என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சுகாதாரத்திற்கான தேசிய வி்ருதை வழங்க இருப்பதாக மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது.
    நாகப்பட்டினம்:-

    இந்திய அளவில் சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் அரசு பள்ளியை தேர்வு செய்து ஆண்டுதோறும் தேசிய விருது வழங்குவது வழக்கம். மத்திய மனித வள அமைச்சகம் பள்ளிகளின் ஆய்வு நடத்திய பிறகே இந்த விருதை அறிவிக்கும்.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விருது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீச்சன்குப்பம் என்ற கிராமத்தில் இயங்கி வரும் பஞ்சாயத்து அரசு ஆரம்ப பள்ளிக்கு வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இக்கிராமம் 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் வெகுவாக பாதிக்கப்பட்டது. அதில் பள்ளி கட்டடங்கள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டன. இதில் இப்பள்ளியில் பயின்ற 80 மாணவர்கள் உள்பட இக்கிராமத்தில் 570 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால், அதன் பிறகு அக்கிராமத்தில் உள்ளவர்கள் அயராத முயற்சியால் பள்ளியில் சுகாதாரத்தை மேம்படுத்தினர். கடினமான சூல்நிலையில் இருந்து வழக்கமான நிலைமைக்கு திரும்பி சிறந்த சுகாதாரத்தை ஏற்படுத்தியதை பாராட்டி 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையை அரசு வழங்க உள்ளது. மேலும், பள்ளியில் பாதுகாப்பான குடிநீர், சுத்தமான கழிவறைகள் மற்றும் கைகளை சுத்தம் செய்யும் பழக்கம் போன்றவை சிறப்பாக இருப்பதால் சுகாதாரத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 அரசு பள்ளியிலிருந்து தமிழ்நாட்டின் பள்ளிக்கு இந்த விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 7-ந் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா நேற்று இரவு 7 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருக் கொடியை தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் புனிதம் செய்து வைத்தார். புனிதம் செய்யப்பட்ட பின் அக்கொடி விரிக்கப்பட்டு வாத்தியங்கள், வாணவேடிக்கைகள், மாதா வாழ்த்துக்கள் முழங்க வேளாங்கண்ணி கடைத் தெரு, ஆரிய நாட்டு தெரு, கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    பல்லாயிர கணக்கானோரின் வாழ்த்து முழக்கங்களுடன் மாதாவின் திருபெருமை பாடல் ஒலிக்க தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார், பேராலய அதிபர் பிரபாகர் அடிகளார், உதவி பங்கு தந்தைகள் ஆகியோர் கொடி கம்பத்தில் கொடியை ஏற்றினர்.

    இதை தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது. கொடி மரத்தை நோக்கி பக்தர்கள் காசுகளை வீசி எறிந்தனர். அக் காசுகளை மற்ற பக்தர்கள் மாதாவின் பிரசாதமாக கருதி எடுத்து சென்றனர்.

    தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு ஆராதனை, நற்கருணை ஆசீர்வாதம், தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டன. பேராலயம் முழுவதும் பல வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவை பலாக்கும் வண்ணம் ஒளி வெள்ளத்தில் பேராலயம் ஜொலித்தது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. வருகிற 7-ந் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நடைபெறுகிறது.

    நாகை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே உள்ள திருமருகல் ஆண்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் மணிகண்டன் (26). கூலித் தொழிலாளி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.இதனால் மனம் உடைந்த மணிகண்டன் வி‌ஷம் குடித்து விட்டார். அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

    கடல் சீற்றம், காற்றின் வேகம் குறைந்த நிலையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவு மீன் கிடைக்காததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம், கொள்ளபள்ளம் ஆகிய இடங்களை சேர்ந்த மீனவர்கள் பலர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் சீற்றம், காற்றின் வேகம் குறைந்த நிலையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவு மீன் கிடைக்கவில்லை.

    இதனால் கலக்கம் அடைந்துள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல ஆர்வமில்லாமல் உள்ளனர். சிலர் மட்டும் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இதன் எதிரொலியாக மீன் வியாபாரிகளும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் பழமையான கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாகும். வங்க கடலோரம் அமைந்துள்ள இந்த பேராலயத்துக்கு உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந்தேதி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    முன்னதாக கொடி ஊர்வலம் நடக்கிறது. கொடியேற்று நிகழ்ச்சியையொட்டி சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன. தமிழ், மராத்தி, மலையாளம், ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, கொங்கனி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருப்பலி நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி நடக்கிறது. அதைத்தொடர்ந்து 8-ந் தேதி ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

    வேளாங்கண்ணி பேராலய திருவிழா வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    மயிலாடுதுறை அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை சித்தர்காடு பனந்தோப்பு தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் நந்தகுமார்(வயது 20). இவர் நேற்று கச்சேரி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிரே வந்த கார் மீது மோதி படுகாயமடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவகல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் சோமாலியா போல் தமிழகம் மாறிவிடும் என்று வேதாரண்யத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது;

    நீட் தேர்வால் இனி தமிழன் யாரும் மருத்துவராக ஆக முடியாது. நீட் தேர்வு, விவசாயம், மீனவர் பிரச்சனை பற்றி அ.தி.மு.க.விற்கு அக்கறை இல்லை. அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடத்தான் நேரம் சரியாக இருக்கிறது. 2 மாதமாக வைகோ கனவில் கருணாநிதி வந்தால் அதன்பேர் கனவா? வயதான காலத்தில் கண்டகண்ட கனவு வருகிறது. கருணாநிதிக்கு பிறகு தி.மு.க.வும் உடையும்.


    தமிழக மீனவர் மீது இலங்கை ராணுவம் எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் எல்லை தாண்டி வந்தால் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என அறிவிக்கும் அரசு ஏன் இலங்கை ராணுவம் எல்லைத் தாண்டி மீனவர்களை தாக்கும் போது எல்லை தாண்டிய பயங்கரவாதம் என அறிவிக்கவில்லை.

    கச்சத்தீவை மீட்க வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் சோமாலியா போல் தமிழகம் மாறிவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெட்ரோலிய ரசாயன மண்டலத்திற்கு எதிராக பூம்புகார் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவெண்காடு:

    நாகை, கடலூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட 45 கிராமங்களில் பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைப்பதாக மத்திய-மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதில் நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா அகரவட்டாரம், வேட்டங்குடி, திருமுல்லைவாசல், ராதாநல்லூர், எடமணல், திருநகரி, நெப்பத்தூர், தென்னாம்பட்டினம், பெருந்தோட்டம், அகரபெருந்தோட்டம், திருவெண்காடு, மணிகிராமம், மேலையூர், திருமயிலாடி, மாதானம், கூத்தியம்பேட்டை உள்ளிட்ட 20 கிராமங்களில் பெட்ரோல் எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பெட்ரோலிய ரசாயன மண்டலம் செயல்படுத்தப்பட்டால், இன்னும் சில ஆண்டுகளில் டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறிவிடும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த திட்டத்திற்கு எதிராக விவசாயிகள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று பெட்ரோலிய ரசாயன மண்டலத்திற்கு எதிராக பூம்புகார் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் திட்டமான பெட்ரோலிய ரசாயன மண்டல அமைக்கும் உத்தரவை மத்திய-மாநில அரசுகள் திரும்ப பெற வேண்டும். அதற்கு பதிலாக காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைநிலங்கள் மற்றும் நிலத்தடிநீரை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் எரிவாயு போன்ற திட்டங்களை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
    நாகைப்பட்டினம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்களை மாவட்ட கலெக்டர் சுரேஷ் குமார் அறிவித்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    களிமண்ணால் செய்யப்பட்டதும் சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயனக் கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச் சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

    நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களுடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படமாட்டாது.

    நாகப்பட்டினம்-வெட்டாறு (நாகூர் பாலம் அருகில்) மற்றும் புதிய கடற்கரை (வங்களா விரிகுடா கடற்கரை பகுதி) மயிலாடுதுறை-காவிரி ஆறு தரங்கம்பாடி-கடற்கரை (வங்களா விரிகுடா கடற்கரைபகுதி) பூம்புகார் -கடற்கரை (வங்களா விரிகுடா கடற்கரை பகுதி) ஆகிய இடங்களில் தான் சிலைகளை கரைக்க வேண்டும்.

    மாவட்ட கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை மேலும் விபரங்களுக்கு அணுகலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    நாகை அருகே காரைக்காலில் இருந்து டெம்போ வேனில் கடத்திவரப்பட்ட 5 ஆயிரம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் பழையாறு அருகே நண்டலாறு குறுக்கே சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு நேற்று இரவு தலைமை காவலர் ரமேஷ், ஏட்டு கண்ணன் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது பால்வண்டி என்ற போர்டுடன் வந்த டெம்போ வேனை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    அப்போது வேனை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் உடன் வந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் வேனை சோதனையிட்டனர். அப்போது இருவரும் தப்பியோடினர். ஆனால் ஏட்டு கண்ணன் அவர்களில் ஒருவரை விரட்டி பிடிக்க முயன்றபோது அவரும் சட்டையை கழட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். சட்டையில் லைசென்ஸ் மட்டும் இருந்தது.

    இதையடுத்து வேனை சோதனையிட்டபோது அதில் 103 அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர் இதுபற்றி பொறையார் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முருகவேலுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது 103 அட்டை பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு 148 மது பாட்டில்கள் வீதம் 4 ஆயிரத்து 944 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வேனுடன் மதுபாட்டில்களை கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வையற்ற 4 பயனாளிகளுக்கு கண்ணாடி மற்றும் ஊன்றுகோலை கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

    மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 31 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 352 என மொத்தம் 383 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவார காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவினை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வையற்ற 4 பயனாளிகளுக்கு கண்ணாடி மற்றும் ஊன்றுகோல்களையும், சமூகப் பாதுகாப்புத் திட்டம் சார்பில் 2 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாதம் தோறும் ரூ.1000 உதவித் தொகைக்கான ஆணையினையும் கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன், தனித்துணை கலெக்டர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) தேன்மொழி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    நாகை அருகே வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் முருகையன். இவருடைய மனைவி கஸ்தூரி (வயது 42). கடந்த 20 வருடங்களாக கஸ்தூரி கணவரை பிரிந்து சென்னையில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கஸ்தூரி நாகை மாவட்டம் முல்லையாம் பட்டினம் நெப்பத்தூர் பகுதியில் உள்ள அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தியை பார்ப்பதற்காக வந்துள்ளார்.

    இங்கு சில நாட்கள் தங்கி விட்டு பின்னர் சென்னை திரும்புவதாக கூறிவிட்டு சென்றவர், நெப்பதூர் அருகே உள்ள வயல் பகுதியில் வி‌ஷம் குடித்து இறந்து கிடந்தார். இது குறித்து திருவங்காடு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் நாகை மாவட்டம் மேலத்தெரு அந்தனப்பேட்டையை சேர்ந்தவர் பாலசுந்தர் (34). இவருக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகிறது. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து நாகை டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×