என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    மேகதாது விவகாரத்தில் முதல்-அமைச்சர் கருத்து தெரிவித்து இருப்பது தவறானது என ஜி. ராமகிருஷ்ணன் கூறி உள்ளார்.

    நாகப்பட்டினம்:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் நாகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி நதி நீர் பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. 2 நாட்களுக்கு முன் நடைபெற்ற விசாரணை குறித்து திருவாரூரில் முதல் - அமைச்சர் அளித்த பேட்டியில் மேகதாதுவில் அணை கட்ட ஒப்புதல் அளிக்கவில்லை என கூறி உள்ளார். இது தவறான தகவலாகும்.


    இரு வேளை மேகதாது விவகாரத்தில் தமிழக நலன் பாதிக்காது என முதல்-அமைச்சர் கூறுவது உண்மையெனில் நாளை வழக்கு விசாரணைக்கு வரும் போது மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் என்றும், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் வழங்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது.

    இந்த நிலையில் அணை கட்டினால் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வக்கீல் எடுத்து கூறும்படி தமிழக அரசு அவருக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

    அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையுமா? இணையாதா? என்பது அவர்களது பிரச்சினை. ஆனால் பிளவுபட்டுள்ளதால் தமிழக மக்கள் நலன் பாதிக்கிறது. இந்த இரு அணிகளையும் பாரதீய ஜனதா அரசு இயக்குகிறது.

    இதனால் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு இரு அணிகளும் கட்டுப்பட்டு நடக்கின்றன. தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாக மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை ஆட்சேபிப்பதில்லை.

    இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.

    வேதாரண்யத்தில் வீடு புகுந்து 20 பவுன் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (49) தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி வேதநாயகி (48). கடந்த 11ம் தேதி குடும்ப பிரச்சினையில் மருமகன் முரளி என்பவர் வேதநாயகியை வெட்டியதில் காயமடைந்து திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சிவகுமார் அவருடனேயே மருத்துவமனையில் தங்கி விட்டார்.

    சிவகுமார் மகன் மணிகண்டன் கல்லூரியில் சேருவதற்காக அவருடைய துணிகள், படிப்பு சான்றிதழ்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் வீட்டில் வைத்திருந்தாராம். மேலும் பீரோவில் 20 பவுன் நகைகளை வைத்து பூட்டி வைத்திருந்தாராம். இந்நிலையில் நேற்று வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் ஓடுகள் பிரிக்கப்பட்டு மர்ம நபர்கள் உள்ளே இறங்கி பீரோவை உடைத்து 20 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் மற்றும் பொருட்களை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து சிவகுமார் வேதாரண்யம் போலீசில் புகார் செய்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் ஜெயேந்திர சரஸ்வதி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    வேதாரண்யம் அருகே மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்காததால் மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு காவல் சரகம் சரபோஜி ராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 48) விவசாய தொழிலாளி. இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு சாகர் என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் உள்ளனர்.

    அன்பழகனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு தமிழரசியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் தமிழரசி தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அன்பழகன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். உடனே அவரை மீட்டு திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வாய்மேடு இன்ஸ்பெக்டர் கரிகால் சோழன், சப்-இன்ஸ்பெக்டர் தனபாலன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகை அருகே 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருவெண்காடு அருகே உள்ள ராதாநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் அமலநாதன். இவரது மகன் லியோ தீபன்(வயது18). இவர் மேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 2015-2016-ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொது தேர்வில் தோல்வி அடைந்தார். இதனால் அவர் கடும் மன உளைச்சலுடன் இருந்து வந்துள்ளார்.

    பின்னர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர் திருவெண்காட்டில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். ஆனால் இவர் பள்ளிக்கு தினமும் விருப்பம் இல்லாமல் சென்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று அவர் வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு செல்வதாக கூறி வெளியே வந்துள்ளார். ஆனால் லியோ தீபன் பள்ளிக்கு செல்லாமல் தனது வீட்டில் இருந்த அவரது தாயாரின் சேலையை எடுத்து கொண்டு மணி கிராமத்தில் உள்ள முத்துபிள்ளை தோட்டத்திற்கு சென்று அங்கு உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து திருவெண்காடு இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சீர்காழி அருகே பள்ளி மாணவனை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் அன்பரசன் (வயது 15). இவர் துளசேந்திர புரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சுதந்திர தினத்தன்று பள்ளிக்கு சென்ற அன்பரசன் பள்ளியில் நிகழ்ச்சி முடிந்து கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த மணி (34), விஜி (35) ஆகியோர் அன்பரசனிடம் எங்கள் வீட்டில் உள்ள ஸ்பீக்கர் பாக்சை காணவில்லை அதை நீ தான் எடுத்து விட்டாய் என்று கூறியுள்ளனர்.

    இதனால் மனமுடைந்த அன்பரசன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அன்பரசன் தந்தை மாரியப்பன் தன்னுடைய மகன் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மணி, விஜி ஆகிய 2 பேரின் தூண்டுதலின் பேரிலே மாணவன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனே 2 பேரையும் கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சீர்காழி அருகே பள்ளி மாணவன் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் அன்பரசன் (வயது 15). இவர் துளசேந்திர புரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று 71-வது சுதந்திர தினவிழா பள்ளியில் கொண்டாடப்பட்டது. அதற்காக அன்பரசன் சென்றுள்ளார். நிகழ்ச்சி மதியம் நிறைவடைந்தது. பின்னர் அன்பரசன் கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த 2 பேர் அன்பரசனிடம் எங்கள் வீட்டில் உள்ள ஸ்பீக்கர் பாக்சை காணவில்லை அதை நீ தான் எடுத்து விட்டாய் என்று அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மாலையில் அன்பரசன் சந்தபடுகை பகுதியில் வாயில் நுரை தள்ளியவாறு இறந்து கிடந்தார். இது குறித்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்பரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மாரியப்பன் தன்னுடைய மகன் சாவில் மர்மம் இருப்பதாக கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார். பள்ளி மாணவன் மர்ம மான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் பூம்புகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சீர்காழி:

    மயிலாடுதுறை செட்டித் தெருவை சேர்ந்தவர் நரேந்திசிங். இவரது மகன் பாலாசிங் (வயது 21). இவர் ஆடுதுறையில் செயல்படும் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. இறுதியாண்டு படித்து வந்தார்.

    இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நண்பர்களுடன் பூம்புகார் சென்று கடலில் குளித்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்று விட்ட அவரை ராட்சத அலை இழுத்து சென்றது. இதனை கண்ட அவரது நண்பர்கள் பாலாசிங்கை காப்பாற்றும் படி சத்தம் போட்டனர். இது பற்றி கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு படகில் சென்று பலியான பாலாசிங் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக பூம்புகார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவத்தால் பூம்புகாரில் பரபரப்பு ஏற்பட்டது.

    பூம்புகார் கடலில் அடிக்கடி இதுபோல் பலர் மூழ்கி பலியாகும் சம்பவம் நடந்து வருவதால் அங்கு ஆழமான பகுதிக்கு சென்று குளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை பலகை கைப்பதுடன், ஒரு போலீஸ்காரரை பணியில் அமர்த்தி கடலில் குளிப்பவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    வேளாங்கண்ணி லாட்ஜில் கடன் தொல்லையால் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள பிரபாலூர் சந்தியாகப்பா கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரபு (வயது 28). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ரேகா என்கிற செல்வி (23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில தினங்களாக கணவன், மனைவி இருவரும் கடன் தொல்லையில் இருந்து வந்தனர். இதனால் விரக்தி அடைந்த இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து இருவரும் குழந்தைகளை தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள தனது உறவினர் வீட்டில் விட்டு விட்டு வேளாங்கண்ணிக்கு சென்றனர்.

    பின்னர் அங்குள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். இதையடுத்து இருவரும் இரவு வி‌ஷம் குடித்து மயக்க நிலையில் கிடந்தனர். இதை பார்த்த லாட்ஜ் ஊழியர்கள் இருவரையும் மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள் செல்வி இறந்து விட்டதாக கூறினர். பிரபுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
    நாகை:

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அதிகாரிகள் கைது செய்யும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

    பருத்தித்துறை கடற்பகுதி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் சென்ற படகும் சிறைபிடிக்கப்பட்டது.

    கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
    மயிலாடுதுறை அருகே ஓ.என்.ஜி.சி. எண்ணை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    குத்தாலம்:

    தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி ஓ.என்.ஜி.சி. எண்ணை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். போராட்டம் தொடர்பாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் தற்போது நிபந்தனை ஜாமீனில் வந்துள்ளனர். ஆனாலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே உள்ள மாதிரிமங்கலம் எம்.ஜி.ஆர். நகரில் ஓ.என்.ஜி.சி. குழாயில் இன்று காலை 5 மணியளவில் உடைப்பு ஏற்பட்டு கியாஸ் கசிவு உருவானது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.

    மாதிரி மங்கலம் வழியாக செல்லும் ஓ.என்.ஜி.சி.குழாயை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    மாதிரிமங்கலம் வழியாக செல்லும் குழாயில் 4-வது முறையாக உடைப்பு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மயிலாடுதுறையில் தலித் கிறிஸ்தவர்கள், தலித் முஸ்லிம்களை எஸ்.சி. பட்டியலில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் தலித் கிறிஸ்தவர்கள், தலித் முஸ்லிம்களை எஸ்.சி. பட்டியலில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி தேசிய தலித் கிறிஸ்தவ பேரவை தமிழக ஒருங்கிணைப்பாளர் தே.எர்னஸ்ட் நெல்சன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    டி.இ.எல்.சி. போதகர்கள் மற்றும் வி.சிறுத்தைகள் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் பா.ரவிச் சந்திரன், எஸ்.சி.எஸ்.டி. பணிக்குழு தஞ்சை மறை மாவட்ட செயலாளர் அருட்தந்தை அமல்தாஸ் ஜான் ஜே.செல்லதுரை, பாஸ்டர் ஜோஸ்வாபாரத், வி.சிறுத்தைகள் கட்சி கடலங்குடி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சி.மோகன் குமார், சாம்மோசஸ், எம்.மைக்கேல், ஒய்.ஜெயசீலன் முன்னிலை வகித்தனர்

    ஆர்ப்பாட்டத்தில் தலித் கிறிஸ்தவர்கள், தலித் முஸ்லிம்களை எஸ்.சி. பட்டியலில் சேர்த்திடு, நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமி‌ஷன் பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். அதேபோல் சிறுபான்மையினர் மீது தாக்குதலை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் சி.எஸ்.ஐ. ரெவரன்ட், பிரபாகரன், சிங்காரவேலு, சமூக நீதிபேரவை கே.பால்ரத்தினம், தோழர் மணி, சோ.சேகர் என்.சி.சி.ஐ. யூ.ஆர்.எம். அமைப்பை சேர்ந்தவர்கள் வி.சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச் செயலாளர் வன்னியரசு கண்டன உரையாற்றினர்.

    நாகையில் போலீசாரை தாக்கி விட்டு கைதி தப்பி ஓடியதால் இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகிறார்கள்.

    கீழ்வேளூர்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள திருக்கண்ணங்குடியை சேர்ந்தவர் விஜயன். இவன் மீது பல்வேறு வழக்கு உள்ளது. இவனை ஒரு திருட்டு வழக்கில் கீழ் வேளூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

    இந்த நிலையில் அவனது காவல் முடிவடைந்ததையொட்டி மீண்டு ம் நாகை கோர்ட்டுக்கு போலீசார் அழைத்து சென்றனர். அவனுக்கு மேலும் 15 நாள் காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு கவிதா உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து விஜயனை மீண்டும் சிறைக்கு போலீஸ்காரர்கள் ராஜேந்திரன், ரமணி ஆகியோர் அழைத்து வந்தனர். அப்போது போலீஸ்காரர்களை தள்ளி விட்டு அவன் தப்பி ஓடி விட்டான். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகிறார்கள்.

    ×