என் மலர்
நீங்கள் தேடியது "ADMK"
- தங்களது ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டதாக அதிமுக தெரிவித்தது.
- போராட்டத்தில் பாஜக, அமமுக, கொங்கு இளைஞர் பேரவை, புரட்சி பாரதம் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கல்லூரி மாணவரகள் 10 லட்சம் பேருக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க வலியுறுத்தி சென்னையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக ஆட்சியில் மாணவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக லேப்டாப் வழங்குவதால் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
தங்களது ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டதாக அதிமுக தெரிவித்தது.
இந்த போராட்டத்தில் பாஜக, அமமுக, கொங்கு இளைஞர் பேரவை, புரட்சி பாரதம் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதற்கிடையே, இலவச லேப்டாப் திட்டத்தால் பயன்பெற்றவர்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
இது ஒரு பக்கம் இருக்க, மதுரையில் மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் எனக் கூறி அதிமுக போராட்டம் நடத்தியது.
- வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம்.
- உங்கள் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா?
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா?
கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் #VBGRAMG குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?
#ThreeFarmLaws, #CAA போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா திருவாளர் பழனிசாமி?
#MGNREGA-வில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற பேரறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்?
திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்! நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை அதிமுக எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா? உங்கள் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா?
வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்?
இவ்வளவு குனிந்து கும்பிடு போடும் உங்களது கட்சிக்கு, "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற பெயர் எதற்கு?
நான் கேட்கவில்லை; தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்! என்று கூறியுள்ளார்.
- தமிழக அரசியல் வரலாற்றில் தி.மு.க.வின் உண்மை முகம், கோர முகம், பழிவாங்கும் முகம் என்பதெல்லாம் மக்கள் மத்தியில் தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
- தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிற ஒத்த கருத்துள்ள அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்று சேர்ந்து களம் காணவேண்டும்.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று கூறியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி 11 மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்து சரித்திர சாதனை படைத்தார். அதில் பல மருத்துவமனைகளில் கட்டுமான முறைகேடு நடைபெற்றதாக தி.மு.க. வைத்த குற்றச்சாட்டில், துளிகூட முகாந்திரம் இல்லை என நீதியரசர்கள் கூறியதில் தி.மு.க. தற்போது பின்வாங்கியுள்ளது.
ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவ கனவை நினைவாக்கும் வகையில், 11 மருத்துவக் கல்லூரியில் கொண்டு வந்து அதனைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை கொண்டு வந்து அதன் மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பை நனவாக்கி, சமூக நீதியை எடப்பாடி பழனிசாமி காத்தார்.
மக்களுக்காக உழைத்து வரும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தி விடலாம் என்று தி.மு.க. நினைத்தால் அதில் தோல்விதான் கிடைக்கும் என்பது தான் தற்போது வந்த மகத்தான தீர்ப்பு மூலம் நமக்கு கிடைத்துள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் தி.மு.க.வின் உண்மை முகம், கோர முகம், பழிவாங்கும் முகம் என்பதெல்லாம் மக்கள் மத்தியில் தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இன்றைக்கு, தி.மு.க.வின் சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட, தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிற ஒத்த கருத்துள்ள அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்று சேர்ந்து களம் காணவேண்டும்.
யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது போல தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிக்கு மகுடம் சூட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைவரும் ஒன்று கூட வேண்டும் என்றார்.
- உதயநிதி பிறந்தநாளைக் கொண்டாடுவதில் செலவிடும் நேரத்தை, தன் துறை சார்ந்த பணிகளில் என்றைக்காவது செலவிட்டு இருக்கிறாரா?
- அரசுப்பள்ளிகளின் கட்டுமானத்தை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலினின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்
திருவள்ளூரில், பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்துவிழுந்து ஏழாம் வகுப்பு மாணவர் மோகித் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
"கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" என்று சினிமா மேடை போல ஒரு மேடை அமைத்து, தனக்கு தானே ஒரு வெற்றுப் பாராட்டு விழா நடத்திய செலவில், அரசுப்பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிப்பதில் செலவிட்டு இருந்தால், இன்றைக்கு இந்த பரிதாப உயிரிழப்பை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.
பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக இருப்பவரோ, இன்னும் ரசிகர் மன்றத் தலைவர் மனநிலையில் இருந்து வெளிவராமல், உதயநிதி பிறந்தநாளைக் கொண்டாடுவதில் செலவிடும் நேரத்தை, தன் துறை சார்ந்த பணிகளில் என்றைக்காவது செலவிட்டு இருக்கிறாரா?
பாழடைந்த அரசுப்பள்ளிக் கட்டுமானங்களால், மாணவர்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உயிரிழந்த மாணவர் மோகித்தின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்குவதுடன், அரசுப்பள்ளிகளின் கட்டுமானத்தை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலினின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- நடுக்கத்தில் தான் அ.தி.மு.க. என்ஜின் இல்லாத வண்டி என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.
- இன்றைக்கு தி.மு.க. சுவாசம் இல்லாத கட்சியாக உள்ளது.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், அ.தி.மு.க நிர்வாகிகள் சென்னையில் உள்ள தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரிலும், தங்கள் பெயரிலும் விருப்ப மனுவை அளிக்க வைகை எக்ஸ்பிரசில் புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 54 ஆண்டுகளில் தேர்தல் களத்தில் முதன்மை இயக்கமாக, தேர்தலில் முதல் துவக்கமாக எம்.ஜி.ஆர். காலம் தொட்டு, அம்மா காலம் வரை அ.தி.மு.க. இருந்து வந்தது. இன்றைக்கு இந்த இருபெரும் தலைவர்களின் மறுவடிவமாக உள்ள எடப்பாடி பழனிசாமி காலத்தில் தற்போது தேர்தல் பணியில் துள்ளி குதித்து வருகிறது.
தேர்தல் பிரச்சாரத்தை முதலில் தொடங்கி 175 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி எழுச்சி பயணத்தை மேற்கொண்டார். 12,000 கிலோமீட்டர் பச்சை பேருந்து மூலம் பச்சை தமிழராய் ஒரு கோடி மக்களை சந்தித்தார். இந்த சரித்திர சாதனையை யாரும் முறியடிக்க முடியாது.
அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு வழங்கும் முதல் நாளில் 1,237 மனுக்கள் பெறப்பட்டு அதில் 234 தொகுதிகளில் தனி தொகுதியை தவிர 349 தொண்டர்கள் தங்கள் தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனுவை அளித்தனர்.
தற்பொழுது அம்மா பேரவையின் சார்பில் மதுரை மாவட்டத்தில் தனி தொகுதி தவிர உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட 9 தொகுதிகளில் மதுரை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி நிற்க வேண்டும் என்று விருப்ப மனு அளிக்க உள்ளோம். மதுரையில் எந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமி நின்றாலும் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள்.
தற்போது நடைபெற்று வரும் தி.மு.க.வின் சர்வாதிகார, குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மீண்டும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் வெற்றி மகுடம் சூட்ட தயாராகிவிட்டனர்.
குமரி முதல் இமயம் வரை வெற்றி வரலாறு படைக்கும் வகையில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி அமைத்து உள்ளது. குறிப்பாக இந்த கூட்டணி குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஜனநாயக ஆட்சியை மலரச் செய்யும். அதனால் தான் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை கண்டு ஸ்டாலினும், உதயநிதியும் இன்றைக்கு நடுங்கி போய் உள்ளார்கள்.
நடுக்கத்தில் தான் அ.தி.மு.க. என்ஜின் இல்லாத வண்டி என்று விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால் இன்றைக்கு தி.மு.க. சுவாசம் இல்லாத கட்சியாக உள்ளது. செயற்கையாக சுவாசத்தை கொடுக்க விளம்பரங்களை செய்து வருகிறார்கள்.
தி.மு.க.வின் தோல்வியை பற்றி உளவுத்துறை மூலம் அறிந்த ஸ்டாலின் தற்போது மகளிர் உரிமைத் தொகை கூடுதலாக வழங்கப்படும் என்று கூறுகிறார். இந்த ஆட்சி முடிய 3 மாதம் உள்ளது. இப்போது அறிவித்து என்ன பயன்? இதை எல்லாம் மக்கள் நம்பப் போவதில்லை தி.மு.க. வுக்கு மக்கள் ரெட்கார்டு போட்டு விடுவார்கள்.
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகள், ஒத்த கருத்துடைய கட்சிகள் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இணைவதை உறுதி செய்யும் வகையில் தான் பொதுக்குழு தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிச்சயமாக அது நிறைவேறும், தை பிறந்தால் வழி பிறக்கும்.
யார் யார் கூட்டணிக்கு வருவார்கள் என்று ஜாதகம் பார்த்து சொல்ல முடியாது. தி.மு.க. வை எதிர்த்து அரசியல் செய்பவர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து மக்கள் அவர்களை வரவேற்க தயாராக உள்ளார்கள்.
அ.தி.மு.க.வுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். 54 வருடங்களாக எங்களுக்கு எதிரி தி.மு.க. தான். சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா? என்றுதான் பார்ப்பார்கள். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், ஒரு லட்சம் உதயநிதி ஸ்டாலின் வந்தாலும் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும் என்றார்.
- ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றுள்ளார்.
- கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தியிடம் ஜெயக்குமார் தோல்வியடைந்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் அந்த தொகுதியின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த ஜெயக்குமார் கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தியிடம் தோல்வியடைந்தார்.
அதிமுக தலைமை மீது ஜெயக்குமார் விரக்தியில் இருப்பதாகவும் விரைவில் அதிமுகவிலிருந்து ஜெயக்குமார் விலகுவார் என்று கூறப்பட்டது. இந்த தகவல் ஜெயக்குமார் மறுத்தார். மூச்சு உள்ளவரை அதிமுகவில் இருப்பேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், "2026 சட்டமன்றத் தேர்தலிலும் ராயபுரம் தொகுதியில்தான் போட்டியிடுவேன். இதில் NO DOUBT. 25 ஆண்டுகள் எனக்கு வெற்றியைக் கொடுத்த ராயபுரம் மக்களை விட்டுவிட்டு வேறு தொகுதிக்கு மாற மாட்டேன்" என்று உறுதியுடன் தெரிவித்தார்.
- கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்த பிறகு வேட்பாளர்களை டெல்லி மேலிடம் முடிவு செய்யும்.
- தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய-மந்திரி பியூஸ் கோயல் தமிழ்நாட்டிற்கு அறிமுகமானவர்.
புதுடெல்லி:
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை பா.ஜ.க.- அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சந்திக்கிறது.
இந்த கூட்டணியில் கூடுதலாக புதிய கட்சிகளை இணைத்து கூட்டணியை வலுப்படுத்துவது பற்றி இரு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்கள். இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது.
கடந்த 11-ந்தேதி தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.
அதைத் தொடர்ந்து டெல்லி சென்று மத்திய-மந்திரி அமித்ஷா, கட்சி தலைவர் நட்டா ஆகியோரையும் நயினார் நாகேந்திரன் சந்தித்து கூட்டணி நிலவரங்கள் தொடர்பாக விளக்கினார்.
கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் நடந்தாலும் இன்னொரு பக்கத்தில் தேர்தலுக்கு பா.ஜ.க.வை முழு அளவில் தயார் செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை பா.ஜ.க. வகுத்துள்ளது. அதன் ஒரு கட்டமாக 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டங்களை தொகுதி வாரியாக நடத்தி வருகிறது. இன்றுடன் இந்த கூட்டம் முடிவடைகிறது.
ஏற்கனவே வெற்றி வாய்ப்பு உள்ள 70 தொகுதிகள் பட்டியலை பா.ஜ.க. தயாரித்து வைத்துள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கான தகுதியான நபர்கள் பெயர், விவரங்களையும் சேகரித்து உள்ளது. ஒரு தொகுதிக்கு தலா 3 பேர் வீதம் பட்டியல் தயாரித்து மேலிடத்திடம் கொடுத்துள்ளார்கள்.
கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்த பிறகு வேட்பாளர்களை டெல்லி மேலிடம் முடிவு செய்யும். தமிழக தேர்தல் பொறுப்பாளராக ஏற்கனவே நியமிக்கப்பட்டு இருந்த பைஜெயந்த் பாண்டா தமிழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி கள நிலவரங்களை ஆய்வு செய்து மேலிடத்திற்கு அறிக்கையும் தாக்கல் செய்து இருந்தார்.
இந்த நிலையில், தற்போது புதிதாக 3 மத்திய மந்திரிகளை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து கட்சி தலைவர் நட்டா அறிவித்துள்ளார். பொறுப்பாளராக மத்திய-மந்திரி பியூஸ் கோயல், இணை பொறுப்பாளர்களாக மத்திய-மந்திரிகள் அர்ஜூன்ராம் மெக்வால், முரளிதர் மோகல் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.
தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய-மந்திரி பியூஸ் கோயல் தமிழ்நாட்டிற்கு அறிமுகமானவர். கடந்த காலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு திறம்பட பணியாற்றியவர்.
மத்திய-மந்திரி அமித் ஷாவுக்கு வலது கரம் போல் செயல்படுபவர். கட்சியில் மூத்த நிர்வாக அனுபவம் கொண்டவர்.
பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடர்புகளை ஒருங்கிணைத்து அடிமட்டத்தில் கட்சியை கட்டமைத்து தேர்தல் பணியை ஒருங்கிணைப்பதில் கைதேர்ந்தவர். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு தெளிவான தரவுகளுடன் பதிலடி கொடுப்பதிலும் கில்லாடி.
மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் இவரது தேர்தல் வியூகம் பா.ஜ.க.வின் வெற்றிக்கு கைகொடுத்தது. அந்த அடிப்படையில் தமிழகத்திலும் அவரது வியூகம் கூட்டணி வெற்றிக்கு பலன் அளிக்கும் என்று கட்சி மேலிடம் நம்புகிறது.
ஏற்கனவே கூட்டணியை வலுப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இவற்றை தீர்ப்பதிலும் பியூஸ்கோயல் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும் தேர்தலை சந்திப்பதற்காக பா.ஜ.க. தயாராகி வருகிறது. வருகிற தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டத்துடன் பா.ஜ.க களப்பணியை தீவிரப்படுத்தி வருகிறது.
புதிய பொறுப்பாளர்கள் நியமனத்தை தொடர்ந்து பா.ஜ.க.வில் தேர்தல் பணிகள் சூடுபிடிக்கும் என்று தமிழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்த பைஜெயந்த் பாண்டா அசாம் மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் இணை பொறுப்பாளர்களாக ஜம்மு-காஷ்மீர் மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுனில் குமார் சர்மா எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி தர்ஷனா பென் ஜர்தோஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
- தான் கண்ட போர்களில் எல்லாம் வெற்றி வாகை சூடிய மாவீரர்.
- முத்தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தர்.
பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா டெல்லியில் துணை ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பெரும்பிடுகு முத்தரையரின் தபால் தலையை வெளியிட்டார்.
இந்த நிலையில், பெரும்பிடுகு முத்தரையருக்கு நினைவு தபால் தலை வெளியிட்டதற்காக பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தான் கண்ட போர்களில் எல்லாம் வெற்றி வாகை சூடிய மாவீரர், முத்தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தர், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பெரும் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, இந்திய அரசு சார்பில் அஞ்சல் தலை வெளியிட்டமைக்கு மாண்புமிகு இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கும், மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் தமிழக மக்களின் சார்பிலும்,
அ.தி.மு.க. சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன் என்று கூறியுள்ளார்.
- அ.தி.மு.க.வையும், எடப்பாடி பழனிசாமி பற்றியும் வசை பாடி விமர்சனம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
- தமிழக இளைஞர்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்று கவனம் செலுத்த வேண்டும்.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் எதிர்காலம் அ.தி.மு.க. தான். அப்படிப்பட்ட வலிமையான இயக்கத்தை என்ஜின் இல்லாத கார் என்றும் அதை பா.ஜ.க. என்ற லாரி கட்டி இழுக்க முயன்று வருகிறது என்றும் திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி உறுதியான கூட்டணி. இந்த கூட்டணியால் தி.மு.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்று கலங்கி போய் ஒரு நாடகத்தை உதயநிதி ஸ்டாலின் அரங்கேற்றி உள்ளார்.
இன்றைக்கு உதயநிதி ஸ்டாலினின் வாரிசு அரசியலுக்கு தடையாக இருப்பது அ.தி.மு.க. தான்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை கண்டு நடுங்கிப் போயிருக்கும் உதயநிதி ஸ்டாலின் வரம்பு மீறி 54 ஆண்டு பொது வாழ்வில் மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து வந்த அ.தி.மு.க.வையும், எடப்பாடி பழனிசாமி பற்றியும் வசை பாடி விமர்சனம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வாரிசு அரசியலில் டெல்லியில் முடிவுரை எழுதப்பட்டு தற்போது பீகாரிலும் வாரிசு அரசியலுக்கு முடிவுரை எழுதி மக்கள் தந்த தீர்ப்பை கண்டு தான் ஸ்டாலினும், உதயநிதியும் அரண்டு போய் உள்ளார்கள்.
அந்த காரில் சென்றார், இந்த காரில் சென்றார் என காரின் மீது கவனம் செலுத்தும் உதயநிதி ஸ்டாலின் தமிழக இளைஞர்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்று கவனம் செலுத்த வேண்டும். வகுப்பு அறையில் மாணவிகள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள். சக மாணவர்களால் மாணவன் அடித்து கொலை.
இப்படி எங்கே செல்கிறது இளைய சமுதாயம்? அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், இளைஞரணி என்ற பெயரில் அ.தி.மு.க.வை பற்றியும் எடப்பாடி பழனிசாமியை பற்றியும் வசை பாடி தான் கலங்கி நிற்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.
இதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி என்ற சாமானியர் முடிவுரை எழுதும் வகையில் எழுச்சி பயணத்தை மேற்கொண்டார். அ.தி.மு.க.வை வெற்றிப்பாதை அழைத்துச் செல்வதை பொறுத்துக் கொள்ள முடியாத நீங்கள் எத்தனை கோடி விமர்சனங்கள் வைத்தாலும் அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்கொள்வார்கள். தமிழக மக்கள் உங்கள் விமர்சனத்தை புறம் தள்ளுவார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக அமர்வார். தி.மு.க.விற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசியல் அநாகரீகம் இன்றி எத்தனை விமர்சனம் செய்தாலும் அ.தி.மு.க. தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள், எள் முனையளவும் பின் வாங்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
- இன்ஜின் இல்லாத கார்தான் அதிமுக
- வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்கவேண்டும்.
திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு இன்று நடைப்பெற்றது. அதில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
"மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நமக்கெல்லாம் ஒரு சவால் விடுத்துள்ளார். அடுத்த இலக்கு தமிழ்நாடுதான் என்று. நான் அமித்ஷாவிற்கும், அவரது அடிமைக் கூட்டத்திற்கும் ஒன்று சொல்கிறேன். நீங்கள் எவ்வளவு மிரட்டினாலும் அதை எதிர்கொள்வதற்கு எங்களது கருப்பு, சிவப்பு படை, இளைஞரணி படை களத்தில் இருக்கும். டெல்லியின் ஆதிக்கத்தை எதிர்க்கத்தான் நாங்கள் வருகிறோம் என்று சொல்லித்தான் கருப்பு, சிவப்பு கொடியை ஏற்றினார் அண்ணா. அன்றிலிருந்து தமிழ்நாட்டை காப்பதற்கான போர்வரிசையில் என்றுமே திமுக முன் நின்றுள்ளது. இந்த போர்களத்தில் எதிரிகள்தான் மாறியுள்ளனர். திமுக அப்படியேத்தான் இருக்கிறது.
ஏனெனில் முதலமைச்சர் சொன்னவாறு 'தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான்'. அப்படிப்பட்ட நம்மை பார்த்து தயாராக இருங்கள், தமிழ்நாட்டிற்கு வருகிறோம் என மிரட்டப் பார்க்கிறார்கள். ஆட்சி, அதிகாரத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சி அல்ல திமுக. தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. மிசா என்ற நெறிபாட்டில் நீந்தி வந்த இயக்கம். உலக வரலாற்றிலேயே ஈடு, இணை இல்லாத மொழிப்போரை நடத்தி அதிலும் வெற்றிப் பெற்ற இயக்கம். தமிழ்மொழிக்காக தண்டவாளத்தில் தலை வைத்த இயக்கம் திராவிட இயக்கம். பல துரோகங்களை, அடக்குமுறைகளை வீழ்த்தியது. இப்படிப்பட்ட எங்களை குஜராத்தில் இருந்து மிரட்டி, அடிபணிய வைக்க நினைத்தால், நிச்சயம் அது உங்கள் கனவில் கூட நடக்காது. கடைசி உடன்பிறப்பு இருக்கும்வரையில் தமிழ்நாட்டை சங்கி கூட்டத்தால் தொட்டுக்கூட பார்க்கமுடியாது. வடமாநிலங்களில் நீங்கள் எளிதாக நுழைந்துவிடலாம். ஆனால் தமிழ்நாட்டில் நுழைந்துவிடலாம் என தப்பு கணக்கு போடூகிறீர்கள். ஏனெனில் தமிழ்நாட்டிற்கு என்று ஒரு தனித்துவம் உள்ளது.

நிகழ்ச்சியில்
பெரியார் எனும் கொள்கை நெருப்பு தமிழ்நாட்டை சுற்றிநின்று காப்பாற்றி கொண்டிருக்கிறது. 23 வயதிலேயே மிசா கொடுமையை கண்ட கட்சித் தலைவர் இன்று நம்மை வழிநடத்த இங்கு உள்ளார். பாஜக மதம்பிடித்து ஓடும் யானை என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் அந்த யானையை அடக்கக்கூடிய அங்குசம் இங்கு இருக்கக்கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இது மோடிக்கும் தெரியும், அமித்ஷாவுக்கும் தெரியும். அதனால்தான் நேராக வந்தால் ஜெயிக்க முடியாது என, பழைய அடிமைகளையும், புது புதுசா புது அடிமைகளையும் அழைச்சிக்கிட்டு நம்மோடு மோத பார்க்கிறார்கள்.
இன்று சிபிஐ, அமலாக்கத்துறை, வருவாய் துறை, தேர்தல் ஆணையம் என எல்லோருடனும் கூட்டு வைத்து தமிழ்நாட்டில் நுழையப் பார்க்கிறது பாஜக. இப்படிப்பட்ட பாஜகவை நம்பிதான் எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் களத்திற்கு வந்துள்ளார். ஆனால் நாம் தொண்டர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் நம்பி களத்திற்கு வந்துள்ளோம். நாம் தொடர்ந்து மக்களோடு உள்ளோம். அவர்களும் தொடர்ந்து நம்முடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்போம். 2026-ல் எடப்பாடியை முதலமைச்சராக்குவோம் என அடிமைகள் தீர்மானம் போட்டுள்ளனர். காரில் பேட்டரி போனால் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்யலாம். காரில் இன்ஜினே இல்லை என்றால் எவ்வளவு தள்ளினாலும் ஸ்டார்ட் ஆகாது. இன்ஜின் இல்லாத கார்தான் அதிமுக. எடப்பாடி எதை எதையோ காப்பாற்ற வேண்டும் எனக்கூறுகிறார். முதலில் அவர் அதிமுகவை பாஜகவிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.
அதிமுகவிலிருந்து நிறைய பேர் வெளியேறுகிறார்கள். ஆனால் அவர், யார் வேண்டுமானாலும் போகலாம், யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் நான்தான் நிரந்தர பொதுச்செயலாளர் என சொல்கிறார். அது அவருக்கும் மட்டும் தேவை இல்லை. நமக்கும் அதுதான் தேவை என்பதை நீங்கள் உணரவேண்டும். அடிமையாய் இருந்து சுகமாய் வாழ்வதைவிட, சுயமரியாதையோடு சுதந்திரமாக வாழவேண்டும். பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்கும் சக்தி திமுகவிற்கும் மட்டும்தான் உண்டு என தமிழ்நாட்டு மக்கள் நம்புகின்றனர். வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்கவேண்டும். யார் வேண்டுமானாலும் இடையில் வரட்டும், போகட்டும். அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. வானவில்லை பார்க்க மக்கள் கூடுவார்கள். ஆனால் அது நிரந்தரம் கிடையாது. உதய சூரியன் மட்டும்தான் நிரந்தரம்." எனப் பேசினார்.
- குடும்பத்தில் ஒருவர் குடிக்கு அடிமையாகும் நிலையில் தான் தமிழ்நாடு உள்ளது.
- தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் உள்ளிட்டவை மாறி விடிவு காலம் பிறக்க 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
* போதை கலாச்சாரத்தால் பள்ளி மாணவர்கள் சீரழிந்து வருகிறார்கள். இதை தடுக்க முதல்வர் முன்வரவில்லை.
* குடும்பத்தில் ஒருவர் குடிக்கு அடிமையாகும் நிலையில் தான் தமிழ்நாடு உள்ளது.
* தி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்ற செய்தி வேதனைக்கு ஆளாக்குகிறது.
* பள்ளியின் அருகிலேயே போதைப்பொருள் விற்பனை அதிகரித்த நிலையில் போதை கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது.
* போதை கலாச்சாரம் தலைவிரித்தாடும் நிலையில் சாதிய எண்ணங்களால் பள்ளி மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர்.
* தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் உள்ளிட்டவை மாறி விடிவு காலம் பிறக்க 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வேலைக்கான ஒப்பந்தங்கள் உள்ளிட்ட டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்பட்டு இருந்தது.
- ஊழல் 1,020 கோடி ரூபாய் வரை நடந்திருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு 1,020 கோடி ரூபாய் வரை நகராட்சி துறையில் ஊழல் செய்திருப்பதாகக் குற்றம்சாட்டி வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறை தமிழக தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது.
அமலாக்கத்துறையின் அக்கடிதத்தில், கே.என்.நேரு அமைச்சராக இருக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் கட்டட நிர்மாணம், கழிப்பறைகள் அமைத்தல், அவுட்சோர்சிங், NABARD (வேளாண்மை வங்கி மற்றும் கிராம வளர்ச்சி வங்கி) திட்டங்கள், தூய்மைப்பணியாளர்கள் பணிக்கான அவுட்சோர்சிங் ஒப்பந்தங்கள், தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்புத் திட்டங்கள், நீர்/குளம் வேலைக்கான ஒப்பந்தங்கள் உள்ளிட்ட டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்பட்டு இருந்தது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் முன்பே யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு டெண்டர்களுக்கும் 7.5% முதல் 10% வரை லஞ்சமாக வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த ஊழல் 1,020 கோடி ரூபாய் வரை நடந்திருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை வேலைக்கு பணம் பெற்றதாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின்படி அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை கடிதம் அனுப்பி உள்ளார்.
நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்துள்ளதாக டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை அனுப்பி உள்ள கடிதத்தை சுட்டிக்காட்டி அவர் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிந்து செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.






