என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேளாங்கண்ணியில் குடும்ப தகராறு காரணமாக எலி மருந்தை தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் வாசிச நகர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன். இவரது மனைவி இந்திரா (வயது 40). இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த இந்திரா கடந்த 7-ந் தேதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கு வந்து உள்ளார். அப்போது இந்திரா, எலி மருந்தை வி‌ஷம் தின்று விட்டு தனது ஊருக்கு திரும்பி சென்று உள்ளனர். அங்கு வீட்டுக்கு சென்றதும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உள்ளது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகை அருகே 2 வீடுகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

    நாகப்பட்டினம்:

    நாகையை அடுத்த பாப்பா கோவில் அருகே 50-க்கும் மேற்பட்டவர்கள் கூரை வீடுகளில் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவர் நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.

    இந்த நிலையில் அவரது கூரை வீட்டில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ அருகில் உள்ள மதியழகன் வீட்டிற்கும் பரவியது.

    இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைக்க முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை தீயணைப்புபடை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருந்தபோதிலும் 2 வீடுகளிலும் இருந்த துணிகள், மின்விசிறி உள்ளிட்ட ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இதுபற்றி நாகை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் தெற்காலத்தூரில் சாராய விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீசார் அங்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சாராயம் விற்றுக்கொண்டிருந்த பெண் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர் அதில் அவர் நாகை வெளிப்பாளையம் நல்லியான்தோட்டத்தை சேர்ந்த முத்துலட்சுமி (வயது 36) என்பதும் இவர் காரைக்காலில் இருந்து கடத்தி வந்து சாராய விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துலட்சுமியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    நாகை அருகே தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சத்தால் கிராம மக்கள் ஊற்றுத்தோண்டி கலங்கலாக வரும் தண்ணீரை பிடித்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பருவ மழை இல்லாததால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கோடை காலத்தில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைமையை சமாளிக்க லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

    மேலும் காலிக் குடங்களுடன் பெண்கள் வீதிக்கு வந்து போராடும் நிலையும் ஏற்பட்டது. குடிநீர் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு கட்சியினர் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை தஞ்சை, நாகை. திருவாரூரில் கிராமப்புற பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் குளத்தில் ஊற்றுத்தோண்டி சுகாதாரமற்ற முறையில் கலங்கலாக வரும் நீரை குடித்து வருகின்றனர்.

    குறிப்பாக கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் கிராமப்புற மக்களின் நிலை படு மோசமாக உள்ளது. கீழையூர் ஒன்றியம் காரப்பிடாகை கிராமத்தில் உள்ள அனைத்து குளங்களும் வறண்டு போனதால் தண்ணீர் பஞ்சத்தில் அந்த பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். அப்பகுதியில் தெற்கு தெருவில் உள்ள வறண்டு கிடக்கும் அய்யனார் கோவில் குளத்தில் ஊற்றுத்தோண்டி அதில் சுரக்கும் கலங்கலான தண்ணீரை குடித்து வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் தெரு குழாய்கள் மண்ணுக்குள் புதைந்து விட்டது. வறண்டு போய் உள்ள கோவில் குளத்தில் ஊற்றுத்தோண்டி அதில் வரும் நீரை பயன்படுத்தி வருகிறோம். இந்த நீர் கலங்கலாக கருப்பு நிறத்தில் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் கைப்பம்பு, தெருக்குழாய் அமைக்கப்படவில்லை.

    ஊற்று தண்ணீரை குடிப்பதால் பல நேரங்களில் அடிக்கடி தலைவலி, வாந்தி, போன்ற பிரச்சினையால் அவதிப்படுகிறோம். சுமார் ஒருகிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஊற்றுத்தண்ணீரை பிடிக்க வேண்டியுள்ளது. இதனால் வயல்வேலைகளுக்கு செல்ல முடிவதில்லை.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் முக்கிய பகுதிகளில் மட்டுமே லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப் படுகிறது. கடைமடைப்பகுதியில் உள்ள எங்கள் கிராமத்துக்கு குடிநீர் வினியோகம் குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    நாகையில் ஆட்டோ டிரைவர் வீட்டுக்கு மர்ம கும்பல் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை ஆரிய நாட்டு தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் மணிமாறன் (வயது46) இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மணிமாறன் தனது அவரது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர் வீட்டு பின்புறமாக சென்று வீட்டை தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    வீடு தீப்பிடித்து எரிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் மணிமாறன் வீட்டின் கதவை தட்டினர். இதனால் கண்விழிந்து எழுந்த மணிமாறன், வீடு தீப்பிடித்து எரிவதை கண்டு திடுக்கிட்டார். உடனே அவர் தனது மனைவி இளவரசி, மகள் மம்தா, மற்றும் மகன்கள் மாதவன் பவித்திரன் ஆகியோர் அலறிக் கொண்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர்.

    இதையடுத்து நாகை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் தீ பரவி அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் நாசமானது. இந்த தீ விபத்தில் சேதமதிப்பு குறித்து உடனடியாக தெரிய விலலை.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர்.

    ஆட்டோ டிரைவர் மணிமாறன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து வீட்டை தீ வைத்து தப்பித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    குத்தாலம் அருகே குடும்ப பிரச்சினையால் குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    குத்தாலம்: 

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே வானாதிராஜபுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி அபிராமி (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. 1½ வயதில் தனஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த புருஷோத்தமன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் வெளிநாட்டிற்கு சென்று விட்டார். அபிராமி, தனது மாமியார், மாமனாருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக அபிராமியிடம் அவரது மாமியார் மற்றும் அருகில் உள்ள உறவினர்கள் பேசுவதில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த அபிராமி நேற்று முன்தினம் தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். முன்னதாக வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) தனது மகள் தனஸ்ரீக்கு கொடுத்துள்ளார். உடனே குழந்தை வாந்தி எடுத்துள்ளது.

    இதுகுறித்து குடும்பத்தினர் கேட்டபோது, குழந்தைக்கு விஷம் கொடுத்ததை தெரிவித்தார். உடனே குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் குழந்தையை தூக்கி கொண்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். அங்கு தனஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் வீட்டில் இருந்த அபிராமி தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குழந்தை தனஸ்ரீயை மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அபிராமி வரவில்லையே என்று அவரது உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு அபிராமி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அபிராமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து அபிராமியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக அபிராமியின் தாய் நிர்மலா(45) கொடுத்த புகாரின்பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அபிராமிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் கண்மணி விசாரணை நடத்தி வருகிறார்.
    நாகூரில் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகையை அடுத்த நாகூர் யூசுப்பியா நகரை சேர்ந்த ஹாஜாமைதீன் (வயது 40) இவரது வீட்டில் 24 வயதுடைய உறவுக்கார பெண் ஒருவர் தங்கியிருந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 4 பேர் கும்பல் ஹாஜாமெய்தீன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரது உறவுக்காரப் பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கி கடத்தி சென்று விட்டனர்.

    இதனை தடுக்க முயன்ற ஹாஜா மைதீன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஹாஜாமெய்தீன் நாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை கடத்தி சென்ற 4 பேரை தேடி வந்தனர்.

    அப்போது மியான் தெருவில் நின்று கொண்டிருந்த முகமது தாரிக் (19) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் முகமது தாரிக் மற்றும் 3 பேர் சேர்ந்து பெண்ணை தூக்கி சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் முகமது தாரிக்கை கைது செய்தனர்.

    தற்போது கடத்தி செல்லப்பட்ட இளம்பெண் எங்கு இருக்கிறார்? என்று போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். தலைமறைவாக இருந்து வரும் 3 வாலிபர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
    வேளாங்கண்ணி லாட்ஜில் மனைவியுடன் சேர்ந்து கள்ளக்காதலியை தீர்த்துக்கட்டிய கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் தண்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருளானந்தம். இவர் கடந்த 25-ந்தேதி தனது மனைவி சுமதி மற்றும் மற்றொரு பெண்ணுடன் நாகை மாவட்டம் வேளாங் கண்ணிக்கு வந்து ஒரு விடுதியில் தங்கியிருந்தார்.

    இந்நிலையில 27-ந் தேதி அருளானந்தம் தங்கியிருந்த அறை நீண்டநேரமாக பூட்டி கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த விடுதி மேலாளர், வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அறை பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அங்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அருளானந்தமும், அவரது மனைவியும் அவர்களுடன் தங்கியிருந்த பெண்ணை கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கொலையுண்ட பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் கொலையுண்ட பெண் தஞ்சையை சேர்ந்த கவிதா (வயது43) என்று தெரியவந்தது.

    மேலும் அருளானந்ததுக்கும், கவிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. இதனால் அவ்வப்போது கவிதாவுடன் அருளானந்தம் உல்லாசமாக இருந்து வந்தார். இதை பயன்படுத்தி கவிதா, அருளானந்ததிடம் பணம் வாங்கி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் அருளானந்தம் விரக்தி அடைந்தார்.

    இதையடுத்து கவிதாவுடன் கள்ளத்தொடர்பு இருப்பது குறித்தும், பணம் கேட்டு மிரட்டுவது பற்றியும் அருளானந்தம் தனது மனைவி சுமதியிடம் தெரிவித்தார். இதனால் கணவன்- மனைவி இருவரும் கவிதாவை தீர்த்து கட்ட முடிவு செய்தனர்.

    அதன்படி கடந்த 27-ந் தேதி கவிதாவை நைசாக பேசி அழைத்து கொண்டு கணவன்- மனைவி இருவரும் வேளாங்கண்ணி லாட்ஜிக்கு கூட்டி சென்றனர். அங்கு வைத்து கவிதா, ரூ.1 லட்சம் கொடுத்தால் விலகி சென்று விடுவதாக தெரிவித்தார். இதை கேட்டு கணவன்- மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அருளானந்தம் மற்றும் அவரது மனைவி சுமதி ஆகியோர் திடீரென கவிதாவை தாக்கினர்.

                                                                              சுமதி 

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கவிதா, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். கவிதா இறந்ததால் கணவன்- மனைவி இருவரும் அறையை பூட்டி விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

    இந்த வழக்கு தொடர்பாக அருளானந்தம், சுமதி ஆகியோரை போலீசார் தேடினர். இந்த நிலையில் சோழிங்கநல்லூரில் இருந்த சுமதியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வரும் சுமதியின் கணவர் அருளானந்தத்தை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    சீர்காழி அருகே வீட்டின் பீரோவை உடைத்து ரூ.2 லட்சம்-5 பவுன் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கடவாசல் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 56). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஊருக்கு வந்தார்.

    இந்த நிலையில் மாரியப்பன் தனது குடும்பத்தினருடன் மேல்மருவத்தூருக்கு சென்று விட்டு நேற்று மாலை வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு மாரியப்பன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டில் இருந்த 2 பீரோக்களையும் உடைத்து அதில் இருந்த ரூ.2 லட்சம் ரொக்கம், மற்றும் 5 பவுன் நகை , வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போய் இருந்தது தெரிய வந்தது.

    பூட்டி கிடந்த வீட்டை நோட்டமிட்டு மர்ம கும்பல் பணம், நகையை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

    இந்த கொள்ளை சம்பவம் பற்றி புதுப்பட்டினம் போலீசில் மாரியப்பன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகிறார்கள்.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளையாட்டுப் பிள்ளை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கிண்டலாக கூறினார்.
    நாகை:

    சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், சட்டசபை கூடியதும், அந்த தீர்மானத்தில் இருந்து திமுக பின்வாங்கியது.

    முக ஸ்டாலின்

    இதுபற்றி நாகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளையாட்டுப் பிள்ளை; எதை, எப்போது, எப்படி செய்ய வேண்டும் என அறியாதவர்” என கூறினார்.

    இதேபோல் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், திருவிழாவில் திசைமாறிய பிள்ளைகள் திரும்பி வர வெட்கப்பட்டு திமுக பக்கம் செல்கின்றனர், என்றார்.
    பணத்தை திருடியதை காட்டிக் கொடுத்த அக்காள் மகனை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் நிர்த்தன மங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஜிம்மி கார்டர். இவரது மனைவி உஷா. இவரது மகன்கள் ராபர்ட் (12), ராபின், உஷாவின் தம்பி அந்தோணி சிறுவயது முதல் தனது அக்கா வீட்டில் வளர்ந்து வந்தார். 

    கடந்த 2012-ம் ஆண்டு சாராயம் விற்ற வழக்கில் உஷா கைது செய்யப்பட்டு திருவாரூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் வீட்டில் வைத்திருந்த 10 ஆயிரத்தை காணவில்லை என்று கடந்த 2012-ம் ஆண்டு ஜுலை மாதம் 24-ம் தேதி ஜிம்மி கார்டர் தேடினார். அப்போது பணத்தை அந்தோணி எடுத்தார் என்று ராபர்ட் கூறினார். இதனால் அந்தோணி ஆத்திரம் அடைந்தார்.  அன்றைய தினம் இரவு தூங்குவதற்காக அந்தோணி ராபர்ட், ராபின்ஆகிய 3 பேரும் சென்றனர். அப்போது ராபர்ட் கழுத்தை நெரித்து அந்தோணி கொலை செய்தார். 

    இதை ராபின் பார்த்து விட்டார். உடனே நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் உன்னையும் கொன்று விடுவேன் என அந்தோணி மிரட்டி உள்ளார். ஆனால் இந்த சம்பவம் குறித்து ராபின் தனது தந்தையிடம் கூறினார். 

    இதுபற்றி ஜிம்மி கார்டர் வேளாங்கண்ணி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணியை கைது செய்தனர். இந்த வழக்கு நாகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது வழக்கை நீதிபதி பத்மநாபன் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தார். அவர் சிறுவனை கொலை செய்த அந்தோணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும், அதனை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகையில் 300-க்கும் மேற்பட்ட விதவை பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். நாடாளு மன்றத்திலும் சட்டப் பேரவையிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட விதவைப் பெண்கள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், விதவை பெண்கள் பாகுபாடு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், விதவைகளுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையினை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். 

    மேலும் விதவைப் பெண்களின் கோரிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும், விவசாய தொழில் செய்யும் விதவைப் பெண்களுக்கு குறைந்தது 2 ஏக்கர் நிலம் அரசு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×