search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊற்றுத்தோண்டி கலங்கலாக வரும் தண்ணீரை பிடிக்கும் கிராம மக்கள்.
    X
    ஊற்றுத்தோண்டி கலங்கலாக வரும் தண்ணீரை பிடிக்கும் கிராம மக்கள்.

    நாகை அருகே ஊற்றுத்தோண்டி கலங்கலாக வரும் தண்ணீரை பிடிக்கும் பெண்கள்

    நாகை அருகே தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சத்தால் கிராம மக்கள் ஊற்றுத்தோண்டி கலங்கலாக வரும் தண்ணீரை பிடித்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பருவ மழை இல்லாததால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கோடை காலத்தில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைமையை சமாளிக்க லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

    மேலும் காலிக் குடங்களுடன் பெண்கள் வீதிக்கு வந்து போராடும் நிலையும் ஏற்பட்டது. குடிநீர் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு கட்சியினர் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை தஞ்சை, நாகை. திருவாரூரில் கிராமப்புற பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் குளத்தில் ஊற்றுத்தோண்டி சுகாதாரமற்ற முறையில் கலங்கலாக வரும் நீரை குடித்து வருகின்றனர்.

    குறிப்பாக கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் கிராமப்புற மக்களின் நிலை படு மோசமாக உள்ளது. கீழையூர் ஒன்றியம் காரப்பிடாகை கிராமத்தில் உள்ள அனைத்து குளங்களும் வறண்டு போனதால் தண்ணீர் பஞ்சத்தில் அந்த பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். அப்பகுதியில் தெற்கு தெருவில் உள்ள வறண்டு கிடக்கும் அய்யனார் கோவில் குளத்தில் ஊற்றுத்தோண்டி அதில் சுரக்கும் கலங்கலான தண்ணீரை குடித்து வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் தெரு குழாய்கள் மண்ணுக்குள் புதைந்து விட்டது. வறண்டு போய் உள்ள கோவில் குளத்தில் ஊற்றுத்தோண்டி அதில் வரும் நீரை பயன்படுத்தி வருகிறோம். இந்த நீர் கலங்கலாக கருப்பு நிறத்தில் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் கைப்பம்பு, தெருக்குழாய் அமைக்கப்படவில்லை.

    ஊற்று தண்ணீரை குடிப்பதால் பல நேரங்களில் அடிக்கடி தலைவலி, வாந்தி, போன்ற பிரச்சினையால் அவதிப்படுகிறோம். சுமார் ஒருகிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஊற்றுத்தண்ணீரை பிடிக்க வேண்டியுள்ளது. இதனால் வயல்வேலைகளுக்கு செல்ல முடிவதில்லை.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் முக்கிய பகுதிகளில் மட்டுமே லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப் படுகிறது. கடைமடைப்பகுதியில் உள்ள எங்கள் கிராமத்துக்கு குடிநீர் வினியோகம் குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×