என் மலர்
செய்திகள்

கதிராமங்கலத்தில் போராடியவர்கள் மீதான பொய் வழக்குகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும்: பழ.நெடுமாறன்
மயிலாடுதுறை:
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தந்தை மறைவிற்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் 23 ஆயிரம் ஹெக்டேரில் பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல் இதுபோன்ற திட்டங்களை அனுமதிப்பது அரசின் ஏதேச்சதிகாரப் போக்கை காட்டுகிறது.
இந்த திட்டத்தை கேரளா மற்றும் மேற்குவங்க அரசுகள் எதிர்த்ததால் அங்கே செயல்படுத்த முடியவில்லை. மத்திய அரசின் நிர்ப்பந்தத்திற்கு தமிழக முதலமைச்சர் அடிபணிந்துவிட்டார். நெடுவாசல், கதிராமங்கலம் கிராமங்களில் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெட்ரோ கெமிக்கல் திட்டத்தின் மூலம் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவும். காவிரி சமவெளிப்பகுதியை பாலைவனமாக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கதிராமங்கலத்தில் போராடியவர்கள் மீது ஒரே சம்பவத்துக்கு 2 பொய் வழக்குகளை போட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. உடனடியாக பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு இழுத்தடிப்பது காவிரி சமவெளிப்பகுதியை பாலைவனமாக்கி அதில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்றவற்றை எடுப்பதற்கான முயற்சியாகும். இதை எதிர்த்துப் போராடும் மக்களை அடக்கி ஒடுக்க நினைப்பது தவறு. எத்தனை அடக்குமுறை வந்தாலும் மக்கள் போராட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். காவிரி சமவெளிப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களும் பெட்ரோ கெமிக்கல் திட்டத்தையும், கதிராமங்கலம் நெடுவாசல் திட்டங்களை எதிர்த்துப் போராடவேண்டும்.
நீட் தேர்வு என்பது தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் திட்டமாகும். அகில இந்திய தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் வெளிமாநில மாணவர்களுக்கு தமிழக அரசு ரூ.30 லட்சம்வரை வரிப்பணத்தை செலவு செய்கிறது. தமிழக மக்களின் வரிப்பணம் வெளிமாநில மாணவர்களுக்கு செலவாகப் போகிறது. அவசரநிலை பிரகடனத்தின்போது மாநில பட்டியலில் இருந்த கல்வி மத்திய பட்டியலுக்கு மாறியது.

தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய நீட்தேர்வு ரத்து சட்டத்திற்கு இதுவரை ஜனாதிபதி ஒப்புதல் வழங்கவில்லை. 2-வது முறையும் இதேபோன்று அவசர சட்டம் போட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பவேண்டும், அதற்கும் ஒப்புதல் கிடைக்கவில்லை என்றால் 3-வது முறை அவசர சட்டம் இயற்றினால் அதுவே சட்டமாகிவிடும். இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் தேவையில்லை. இதுதான் அரசியல் சாசன சட்டம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது தமிழர் தேசிய முன்னணி மாவட்ட அமைப்பாளர் பேராசிரியர் முரளிதரன், வழக்கறிஞர் வேலு.குபேந்திரன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை செயற்குழு உறுப்பினர் சித்ரா ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.






