என் மலர்
ஈரோடு
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அவர் ஈரோட்டில் பல்வேறு பகுதியில் மக்களை சந்தித்து பேசி வருகிறார்.
அதன்படி டி.டி.வி. தினகரன் ஈரோடு மரப்பாலம் நால்ரோடு பகுதிக்கு வந்துபொது மக்களை சந்தித்துபேசினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,-

தமிழகத்தில் முன்னேற்றம் தேவை. கல்வி, வேலை வாய்ப்பை பெற நீங்கள் (மக்கள்) அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #TTVDinakaran #AMMK
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள மேட்டூரில் இ.காங்கிரஸ் சார்பில் பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
இதில் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தீவிரவாதத்தை ஒழிப்போம் என ஆட்சிக்கு வந்த பா.ஜனதாவினர் இந்திய வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளனர். ஆனால் இந்த பணம் ஏழை மக்களுக்கு போய் சேராது.
அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களுக்கு வழங்க பயனாளிகள் பட்டியல் தயாராவதாக கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனியாக போட்டியிட்டால் டெபாசீட் வாங்க வாய்ப்புள்ளது. ஆனால் பா.ஜனதாவுடன் சேர்ந்து போட்டியிட்டால் டெபாசீட் கூட கிடைக்காது.
தமிழகத்தில் பாரதிய ஜனதாவுக்கு என வாக்கு வங்கியே கிடையாது. தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. இதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியும் டெல்லி சென்றுள்ளார். கூட்டணி குறித்து நல்ல தகவல் வெளியாகும்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார். #Congress #Elangovan
சென்னிமலை:
சென்னிமலை காங்கயம் மெயின் ரோட்டில் சிமென்ட் பாரம் ஏற்றி வந்த லாரியில் இரு சக்கர வாகனத்தில் மோதிய கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரளா மாநிலம், ஆழப்புழா, சேர்தலா பகவதிபரம்பல் ஊரை சார்ந்தவர் ஹாஜி இவரது மகன் ஆனந்த் வயது (21), பெருந்துறை அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக் பிரிவில் இறுதியாண்டு படித்து வந்தார்.
இன்றும் நாளையும் கல்லூரி விடுமுறை என்பதால் 4 இரு சக்கர வாகனங்களில் 8 மாணவர்கள் கொடைக்கானல் சுற்றுலாவிற்காக சென்று கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை சென்னிமலை பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.ஒரு வாகனத்தில் ஆனந்த் ஹெல்மெட் அணிந்து ஓட்டி வந்தார். அப்போது சிமெண்ட் பாரம் ஏற்றிய லாரி காங்கயம் நோக்கி சென்று கொண்டிருந்தது.தெற்கு ராஜ வீதி வளைவில் வந்து மெயின் சாலையில் திரும்பும்போது ஆனந்த் தடுமாறி லாரியின் சக்கரத்தில் மோதி கீழே விழுந்தார்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். வரும் வழியில் பரிதாபமாக ஆனந்த் உயிரிழந்தார்.
இன்னும் கல்லூரி படிப்பு முடிக்க சில மாதங்களே உள்ள நிலையில் விபத்தில் மாணவர் பலியானது கல்லூரி மாவணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபி:
கோபி அருகே உள்ள காசிபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
காசிபாளையம் பேரூராட்சியில் 300 நபர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே பேரூராட்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப்பணிகள் நடை பெறுகிறது.
கோபி குடிநீர் திட்டத்திற்கு சுமார் ரூ.53 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதானால் நாள் தோறும் தடையற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
கோபி நகராட்சி மத்தியில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கை அகற்றவேண்டும் என நீண்டநாட்களாக புகார் வந்துள்ளது. இதற்காக ரூ.62.20 லட்சம் செலவில் புதிய எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. விரைவில் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெறும்.
பள்ளி கல்வித்துறை சார்பில் 1.50 கோடி மரக் கன்றுகள் நட்டு மாணவர்களே பராமரிக்கும் திட்டம் விரைவில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
8,9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசின் 25 சதவிகித பங்குத் தொகையுடன் மத்திய அரசு ஸ்மார்ட் மடிக்கனிணிகள் இந்த மாதம் இறுதிக்குள் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தாண்டு பொதுத் தேர்வுக்கு புதிதாக 750 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேள்வித்தாளில் எப்படி விடையளிக்க வேண்டும் என்றும் அதற்குறிய மதிப் பெண்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது என்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளிலும் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஓராண்டிற்கு பிறகு தமிழக கல்வித்துறை இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே வழிகாட்டியாக திகழும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
கோபி:
ஈரோடு மாவட்டத்தில் அமமுக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசி வருகிறார்.
கோபி எம்.ஜி.ஆர். சிலை அருகே டி.டி.வி.தினகரன் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் சிலர் செய்த சதியால் சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. அப்போதும் ஜெயலலிதாவின் கட்சி காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக கொங்கு மண்டலத்தை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினோம்.
அப்போது நான் கூட நினைத்திருந்தால் தமிழக முதல்வராகியிருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. தற்போது துணை முதல்வராக உள்ள பன்னீர்செல்வம் உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வது போலும், யாருக்கோ ஏஜெண்டாகவும் செயல்பட்டு வருகிறார்.
அதிமுக ஆட்சிக்கு எதிராக பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இன்று அவர் துணை முதல்வராக உள்ளார். பசுந்தோல் போர்த்திய புலியாக மாறியுள்ளார்.
அதே நேரத்தில் எனக்கு ஆதரவு அளித்த 18 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்தனர். 1972-ம் ஆண்டு திமுகவில் இருந்து வெளியே வந்து அதிமுகவை எம்.ஜி.ஆர். துவக்கினார். அதே போல் நான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை துவங்கியுள்ளேன். தற்போது தமிழ்நாட்டில் கிளைகள் இல்லாத இடமே இல்லை என்று கூறும் அளவிற்கு அமமுக வளர்ச்சியடைந்துள்ளது.
இரட்டை இலை சின்னத்தை வைத்து கொண்டு ஆர்.கே. நகர் தொகுதியில் கூட இவர்களால் வெற்றி பெற முடியவில்லை. கோபியில் இருப்பவருக்கு (கே.ஏ.செங்கோட்டையன்) அமைச்சர் பதவி யாரால் கிடைத்தது என்று நான் சொல்ல வேண்டியதில்லை. அது உங்களுக்கே தெரியும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்று கூறிய நீட் தேர்வு, கெயில் திட்டம், மீத்தேன் எரிவாயு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.
எனவே வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் துரோகிகளுக்கு நல்ல பாடம் புகட்டும் வகையில் அமமுக கட்சி வேட்பாளராக யார் நிறுத்தப்பட்டாலும் அவர்களுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த வெற்றியின் அடிப்படையில் நாம் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் எம்.ஜி.ஆர். சிலைக்கு தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். #Parliamentelection #TTVDhinakaran
சென்னிமலை அருகே உள்ள முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட மேற்கு தலவுமலை, சல்லிமேடு, அம்மன்கோவில், கே.சி., வலசு சுற்றுவட்டார பகுதியில் திடீரென மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
இதில் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு கால் மூட்டுகள் வீங்கி அதிக வலி வருகிறது.
இதனால் காய்ச்சல் ஏற்பட்டவர்கள் வீட்டில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த பகுதிகளில் பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத் துறையினர் கடந்த 3 நாட்களாக தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தியும் கொசு மருந்தடித்தும் சாக்கடைகளை சுத்தப்படுத்தியும் வருகிறார்கள். இருந்தாலும் காய்ச்சல் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு பரவி வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் விவசாயம் மற்றும் நெசவு சார்ந்த கூலித் தொழிலாளர்கள். அவர்கள் காய்ச்சலால் சிகிச்சைக்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் சென்னிமலை, அரச்சலூர், நத்தக்கடையூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தஞ்சம் அடைகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு அதிக செலவு செய்வதாலும் வேலைக்கு செல்லாமல் முடக்கி விடுவதாலும் ஏழை கூலிகளும், நடுத்தர விவசாய மக்களும் பொருளாதர ரீதியாக பாதிப்படைகிறார்கள்.
எனவே மாவட்ட சுகாதாரத்துறை காய்ச்சல் கட்டுப்படும் வரை இந்த பகுதிகளில் சிறப்பு சிகிச்சை முகாம் அமைத்து மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை ஈரோடு மாவட்டத்தில் நடத்தி வருகிறார். அதன்படி அவர் நேற்று இரவு அந்தியூருக்கு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் திறந்த வேனில் நின்றபடி பேசினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
அந்தியூர் அருகே உள்ள மணியாச்சி ஓடைநீரை வரட்டுப்பள்ளம் அணை உள்பட 7 ஏரிகளுக்கு கொண்டுவரவேண்டும். பர்கூர் மலைப்பகுதியின் மேற்கு பகுதியில் உள்ள மலைக்கிராமங்களுக்கு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும். மேட்டூர் வலதுகரை வாய்க்கால் உபரிநீரை அந்தியூர் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு வரவேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் என்னிடம் தெரிவித்து உள்ளனர். அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அந்தியூர் பகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் குடிநீர் பிரச்சினை உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளாமல் தண்ணீரை அரசு வீண் செய்கிறது. இதனால் தான் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. மழைநீரை சேமிக்க நடவடிக்கை மேற்கொண்டால் நாம் கர்நாடக மாநிலத்தில் தண்ணீருக்கு கை ஏந்த வேண்டிய நிலை இருக்காது.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் தங்களுடைய குறைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்தினர். அவர்களை அழைத்து பேசாமல் அதிகாரத்தில் உள்ளவர்கள் மிரட்டி வருகிறார்கள். தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் அவற்றை அரசு கண்டு கொள்வதில்லை. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். எனவே எப்போது பாராளுமன்ற தேர்தல் வந்தாலும் தமிழ்நாட்டில் அ.ம.மு.க. வெற்றி பெறும்.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.
இதேபோல் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை வாரச்சந்தையில் நடந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார். #Dinakaran #Parliamentelection #AMMK
ஈரோடு, வேப்பம்பாளையத்தை சேர்ந்தவர் நல்லமுத்து (வயது60). ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.
நல்லமுத்து நேற்று இரவு தனது மொபட்டியில் பெருந்துறை ரோடு, புதுகாலனி பிரிவு அருகே வந்து கொண்டிருந்தார். பின்னர் சாலையை கடக்க முயன்ற போது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராத வகையில் நல்லசாமி ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நல்லமுத்துவை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நல்லமுத்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தையொட்டி காதலர்கள் ஒருவருக்கொருவர் நினைவு பரிசுகளை கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொண்டனர்.
இந்த காதலர் தினத்துக்கு இந்து முன்னணி சார்பில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பல்வேறு நூதனப்போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு காதலர் தினத்தன்று ஏராளமான காதலர்கள் ஜோடி-ஜோடியாக வருவார்கள்.
அவர்களை தடுக்கும் வகையில் கொடிவேரி அணையில் நுழைவு பகுதியில் இன்று காலை இந்து முன்னணியினர் சிலர் வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் ஒரு ஆட்டுக்கும்- நாய்க்கும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன திருமணத்தை நடத்தி வைத்தனர். அப்போது அவர்கள் “காதலர் தினத்தை வெறுப்போம் காதலர்களை விரட்டுவோம்”என்று கோஷமிட்டனர்.
இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்து முன்னணியினரின் போராட்டத்தால் கொடிவேரி அணைக்கு வந்த காதல் ஜோடியினர் ஜகா வாங்கினர். அவர்கள் சென்ற பிறகு இரு சக்கர வாகனங்களில் கொடிவேரி அணைக்கு சென்றனர். காதல் மொழி பேசி மகிழ்ந்தனர். #ValentinesDay
ஈரோடு:
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தேர்தல் களைகட்டி உள்ளது. வரும் தேர்தலில் தமிழகத்தில் வலுவாக கால் ஊன்ற வேண்டும் என பாரதிய ஜனதாகட்சி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கொங்க மண்டலத்தை மையப்படுத்தி பாரதிய ஜனதா காய்நகர்த்தி வருகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி திருப்பூர் பெருமாநல்லூரில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
இதை தொடர்ந்து பா. ஜனதாவின் தலைவர் அமித்ஷா கொங்கு மண்டலம் வரதிட்டமிட்டார். அதன்படி இன்று (வியாழக்கிழமை) அமித்ஷா சென்னை வந்து அங்கிருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.
கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈரோட்டுக்கு புறப்பட்டார். ஈரோடு சித்தோடு அடுத்த கங்காபுரம் டெக்ஸ்வேலி மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்கியது.
அங்கு அமித்ஷா கொங்கு மண்டலத்தை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் மற்றும் முக்கிய நெசவாளர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது நெசவாளர்களின் பிரச்சினை அவர்களின் முக்கிய கோரிக்கை குறித்து கேட்டறிந்தார்.
அமித்ஷாவிடம் நெசவாளர் பிரதிநிதிகள் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். அதை கேட்டு கொண்ட அமித்ஷா பரிசீலிப்பதாக கூறினார்.
இதனை தொடர்ந்து ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் ஆகிய 4 பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை அமித்ஷா சந்தித்து பேசினார். அப்போது வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டமும் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா, வெற்றிக்கான வியூகங்களை பொறுப்பாளர்களுக்கு எடுத்து கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை, பொதுச்செயலாளர் முரளிதரராவ், மாநில தேர்தல் பொறுப்பாளர் சி.பி.ரவி, தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், மற்றும் வானதி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். #AmitShah #bjp #parliamentelection
ஈரோடு:
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களையும் உதவிகளையும் செய்து வருகிறது. பிரதமர் மோடி தொடர்ந்து தமிழகத்துக்கு வந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா, திருப்பூரில் மெட்ரோ ரெயில் திட்டம், ஈ.எஸ்.ஐ.ஆஸ்பத்திரி திட்டங்களை தொடங்கி வைத்து உள்ளார்.
பிரதமரை தொடர்ந்து தேசிய தலைவர் அமித்ஷா ஈரோடு வர உள்ளார். தொடர்ந்து மத்திய மந்திரிகள் மூத்த தலைவர்கள் தமிழகத்துக்கு வர உள்ளனர். இதனால் பாரதிய ஜனதா தொண்டர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராணுவ மந்திரியும் நானும் அங்கேயே 3 நாட்கள் தங்கி தேவையான உதவிகளை செய்து வந்தோம்.

வைகோ தமிழகத்துக்கு என்ன நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும் எதிர்க்கிறார். அவர் பிரதமர் வரும்போது கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபடுவது வெற்று போராட்டம் ஆகும். அந்த போராட்டம் ஊர்ந்து போகும் யானையின் பலத்தை சுண்டெலியால் தடுத்து விட முடியாது.
முதல்வர் ஏழை குடும்பத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் அறிவித்தது நல்ல திட்டம் அதை வரவேற்கிறேன். தமிழக முதல்வர் மக்களுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
கூட்டணி பற்றி பேசி வருகிறோம். விரைவில் நல்ல முடிவு வரும். எங்களுக்கு பொதுவான எதிரி தி.மு.க.வும் காங்கிரசும் தான் தமிழகத்தை பொருத்தவரை பலமான பிரம்மாண்டமான கூட்டணி அமைத்து வருகிறோம். தேர்தலில் வெற்றி பெறுவோம்.
பாரதீய ஜனதாவுக்கு இந்தியா முழுவதும் செல்வாக்கு அதிகரித்து உள்ளது. ஒரு எதிர்கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று கூறி உள்ளார். இதன் மூலம் மோடியின் செல்வாக்கு அதிகரித்து உள்ளதை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு தமிழிசை கூறினார். #tamilisai #bjp #pmmodi #parliamentelection
சத்தியமங்கலம்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஏழை தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு தலா 2 ஆயிரம் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இது தவறில்லை ஆனால் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன்?
விவசாய விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு எங்கள் கட்சி ஆதரவு அளிக்கும். நாங்கள் எப்போதும் விவசாயிகளின் நண்பனாகவே இருப்போம்.
பட்ஜெட்டில் தூர்வார 300 கோடி ஒதுக்கி இருப்பதாக கூறுகிறார்கள். மேட்டூர் அணை நீர் கடலில் கலந்ததுதான் மிச்சம். ஜெயலலிதா எந்தெந்த திட்டங்களை எதிர்த்தாரோ..அதையெல்லாம் இந்த அரசு ஆதரிக்கிறது.
வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெறுவோம் என்ற கனவில் மிதக்கிறார்கள். அவர்களால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் கொஞ்சம்.. கொஞ்சமாக நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

திருவாரூர் சட்டசபை தொகுதி இடை தேர்தலில் ஒன்றிய செயலாளரை தான் அவர் போட்டியிட முடிவு செய்தார். இதனால் அவர் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்.
இவ்வாறு தினகரன் கூறினார். #dinakaran #parliamentelection #admk #mkstalin






