என் மலர்
செய்திகள்

பேரளம் அருகே விபத்து: டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 மாணவர்கள் பலி
பேரளம்:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த தினகரன் மகன் அருண்(வயது17). எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த பாபு மகன் பரதன்(18). பேரளம் அருகே அண்டக்குடியை சேர்ந்த செல்வம் மகன் அபிஷேக்(18). இவர்கள் 3 பேரும் பிளஸ் 2 படித்து முடித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பேரளத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்றனர். கடுவங்குடி அருகே சென்றபோது பொதக்குடியை சேர்ந்த சாமிநாதன்(38) என்பவர் மோட்டார் சைக்கிளில் எதிரே வந்துள்ளார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.
மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையின் வலதுபுறம் விழுந்த அருண், பரதன் ஆகிய 2 பேர் மீது அவ்வழியே வந்த டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
மேலும் சாலையின் மறுபுறம் விழுந்த அபிஷேக்கும், சாமிநாதனும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் விபத்து குறித்து பேரளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த அபிஷேக், சாமிநாதன் ஆகிய 2 பேரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து விபத்தில் பலியான அருண், பரதன் ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்தில் 2 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






