என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    மயிலாடுதுறை அருகே இளம் பெண்ணை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை அருகே உள்ள நமச்சிவாயபுரம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவரது மகள் வனிதா (20). மயிலாடுதுறையில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    திருவிடை மருதூர் அருகே உள்ள மேல செம்மங்குடியை சேர்ந்த கேசவராஜ் மகன் பாட்ஷா என்கிற ராஜீவ்காந்தி (22). இவரும் வனிதாவும் படிக்கும் போது காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜீவ்காந்தி தூத்துக்குடியில் கட்டிட வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் அவர் ஊருக்கு வந்து இருந்தார். அவர் வனிதாவை தொடர்பு கொண்டு திருமண ஆசை வார்த்தை கூறி மாங்குடி வயல் வெளி பகுதிக்கு அழைத்து சென்று கற்பழித்தாக கூறப்படுகிறது.

    இதில் பாதிக்கப்பட்ட வனிதா திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இது குறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுகுணா வழக்கு பதிவு செய்து வாலிபர் ராஜீவ்காந்தியை கைது செய்தார்.

    பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைவதால் கடலூர், நாகை மாவட்டத்தில் அடுத்த தலைமுறை வாழ முடியாது என திருமாவளவன் கூறினார்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சின்னப் பெருந்தோட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஈழவளவன், வேலு குபேந்திரன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-

    கடலூர், நாகை மாவட்டத்தில் 45 விவசாய கிராமங்களில் 57,500 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்தி பெட்ரோல் மண்டலத்தை அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளது.

    இதன் காரணமாக பல்வேறு கிராமங்களில் குடியிருப்புகள் அகற்றப்படுவதுடன், விளை நிலங்கள் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகும்.

    இதுவரை காவிரி டெல்டா வேளாண் மண்டலமாக இருந்து வந்தது. தற்போது கெமிக்கல் மண்டலமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அடுத்த தலைமுறை கடலூர், நாகை மாவட்ட பகுதிகளில் வாழ முடியாது.

    நெற்களஞ்சியமாக திகழும் டெல்டாவில் இத்திட்டம் செயல்படுத்துவது வேதனை அளிக்கிறது. இதனால் மக்கள் கடும் கொந்தளிப்பில் நெடுவாசல், கதிராமங்கலம் போல் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    நாகை மாவட்டத்தில் 2 இடங்களிலும், கடலூர் மாவட்டத்தில் 4 இடங்களிலும் மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் தோழமை கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து நாகை, கடலூரில் தலா ஒரு ஊரை தேர்வு செய்து மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    வேதாரண்யம் அருகே குட்டையில் தவறி விழுந்து முதியவர் பலியானார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நெய்விளக்கு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது70). இவர் சம்பவத்தன்று ஆடுகளுக்கு தழை பறிக்க சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அங்குள்ள குட்டையில் பிணமாக கிடந்தார். அவர் குட்டையில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வேதாரண்யம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விசித்ரா மேரி, சப்-இன்ஸ்பெக்டர் தேவபாலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் சுப்பிரமணியன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி முத்தம்மாள் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
    முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கத்தியால் தாக்க முயன்ற சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினர் சீர்காழியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சீர்காழி:

    முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கத்தியால் தாக்க முயன்ற சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் செல்லையன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சந்திரசேகர், பேரூர் முன்னாள் செயலாளர் சுப்பிரமணியன், வக்கீல் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தாக்க முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பரணிதரன், கார்த்திக், நடராஜன், கல்யாணசுந்தரம், தமிழ்செல்வன், பாண்டியன், பிரகாசம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    சீர்காழியில் ஏற்பட்ட தீவிபத்தில் 8 குடிசை வீடுகள் எரிந்ததில் ரூ.10 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதமானது.

    சீர்காழி:

    சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகே நேரு காலனி உள்ளது. இங்கு 15-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. நேற்று இரவு 2 மணியளவில் இப்பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வரும் பச்சையம்மாள் (வயது55) என்பவரது வீட்டில் திடீரென தீப்பிடித்துள்ளது. அப்போது வீட்டிற்குள் தூங்கிய அவர் மீது எரிந்து கொண்டிருந்த கீற்று விழுந்ததால் அதிர்ச்சியில் எழுந்து பார்த்தபோது வீடு தீப்பிடித்து எரிவது தெரிந்தது.

    இதையடுத்து அவர் வீட்டை விட்டு வெளியில் ஓடிவந்து சத்தம் போட்டார். இதைக்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். அப்போது பச்சையம்மாள் வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதனால் மேலும் அதிகளவில் தீப்பிடித்ததில் அருகில் இருந்த பழனிவேல், சேட், விஜய், செல்வராஜ், பாலா, ராதா, அகோரமூர்த்தி ஆகிய 7 பேர் வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியது.

    இதில் 8 வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து விட்டது. சேதமதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தகவலறிந்து சீர்காழி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இதனால் அருகில் சுமார் 5-க்கும் மேற்பட்ட வீடுகள் தீ விபத்தில் இருந்து தப்பின. இதில் பச்சையம்மாளுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.

    தகவலறிந்து இன்று காலை பாரதி எம்.எல்.ஏ., தாசில்தார் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் தெட்சிணாமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

    பின்னர் தீ விபத்தில் பாதித்த 8 பேர் குடும்பத்துக்கும் அரசு நிவாரண உதவியாக தலா ரூ.5 ஆயிரம் மற்றும் அரிசி, வேட்டி, சேலை, மண்எண்ணை ஆகியவற்றை வழங்கினர். மேலும் பாரதி எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியில் இருந்து 8 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கினார்.

    தீவிபத்தில் எரிந்து சேதமான ரே‌ஷன் கார்டு, ஆதார் கார்டு, பள்ளி சான்றிதழ் ஆகியவற்றிக்கு பதிலாக புதிதாக ஆவணங்கள் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தாசில்தார் பாலமுருகனை, பாரதி எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.

    சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறையில் பேக்கரியில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 மாடி கட்டிடம் முழுவதும் எரிந்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

    மயிலாடுதுறை:

    சீர்காழி தாலுக்கா திருவெண்காட்டை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் பேக்கரி மற்றும் இனிப்பகம் கடை நடத்தி வருகிறார். தரை தளத்தில் விற்பனைக்கூடம், முதல்தளம் மற்றும் 2வது தளத்தில் இனிப்புகள் உற்பத்தி கூடம் செயல்படுகிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    மின்கசிவின் காரணமாக நேற்று இரவு 10.30 மணிக்கு இனிப்புகள் உற்பத்தி கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவி கட்டிடம் முழுவதும் எரிந்தது. தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முனியாண்டி தலைமையில், நிலைய அலுவலர் போக்குவரத்து தனசேகர் மற்றும் குத்தாலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் வீரராகவன் தலைமையிலும் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயை கட்டுக்குள் கொண்டுவரமுடியாததால் அப்பகுதியல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    மேலும் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வந்து 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இனிப்பு தயாரிக்கும் எந்திரங்கள், இனிப்புகள் மற்றும் பொருட்கள் முற்றிலும் தீக்கிரையானது. இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பொறையார் அருகே இளம்பெண் மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தரங்கம்பாடி:

    பொறையார் அருகே திருக்கடையூர் மெயின்ரோடு தொடரி பேட்டையை சேர்ந்தவர் இளவரசு. இவரது மனைவி அகிலா(வயது32). இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது. ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த அகிலா மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து அகிலா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மக்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் பெட்ரோ கெமிக்கல் மண்டல திட்டத்தை முறியடிக்கும் வரை போராடுவோம் என சீர்காழியில் ஜி.கே. மணி கூறினார்.
    சீர்காழி:

    பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி சீர்காழியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் நாகை, கடலூரில் 45 கிராமங்களை கையகப்படுத்தி 57 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு மாநில அரசும் நிலங்களை கையகப்படுத்தி கொடுக்கும் நிலை உள்ளது. பெட்ரோ கெமிக்கல் மண்டலம் தமிழ்நாட்டிற்கு வந்தால் டெல்டா விவசாயம் முற்றிலுமாக சீரழிந்து பாலைவனமாகிவிடும். நிலங்கள் அழிந்து போன பிறகு குடியிருப்புகள் அப்புறப்படுத்தப்படும். இந்த கிராமங்களையொட்டி உள்ள நகரப்புறங்களும் பாதிக்கப்படும்.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேற்குவங்க மாநிலம் நந்தி கிராமத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட போது மம்தா பானர்ஜி தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. அதனால் அந்த திட்டம் மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. அதேபோல் கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் புறக்கணிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பெட்ரோ கெமிக்கல் மண்டலம் தற்போது தமிழ்நாட்டில் கால்பதிக்க முயற்சிக்கிறது.

    கடலூரில் சிப்காட் தொழிற்சாலைகளால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு நிலத்தடிநீர் விவசாயம் முற்றிலுமாக அழிந்து விட்டது. அப்பகுதியை சுற்றி வசிக்கும் மக்கள் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிப்காட் அமைந்துள்ள பகுதியில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றதான சூழல் இல்லை என நீதிமன்றத்தில் வல்லுனர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சிப்காட் தொழிற்சாலையை விட 100 மடங்கு கொடுமையானது பெட்ரோ கெமிக்கல் திட்டம். இதனால் தான் அந்த திட்டம் தமிழகத்திற்கு வரக்கூடாது என்கிறோம். கையகப்படுத்தப்படும் 57ஆயிரம் ஏக்கரில் அந்நிறுவனம் பெட்ரோல் சம்பந்தப்பட்ட ரசாயண தொழிற்சாலைகள், சுத்திகரிப்பு நிலையங்கள் வர உள்ளன.

    இவைகள் அமைக்கப்பட்டால் கிராமங்களில் சுற்றுச்சூழல் கெட்டு நச்சுகாற்றுகள் பரவி கிராமங்களை விட்டு வெளியேறி உள்நாட்டிலேயே அகதிகளாகும் நிலை ஏற்படும். இப்படி மக்களை அழித்து, மண்வளத்தினை வீணாக்கி நிலத்தடிநீரை கெடுத்து விவசாயத்தை அழித்து குடியிருப்புகளை அகற்றி எரிவாயுவை தயாரிக்க வேண்டும் என்பது தான் மத்தியஅரசின் நோக்கம்.

    இந்த திட்டத்திற்காக மத்திய அரசிற்கு மாநில அரசு நிலத்தை கையகப்படுத்தி கொடுக்ககூடாது. பிற மாநிலங்களில் இத்திட்டம் நுழைய எப்படி அனுமதிக்கப்படவில்லையோ அதே போல் தமிழ்நாட்டிலும் அனுமதிக்ககூடாது. மத்தியஅரசு மக்களின் நலனில் அக்கறைகொண்டு இதுபோன்ற திட்டங்களை கைவிடவேண்டும்

    இந்த கெமிக்கல் மண்டலம் அமைய கூடாது என்பதை வலியுறுத்தி அன்புமணிராமதாஸ் எம்.பி. தலைமையில் இன்று(5-ம் தேதி) கடலூர் மாவட்டத்திலும், நாகை மாட்டத்திலும் அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்கள் தோறும் நேரில் சென்று மக்களை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். இந்த திட்டம் முறியடிக்கப்படும் வரை பா.ம.க. தொடர்ந்து போராடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வேதாரண்யத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்த வாலிபர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் மணிமாறன் (வயது 25). இவர் சம்பவதன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வேதாரண்யம் வடக்கு வீதி அருகே சென்ற போது அந்த வழியாக நடந்து சென்ற தோப்புதுறை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலசுப்பிரமணியன் (59) என்பவர் மீது மோதினார்.

    இதில் 2 பேரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டனர். இதைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியன் தஞ்சையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    மணிமாறன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விசித்திராமேரி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் அன்புராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி மீனவர் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (40). மீனவர். இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வேதாரண்யம் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். வேதாரண்யம் - நாகை சாலையில் புதுப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன் அருகில் முருகேசன் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது முன்னால் ஒரு லாரி சென்றது. அதன் டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். பின்னால் வந்து கொண்டிருந்த முருகேசன் மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே இறந்தார். இது குறித்து வேதாரண்யம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுசீலா மேரி வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார்.

    விபத்தில் பலியான முருகேசனுக்கு மனைவியும் 3 மகன்களும் உள்ளனர்.

    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தைச் சேர்ந்த குப்பையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மணிமொழி (வயது32). இவர் சம்பவத்தன்று டியூசனுக்கு சென்ற குழந்தைகளை அழைப்பதற்காக வேதாரண்யம் குருகுலம் அருகே மெயின்ரோட்டில் வந்து கொண்டிருந்த போது தேத்தாகுடி தெற்கு பகுதியை சேர்ந்த வீராச்சாமி (55) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மணிமொழி மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.

    உடனே அவரை அக்கம் பக்கத் தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    முப்போகம் விளையும் நிலத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் பூம்புகார் தருமகுளத்தில் காவிரி காப்போம் பிரச்சார விழிப்புணர்வு பயணம் நிறைவு நாள் பொதுக்கூட்டம் பா.ம.க. இளைஞர் அணி மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும் போது கூறியதாவது:-

    காவிரி ஒப்பந்தத்தை தி.மு.க ஆட்சியில் புதுபிக்காதது தான் காவிரி பிரச்சனைக்கு காரணம். கடந்த 10ஆண்டுகளில் 900டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்ததை தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை.இனியும் பொறுக்கமுடியாது. கர்நாடகாவில் வரவுள்ள சட்டபேரவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறவேண்டும் என்றுதான் மத்திய அரசு காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு அநீதி இழைத்துவிட்டது. மேகதாதுவில் அணை கட்ட பா.ம.க. ஒருபோதும் விடாது.

    தமிழகத்தில் 68 மணல் குவாரிகள் உள்ளன. இதில் கொள்ளிடம் காவிரியில் மட்டும் 50சதவீதம் மணல்குவாரிகள் உள்ளன.இந்த மணல் குவாரிகளில் விதி முறைகளை மீறி 40அடி ஆழத்திற்கு மேல் மணல் அள்ளப்படுகிறது. இதற்கு உரிமை வழங்கிய மாவட்ட கலெக்டர் தான்பொறுப்பு. இன்னும் இரண்டு வாரங்களில் எனது தலைமையில் மணல்குவாரிகளில் ஆய்வு செய்து விதிமீறல்களை வீடியோ பதிவு செய்து சட்டப்படி கடலூர், நாகை, தஞ்சாவூர் கலெக்டர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குதொடர்வேன்.

    காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டவடிவம் இயற்றி அறிவிக்கவேண்டும். இதுதான் காவிரி பிரச்சனைக்கு ஒரே தீர்வு. டெல்டா மாவட்டங்களில் ஒரு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கூட இருக்ககூடாது.

    நாகை, கடலூர் மாவட்டங்களில் 45 கிராமங்களை அப்புறப்படுத்தி முப்போகம் விளையும் 57ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்களை அழித்து பெட்ரோகெமிக்கல் மண்டலம் அமைக்க மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை பா.ம.க. ஒருபோதும் அனுமதிக்காது. மக்களை திரட்டி போராடுவோம். ராணுவமே வந்தாலும் பெட்ரோ மண்டலத்தை தடுத்து நிறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி,மாநில துணை பொதுச்செயலாளர் பழனிசாமி,நாகை வடக்கு மாவட்ட செயலாளர் லண்டன்அன்பழகன்,துணை செயலாளர்கள் செந்தில் குமார், முரளிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×