை பாதிக்கிறது. ஆதலால் தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சோமு.இளங்கோ (பாரம் பரிய நெல் காப்பாளர்):- இயற்கை வேளாண்மையை நாகை மாவட்டத்தில் மேம்படுத்திட பாரம்பரிய நெல் விதைகளை முழு மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் சேகர், கூட்டுறவு இணைபதிவாளர் ஜெயம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், உதவி கலெக்டர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பெண் குழந்தை பிறந்ததால் மனைவியை கணவர் ஏற்க மறுத்து தகராறில் ஈடுபட்டார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மறைஞாய நல்லூரை சேர்ந்தவர் தோட்ட வாத்தியார் ரெத்தினம் மகள் வளர்மதி (32). இவருக்கும் கரியாப்பட்டினத்தை சேர்ந்த ராமையன் மகன் மணிவண்ணனுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

    கடந்த 11 மாதங்களுக்கு முன் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து கடந்த 2 மாதத்திற்கு முன் வளர்மதி தனது கணவர் வீட்டிற்கு வந்தார். பெண் குழந்தை பெற்றதால் அவரை கணவர் ஏற்க மறுத்தார். இதனால் வீட்டின் அருகில் உள்ள கொட்டகையில் வளர்மதி தனது குழந்தையுடன் குடியிருந்து வந்தார்.

    இந்த நிலையில் முருங்கைகாய் பறிக்க வளர்மதி தனது கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த கணவர் மணிவண்ணன் மனைவியை சரமாரி தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த வளர்மதி வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இது குறித்து அவர் கரியாப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்தார்.

    கதிராமங்கலத்தில் போராடியவர்கள் மீது ஒரே சம்பவத்துக்கு 2 பொய் வழக்குகளை போட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. உடனடியாக பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று பழ. நெடுமாறன் கூறினார்.

    மயிலாடுதுறை:

    தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தந்தை மறைவிற்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் 23 ஆயிரம் ஹெக்டேரில் பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல் இதுபோன்ற திட்டங்களை அனுமதிப்பது அரசின் ஏதேச்சதிகாரப் போக்கை காட்டுகிறது.

    இந்த திட்டத்தை கேரளா மற்றும் மேற்குவங்க அரசுகள் எதிர்த்ததால் அங்கே செயல்படுத்த முடியவில்லை. மத்திய அரசின் நிர்ப்பந்தத்திற்கு தமிழக முதலமைச்சர் அடிபணிந்துவிட்டார். நெடுவாசல், கதிராமங்கலம் கிராமங்களில் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெட்ரோ கெமிக்கல் திட்டத்தின் மூலம் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவும். காவிரி சமவெளிப்பகுதியை பாலைவனமாக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    கதிராமங்கலத்தில் போராடியவர்கள் மீது ஒரே சம்பவத்துக்கு 2 பொய் வழக்குகளை போட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. உடனடியாக பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

    உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு இழுத்தடிப்பது காவிரி சமவெளிப்பகுதியை பாலைவனமாக்கி அதில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்றவற்றை எடுப்பதற்கான முயற்சியாகும். இதை எதிர்த்துப் போராடும் மக்களை அடக்கி ஒடுக்க நினைப்பது தவறு. எத்தனை அடக்குமுறை வந்தாலும் மக்கள் போராட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். காவிரி சமவெளிப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களும் பெட்ரோ கெமிக்கல் திட்டத்தையும், கதிராமங்கலம் நெடுவாசல் திட்டங்களை எதிர்த்துப் போராடவேண்டும்.

    நீட் தேர்வு என்பது தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் திட்டமாகும். அகில இந்திய தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் வெளிமாநில மாணவர்களுக்கு தமிழக அரசு ரூ.30 லட்சம்வரை வரிப்பணத்தை செலவு செய்கிறது. தமிழக மக்களின் வரிப்பணம் வெளிமாநில மாணவர்களுக்கு செலவாகப் போகிறது. அவசரநிலை பிரகடனத்தின்போது மாநில பட்டியலில் இருந்த கல்வி மத்திய பட்டியலுக்கு மாறியது.


    தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய நீட்தேர்வு ரத்து சட்டத்திற்கு இதுவரை ஜனாதிபதி ஒப்புதல் வழங்கவில்லை. 2-வது முறையும் இதேபோன்று அவசர சட்டம் போட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பவேண்டும், அதற்கும் ஒப்புதல் கிடைக்கவில்லை என்றால் 3-வது முறை அவசர சட்டம் இயற்றினால் அதுவே சட்டமாகிவிடும். இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் தேவையில்லை. இதுதான் அரசியல் சாசன சட்டம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது தமிழர் தேசிய முன்னணி மாவட்ட அமைப்பாளர் பேராசிரியர் முரளிதரன், வழக்கறிஞர் வேலு.குபேந்திரன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை செயற்குழு உறுப்பினர் சித்ரா ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

    அம்மாப்பேட்டை அருகே அ.தி.மு.க பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் வேதாரண்யம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    வேதாரண்யம்:

    தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள கீழகோவில்பத்து உடையார் கோவில் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசிம்மன் (வயது38). அ.தி.மு.க. பிரமுகரான இவர், கீழகோவில்பத்து ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் ஆவார். தற்போது வடபாதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராக பதவி வகித்து வந்தார்.

    ராஜசிம்மன் நேற்றுமுன்தினம் தனது நண்பர் ஒருவருடன் உடையார்கோவிலில் இருந்து அம்மாப்பேட்டை அருகே உள்ள சாலியமங்கலம் வழியாக திருபுவனம் கிராமத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார்சைக்கிள் மற்றும் காரில் வந்த மர்ம நபர்கள் 6 பேர் ராஜசிம்மனின் கார் கண்ணாடியை அடித்து உடைத்தனர். பின்னர் அவரை காரில் இருந்து வெளியே இழுத்து போட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ராஜசிம்மன், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதைத்தொடர்ந்து மர்ம நபர்கள் 6 பேரும் தாங்கள் வந்த கார் மற்றும் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்தநிலையில் ராஜசிம்மன் கொலை தொடர்பாக வலங்கைமான் அருகே உள்ள முள்ளியூரை சேர்ந்த செல்வகுமார் (35), தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (35), மன்னார்குடி அருகே உள்ள காளவாய்க்கரையை சேர்ந்த மாரிமுத்து (29) ஆகிய 3 பேரும் நேற்று வேதாரண்யம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை நீதிபதி தீனதயாளன் வருகிற 31-ந் தேதி(திங்கட்கிழமை) வரை நாகை கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    தலைஞாயிறில் மைனர் பெண்னை இரண்டாம் தாரமாக திருமணம் செய்த வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    தலைஞாயிறு:

    தலைஞாயிறு சந்தை வெளி தெருவை சேர்ந்தவர் கவிதா (வயது 17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் கொடியாளத்தூரில் தனது உறவினர் வீட்டில் தங்கி நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்களை பாடப்பிரிவில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

    அதே ஊரைச் சேர்ந்த அருள்(எ)அருள்ராஜ் என்பவர் கவிதாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது. இரு குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கவிதாவும், அருளும் கோவிலில் திருமணம் செய்து கொண்டு திருப்பூர் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதைதொடர்ந்து கவிதா வீட்டார் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த பிறகு திருப்பூரில் இருந்த இருவரையும் அழைத்து வந்து அருள்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். கவிதாவை மருத்துவ பசோதனைக்கு பிறகு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    கீழ்வேளூர், கீழையூர், தலைஞாயிறில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 893 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களை பராமரிக்கும் பணிகள் நடைபெற உள்ளன.

    இதையொட்டி இந்த கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பயன்பெறும் கீழ்வேளுர், கீழையூர் மற்றும் தலைஞாயிறு ஆகிய ஒன்றியப் பகுதிகளில் நாளை முதல் 29-ந் தேதி வரை முடிய 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    வேதாரண்யத்தில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவபாலன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தோப்புத் துறை பெட்ரோல் பங்க் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர் தேத்தாகுடி தெற்கு பகுதியைச் சேர்ந்த ஷேக்தாவுது மகன் சாகுல்ஹமீது (வயது 55) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளையும், ரூ. 100-ம் போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    சீர்காழி அரசு மருத்துவ‌மனை வளாகத்தினுள் தேங்கி நிற்கும் கழிவுநீர் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டு வருகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகை மாவட்ட செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
    சீர்காழி:

    சீர்காழியில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு சீர்காழி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 2ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நாள்தோறும் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.மேலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிக்சை பெற்று வருகின்றனர்.

    சீர்காழி அரசு மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக அரசு மற்றும் ரோட்டரி போன்ற தன்னார்வ தொண்டு அமைப்புகள் நிதியளிப்புகள் மூலம் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனை வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை. புதிதாக கட்டப்பட்டுள்ள மகப்பேறு மருத்துவமனை கட்டிடத்தின் பக்கவாட்டிலும்,ஆண்கள் புறநோயாளிகள் கட்டிடத்தின் எதிர்புறம் பகுதியில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. பல நாட்களாக தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. மேலும் கழிவுநீரில் மருத்துவமனைக்கு குப்பைகள், கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளன.

    மகப்பேறு மருத்துவமனை பக்கவாட்டில் இவ்வாறு தேங்கி நிற்கும் கழிவுநீரால் பிரசவித்த தாய்மார்களுக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் நோய் தொற்றும் அபாயம் அதிகம் உள்ளது. கழிவுநீர் துர் நாற்றத்தினால் மகப்பேறு மருத்துவமனை கட்டிடத்தில் உள்ள ஜன்னல்களை திறந்து வைக்க முடியவில்லை. இதனால் பச்சிளம் குழந்தைகளுக்கு காற்றோட்ட வசதி இல்லாத நிலையும் உள்ளது. இதேபோல் மருத்துவமனை சமையலறையிலிருந்து வெளியேற்றபடும் கழிவுநீரும் தொட்டிக்கு செல்லாமல் பரந்து விரிந்துள்ள வளாகத்தினுள் வெளியில் தேங்கி நிற்கிறது. இதனால் நோயாளிகள் மற்றும் உடன் வரும் அவர்களது குடும்பத்தினர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

    இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகை மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா கூறுகையில், சீர்காழி அரசு மருத்துவ‌மனை வளாகத்தினுள் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயநிலை உள்ளது. தேங்கி நிற்கும் கழிவுநீரால் மருத்துவமனை வளாகத்தினுள் துர்நாற்றம் வீசுகிறது.மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொது மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை. மருத்துவமனைக்கு அடுத்தடுத்து புதிய கட்டிடங்கள் வந்தாலும், மேம் படுத்தப்பட்டாலும், கழிவுநீர் தேங்கி நிற்பதை இதுவரை எந்த அதிகாரிகளும் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல் மின்நிறுத்தம் ஏற்பட்டால் உபயோகிக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ள பல லட்சம் மதிப்பிலான ஜெனரேக்டர் அமைக்கப்பட்டு அதற்கான தகரகூரை போடப்பட்டும் உள்ளது. ஆனால் ஜெனரேக்டர் எப்போழுதும் மழை,வெயிலில் கிடப்பில் உள்ளது என்றார். விடுதலை சிறுத்தைகள் முகாம் அமைப்பாளர் சந்திர மோகன் கூறுகையில், சீர்காழி அரசு மருத்துவமனைக்கு நாள் தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.மருத்துவமனை தரம் மேம்படுத்தப்பட்டாலும் வளாகத்தினுள்ளேயே குப்பைகள் கொட்டி எடுக்கப்படாமல் வைக்கப்படுள்ளன.

    பால் அளவு குறைவு இதேபோல் அறுவை சிகிச்சை செய்தவர்கள், பிரசவித்த தாய்மார்கள் என 120-க்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களுக்கு வழங்கூடிய காலையில் வழங்ககுடிய பாலின் அளவு குறைவாக உள்ளது. அதேபோல் முட்டை, கொண்டை கடலை ஆகியவை வழங்கப்படுவதில்லை, இங்கு தேங்கி நிற்கும் கழிவுநீர் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டு வருகிறது. என்றார்.
    கதிராமங்கலத்தில் அறவழியில் மீண்டும் போராட்டம் தொடரும், பொதுமக்கள் நீதித்துறையை நம்புகின்றனர் என பேராசிரியர் ஜெயராமன் கூறினார்.
    மயிலாடுதுறை:

    தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வருவதை கண்டித்து கடந்த 30-ந் தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    இது தொடர்பாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் பேராசிரியர் ஜெயராமன் தந்தை தங்கவேல் இறந்து விட்டார். அவரது இறுதி சடங்கில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரி ஜெயராமன் சார்பில் இடைக்கால மனு மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

    அவருக்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வாங்கி நீதிபதி நிஷாபானு உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருந்து நேற்று மாலை ஜெயராமன் வெளியே வந்தார்.

    பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் மயிலாடுதுறை வந்தார். அங்கு தனது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கதிராமங்கலம் போராட்டத்தில் 23 பேர் கைது செய்யப்பட்டோம். இதில் 10 பேர் மீது 12 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தாசில்தாரை கொலை செய்து விடுவேன் என்று கூறியதாக மற்றும் பல்வேறு காரணங்களை கூறி பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மக்கள் எந்தவித கலவரத்தையும் தூண்டவில்லை. காவல் துறை தான் கலவரத்தை உருவாக்கியது. அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறோம்.

    நாகை, திருவாரூர் உள்பட 21 இடத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு மையம் அமைக்க போவதாக தகவல் வந்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    மத்திய அரசு காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். பொதுமக்கள் நீதித்துறையை நம்புகின்றனர். மீண்டும் அறவழியில் போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜெயராமன் தந்தையில் இறுதி சடங்கி இன்று காலை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


    மயிலாடுதுறை அருகே மூவலூரில் குடியிருக்கும் பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க முற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே மூவலூரில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் காவிரி ஆற்றின் அருகே நேற்று டாஸ்மாக் கடை திறப்பதாக தகவல் அறிந்து இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாட்டாளிமக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரேம்குமார், மாவட்ட செயலர் ராஜ்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் விமல் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் திரண்டு புதியதாக திறக்க இருந்த கடையின் முன்பு சாலையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மயிலாடு துறை டிஎஸ்பி.கலிதீர்த்தான் மற்றும் குத்தாலம் இன்ஸ்பெக்டர் சுகுணா, மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் என்பதால் மதுபிரியர்களும் குவிந்தனர்.

    முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் கேட்டபோது, கோழிக்கடை திறக்கபடும் என்றனர். ஆனால் டாஸ்மாக் கடை திறக்க முற்பட்டதால் போராட்டம் நடத்துகிறோம் என்றனர். இது தொடர்பாக நாளை (24-ந் தேதி) தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கபடும் என போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

    அதே நேரம் மது குடிப்பதற்காக வந்தவர்கள். டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என சத்தம் போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
    வேதாரண்யம்:

    நாகை ஆரியநாட்டு தெருவை சேர்ந்த ரவிபாலன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த அமிர்தலிங்கம் (வயது 35), குமரன் (30), சக்திவேல் (23), அண்ணாதுரை (42), வீரையன் (30), பாலமுருகன் (35), ராஜேஷ் (25), மாரியப்பன் (32) ஆகிய 8 மீனவர்கள் கடந்த 17-ந் தேதி மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவர்களை சிறைபிடித்தனர். பின்னர் விசைப்படகை பறிமுதல் செய்து மீனவர்களை காங்கேசன் துறை துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் மீனவர்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சிறைபிடிக்கப்பட்ட 8 மீனவர்களையும், விசைப்படகையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இந்த சம்பவம் நாகை மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைது செய்வதால் அவர்கள் மீன்பிடிக்கச்செல்ல அச்சப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர்கள் பாதிக்கப்படுவதுடன் அவர்களின் வாழ்வாதாரமும் கேள்வி குறியாகி வருகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×