search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "double leaf icon"

    பாராளுமன்ற தேர்தல் வெற்றி மூலம் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் என்று அமமுக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #Parliamentelection #TTVDhinakaran

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் அமமுக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசி வருகிறார்.

    கோபி எம்.ஜி.ஆர். சிலை அருகே டி.டி.வி.தினகரன் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் சிலர் செய்த சதியால் சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. அப்போதும் ஜெயலலிதாவின் கட்சி காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக கொங்கு மண்டலத்தை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினோம்.

    அப்போது நான் கூட நினைத்திருந்தால் தமிழக முதல்வராகியிருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. தற்போது துணை முதல்வராக உள்ள பன்னீர்செல்வம் உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வது போலும், யாருக்கோ ஏஜெண்டாகவும் செயல்பட்டு வருகிறார்.

    அதிமுக ஆட்சிக்கு எதிராக பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இன்று அவர் துணை முதல்வராக உள்ளார். பசுந்தோல் போர்த்திய புலியாக மாறியுள்ளார்.

    அதே நேரத்தில் எனக்கு ஆதரவு அளித்த 18 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்தனர். 1972-ம் ஆண்டு திமுகவில் இருந்து வெளியே வந்து அதிமுகவை எம்.ஜி.ஆர். துவக்கினார். அதே போல் நான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை துவங்கியுள்ளேன். தற்போது தமிழ்நாட்டில் கிளைகள் இல்லாத இடமே இல்லை என்று கூறும் அளவிற்கு அமமுக வளர்ச்சியடைந்துள்ளது.

    இரட்டை இலை சின்னத்தை வைத்து கொண்டு ஆர்.கே. நகர் தொகுதியில் கூட இவர்களால் வெற்றி பெற முடியவில்லை. கோபியில் இருப்பவருக்கு (கே.ஏ.செங்கோட்டையன்) அமைச்சர் பதவி யாரால் கிடைத்தது என்று நான் சொல்ல வேண்டியதில்லை. அது உங்களுக்கே தெரியும்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்று கூறிய நீட் தேர்வு, கெயில் திட்டம், மீத்தேன் எரிவாயு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.

    எனவே வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் துரோகிகளுக்கு நல்ல பாடம் புகட்டும் வகையில் அமமுக கட்சி வேட்பாளராக யார் நிறுத்தப்பட்டாலும் அவர்களுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த வெற்றியின் அடிப்படையில் நாம் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் எம்.ஜி.ஆர். சிலைக்கு தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். #Parliamentelection #TTVDhinakaran

    ×